Tuesday, March 26, 2013

ஸ்ப்ளென்டரும் நானும்

1999 - நான் வேலூரில் ஆறாம் வகுப்பு படித்துகொண்டு இருக்கும் போது எங்க அப்பா வாங்கினார் Hero Honda- Splendor. மிதிவண்டியில் இருந்து இரு சக்கர வண்டிக்கு முன்னேற்றம் என்றால் அனைவருக்கும் சந்தோஷம்தான். ஆனால் என்னை இந்த மாயை அன்று பெரிதும் ஈர்க்கவில்லை. நாட்கள் செல்ல என்னையும் அறியாமல் ஒரு ஈர்ப்பு வந்தது. வண்டி சென்டர் ஸ்டான்ட் போட்டு நின்று கொண்டிருக்கும் போது, சாவியை மாட்டி கிக் ஸ