Thursday, November 28, 2013

நித்ரா - 8. சுபம்


இதுவரை 

வெள்ளை விளக்கு பிரகாசமாக எரிந்த அந்த அறைக்குள் நித்ரா கொண்டுவரப்பட்டாள். ஐந்து பேர் வெள்ளை ஆடையில் முகமூடியுடன் இருக்க, அவர்கள் ஆணா இல்லை பெண்ணா என்று கூட சரியாக சொல்ல முடியவில்லை. நித்ராவிற்கு சுவாச குழாய் பொறுத்த செல்கையில் அவளது கை வேகமாக அதை தட்டி விட்டது. படுக்கையில் இருந்து எழுந்து அமர்ந்த அவள் 'பாஸ்கர், இதற்கு நான் ஒத்துக்கவே இல்லை' என்றாள். 

தன் முகமூடியை கிழற்றிய தலைமை மருத்துவர் ' பாஸ்கர் என்ன நடக்குது. அவங்க சம்மதம் இல்லாம எப்படி இங்க அழைத்து வந்திங்க.' என்று சீறினார்.


இனி


'எனக்கு ஒரு பத்து நிமிடம் அவகாசம் கொடுங்க, நான் இவங்களோட கொஞ்சம் தனியா பேசணும்' என்று பாஸ்கர்  கேட்டவுடன், அறையில் இருந்த ஏனைய மருத்துவர்கள் அனைவரும் வெளியேறினர்.

'நித்ரா நான் உங்கள ஏமாத்தனும்னு இத செய்யல. உங்க உடல் நிலை மோசமாக போகவே எனக்கு வேற வழி தெரியல. நீங்களும் மயக்கதுலையே ரெண்டு நாள் இருந்தீங்க, உங்க கிட்ட பேசவும் முடியல' ,அவனை பேச விடாமல் நித்ரா, 'என் கேள்விக்கு விடை கிடைக்காம நான் வாழறதுல எந்த அர்த்தமும் இல்ல. உங்களுக்கு அத புரிய வைக்க வேண்டிய அவசியமும் எனக்கு இல்ல' என்று கூறி படுக்கையை விட்டு இறங்கி, கதவை நோக்கி மெல்ல நடக்கத் தொடங்கினாள்.

'அப்ப அந்த காரணத்தை கேட்டுட்டு அப்பறம் கெளம்புங்க' என்று சொல்லி அந்த அறையில் இருந்த ஒரு முக்காலியில் அமர்ந்தான் பாஸ்கர். 

இருந்த இடத்திலேயே அசையாமல் நின்ற நித்ரா, ஆச்சரியத்துடன் பாஸ்கரை திரும்பிப் பார்க்க, பாஸ்கர் தொடர்ந்து பேசியது பின்வருமாறு. 

'உங்கள காப்பி டேல மீட் பண்ண அப்பறம் உங்கள பத்தி முழு விபரங்களை சேகரிக்க தொடங்கினேன். எனக்கு ரொம்பவும் உதவியாய் இருந்தது உங்க பிரன்ட் ஸ்வேதா தான். அவங்க ஆலோசனைப் படி மொதல்ல உங்க குடும்ப மருத்துவர் கிட்ட போனேன். உங்க மெடிக்கல் ஹிஸ்டரி வாங்கி பார்த்தேன், கல்யாணத்திற்கு மூன்று மாதங்களுக்கு முன்னும் பின்னும் எந்த ஒரு விபத்தோ இல்ல ரத்தம் தொடர்பான நோயோ உங்களுக்கு வரல என்பது தெரிஞ்சிது. அடுத்து நீங்க யாருடனும் உடல் உறவு வைத்துக்கொள்ளவில்லை என்பது நீங்க உறுதி படுத்தின மாதிரியே, ஸ்வேதாவும் உறுதி செய்ய, முக்கியமான இரண்டு ஆங்கிலும் இல்லை என்றானது.

உங்களுக்கு அப்ப நிச்சயம் ஒரு வினோதமான முறையிலத் தான் நோய் பரவி இருக்கணும் என்று முடிவு செய்தேன். அப்படி பல வழிகள் இருக்கு. உதாரணத்திற்கு நீங்க ரோட்ல இருக்கற ஒரு வட நாட்டு பையன் கிட்ட பானி பூரி வாங்கி சாப்பிட போரிங்க. அந்தப் பையன் வலது கை கட்டை விரல்ல சிறு வெட்டுக் காயம் இருக்கு, அதை நிச்சயம் நீங்க கவனிக்க மாட்டிங்க. அவன் அந்த பூரியை உடைக்கும் பொழுது அந்த காயம் பூரி மேல லேசா உரசி, கண்ணுக்குத் தெரியாத சில உயிரணுக்குள் அந்த பூரியோட ஒட்டி உங்க உடம்புக்குள்ள நுழைய வாய்ப்பு இருக்கு. ஒரு வேளை அந்தப் பையனுக்கு AIDS இருந்தா? அதுவும் நோய் பரவ ஒரு சாத்தியக் கூறு தானே.

இப்படி ஏகப்பட்ட வழிகள் நான் உங்களுக்கு சொல்லலாம் ஆனா எதையும் நிரூபிப்பது சுலபம் இல்லை. அந்த இடத்தில் தான் எனக்கு உங்க கேள்விக்கு விடை கண்டுபிடிக்க சிரமம் அதிகமானது. பல நாட்கள் தூக்கத்தில் கூட உங்களுக்கு விடை தேடும் கனவுகள் தான், இணையத்தில் எந்நேரமும் உங்களுக்கு என்ன நடந்திருக்கும் என்ற தேடல் தான். இந்த இரண்டு மாதங்கள் முக்கால் பைத்தியமாகவே மாறி விட்ட என்னை முழு பைத்தியமாக மாற்றாமல் காப்பாற்றியது, ஒரு புகைப்படம் தான். 

ஸ்வேதாவின் வீட்டில் நீங்கள் இருவரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று ப்ரேம் செய்யப்பட்டு சுவற்றில் இருந்தது. உங்களை முதலில் சந்தித்தது இரவில் என்பதால் உங்கள் முகம் மனதில் சரியாகப் பதியவில்லை. எனவே முதல் முறை ஸ்வேதாவின் வீட்டிற்கு சென்ற பொழுதே நான் அந்தப் புகைப் படத்த  எடுத்து பார்க்க, அது என் மனதில் பதிந்திருந்தது. உங்களை காப்பி டேல சந்தித்த பொழுது தான், உங்களை உன்னிப்பாக கவனித்தேன். அந்த புகைப்படத்தில் இருக்கும் உங்களுக்கும் இப்பொழுது இருக்கும் உங்களுக்கும் நிறைய வேற்றுமைகள் என்னால் உணர முடிந்தது. 

இருப்பினும் முக்கியமான அந்த வேற்றுமை அன்று இரவு என் பாதி தூக்கத்தில் தோன்றிய கனவில் தான் தெரிந்தது. உங்களால் நம்ப முடியாது எனக்கு பல விடைகள் தூக்கத்தில் தான் கிடைத்திருக்கின்றன. உடனே அன்று காலை ஸ்வேதாவை அழைத்து சில கேள்விகள் கேட்டு, அந்தப் புகைப்படம் எடுக்கப் பட்ட இடத்திற்கு விரைந்தேன். அங்குதான் உங்கள் கேள்விக்கு ஆதாரத்துடன் எனக்கு விடை கிடைத்தது.' என்று முடித்து, மெத்தையில் அமர்ந்திருந்த நித்ராவிடம் அவன் கைபேசியில் இருந்த அந்தப் புகைப் படத்தை காட்டினான். 

'ஓ... இதுவா .. எனக்கு நினைவு இருக்கு. இது ஸ்வேதாவோட கிராமம். இங்க என்ன தெரிஞ்சிது' என்று சந்தேகத்துடன் கேட்டாள்.

' அங்கத் தெரிந்தது உங்க காதுலையே இருக்கு' என்று இளித்தான்.

'கொஞ்சம் புரியற மாதிரி சொல்றிங்களா?' என்று சீறினாள்.

'கூல் டவ்ன்... நீங்க உங்க காதுல இரண்டாவது ஓட்டை குத்தனது இங்கதான், நினைவிருக்கா?', நித்ரா ஆம் என்று தலையாட்ட, 'அந்த ஓட்டை குத்தற பொழுது தான் நோய் பரவி இருக்கு. அந்த ஆசாரி ரெண்டு மாதத்திற்கு முன் AIDS நோயாள இறந்து போனதா அரசு மருத்துவமனையில கொடுத்த death certificate இது.' என்று அவற்றை அவள் கையில் கொடுத்தான். ' உங்களுக்கு காது குத்தின ஆசாரிக்கு அந்த சமயம் கை விரல்ல ஊசி கீரிக்கிட்டதா ஸ்வேதாவும் சொன்னாங்க. அந்த சமயம் உங்க காது ஓட்டையில அவரோட ரத்தம் கலந்து உங்களுக்கு நோய் பரவ காரணமா இருக்கணும். உங்க கேள்விக்கு விடை இதுதான்' என்று முடித்தான். 

Image Courtesy - Google

'கொஞ்சம் நம்ப கஷ்டமாத்தான் இருக்கு. இத உங்களால கோர்ட்ல, divorce proceedings அப்ப நிரூபிக்க முடியுமா?' என்று கேட்டாள்.

'100% சதவீதம் முடியும். கோர்டுக்கு தேவை ஆதாரம், அது நம்மிடம் இருக்கு.' என்றவுடன் அவள் முகத்தில் முதல் முறையாக புன்னகையைப் பார்த்த பாஸ்கர், இப்பொழுதுதான் அழகாய் இருக்கிறாய் என்று தன் மனதினுள் சொல்ல நினைத்து,  'இப்ப உங்க சிகிச்சைய தொடரலாமா' என்று கேட்டு அவள் பதிலை எதிர்பார்த்து காத்திருந்தான். 

'அஸ் யு விஷ்' என்று அந்த வெள்ளை மெத்தையில் தன் மீது இருந்த களங்கம் விலகப்போகின்ற மகிழ்ச்சியுடன் சாய்ந்தாள்.

ஆறு மாதங்களுக்குப் பிறகு....       

குளுமையான மாழ்கழி மாதத்தின் காலையில், அண்ணா நகரில் இருக்கும் நித்ராவின் வீடு ஒரு மனோகரமான நறுமணத்தை காற்றில் கலந்துக் கொண்டிருந்த பொழுது, பாஸ்கர் அந்த வீட்டின் கதவை திறக்க முயன்றான். திறக்கவில்லை. பூட்டி இருந்தது. அழைப்பு மணியை அழுத்தி காத்திருந்தான். மூன்று மாதங்கள் புனேவில் தன் ஆராய்ச்சி பணி முடித்து, முதல் முறை நித்ராவை காண சென்னை வந்திருந்தான். கதவு திறந்த அந்த நொடி அவன் ஆச்சரியத்தில் திகைத்தான். அவன் கண் முன் தோன்றிய அந்த அழகுப் பதுமையை வர்ணிக்க வார்த்தையில்லை. வலை போன்ற ஒரு கருப்பு சேலையில் இருந்த நித்ரா, பாஸ்கரின் ஆண் உணர்சிக்களை சோதித்தாள். கனவில்லை என்று அவன் மூளை அவனை அசைக்க, புன்னகையுடன் வரவேற்ற நித்ராவின் பின்னே வீட்டினுள்ளே சென்றான்.

பால்கனியில் காத்திருந்த பாஸ்கருக்கு காபியுடன் வந்த நித்ரா 'என் வாழ்வில் நீங்க செய்த உதவிக்கு நான் இதுவரை உங்களுக்கு ஏன் நன்றி சொல்லவே இல்ல தெரியுமா?' , 'ழே' என பாஸ்கர் முழிக்க, 'எனக்கு நீங்க இன்னும் ஒரு உதவி செய்யணும்' என்று கூறி அவன் பேச காத்திருந்தாள்.  

'என்ன செய்யணும்' என்று பாஸ்கர் கேட்க, 'ரெண்டு பேர் கிட்ட இருந்து பல கோடிக்களை திருட வேண்டும்' என்று தன் காப்பியை பருகினாள்.

அவள் அழகின் போதையில் மயங்கி  இருந்த பாஸ்கரை 'திருட வேண்டும்' என்ற சொல் தட்டி எழுப்பியது.

தொடரும்....

*********************************************************************************************************

முதல் முறை வெற்றிகரமாக ஒரு தொடரை நிறைவு செய்யும் மகிழ்ச்சியுடன், என் தொடருக்கு ஆதரவு தந்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் கோடான கோடி நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
நித்ரா (season 2)  சில மாத இடைவேளைக்குப் பிறகு மீண்டும் தொடரும்....      

10 comments:

  1. தேர்ந்த கதையாளனுக்குறிய வேகத்தில் கதை நகர்வு இருந்தது ... சில குறைகள் இருந்தும் அதை கொண்டு செல்லும் வேகத்தின் ஊடாய் தெரியாமல் செய்து இருக்கிறீர்கள்....

    உங்களின் எழுத்து நடையை நான் ரசித்தாலும், விவரிப்புகளை கண்டு வியந்தேன் ... சந்திப்போம் இரண்டாம் பாகத்தில் ...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி அரசன் :) அடுத்த தொடரை இன்னும் சிறப்பிக்க உங்கள் கருத்துக்கள் உதவும்

      Delete
  2. எனக்கு பெரிதாய் எந்தக் குறையும் தெரியவில்லை ரூபக், சொல்லபோனால் பல புதிய சிசயங்களைத் தெரிந்து கொண்டேன், ஒரு பதிவனாய் ஒரு எழுத்தாளனாய் இந்த சமூகத்தின் குறைந்தபட்ச எதிர்பார்ப்பும் இது தான். இருந்தும் கதையை இன்னும் கொஞ்சம் வளர்த்திருக்கலாம் என்று தோன்றியது. ஆங்காங்கே மானே தேனே தெளிதிருக்கலாம்...

    வாசகர்களின் வருகையை எதிர்பார்க்காது இது போல் இன்னும் பல தொடர்கள் எழுதவும்.. உம எழுத்து அவர்களை இழுத்து வந்து விடும்...

    தொடர்ந்து திடங்கொண்டு போராட வாழ்த்துக்கள் :-))))))

    ReplyDelete
    Replies
    1. தொலைக்காட்சித் தொடர்கள் போல் இழுக்க விரும்பவில்லை .... எப்படியாவது ஒரு சிறப்பான தொடர் எழுதி அதற்கு அதிக வாசகர்கள் வர வைக்க வேண்டும் என்ற என் கனவு மெய்ப்பட உங்கள் ஊக்கங்கள் பெரிதும் உதவும் ... நன்றி :)

      Delete
    2. யோவ் அப்போ நான் எழுதப் போறது என்ன சீரியலா.. பிச்சு :-)))))))))

      Delete
  3. Great.... :) :) Waiting fr season 2 :) :) Best Wishes...

    ReplyDelete
    Replies
    1. அடுத்த பதிவுகள் விரைவில் எழுத தொடர்ந்து தொல்லை கொடுத்து என்னை இந்த தொடரை நிறைவு செய்ய உதவியமைக்கு மிக்க நன்றி :)

      Delete
  4. Season 2 ...? சின்னத்திரை தாக்கம் அதிகம் போல :)

    தொடர்கதையை முழுதா படிக்கோணும் ....!

    @ சீனு

    //சிசயங்களைத் // :)

    // கதையை இன்னும் கொஞ்சம் வளர்த்திருக்கலாம்// :(

    ReplyDelete
    Replies
    1. எல்லா வற்றிலும் season வருது, நம்ம தொடரிலும் வரட்டும் என்று தான் :) ... படிச்சிட்டு எங்க இன்னும் சிறப்பா செய்யலாம்னு சொல்லுங்க

      Delete
  5. அட நல்ல முடிவு....

    சீசன் 2 வரப்போகுதா! நல்லது. விரைவில் வெளியிடுங்கள் ரூபக்...

    ReplyDelete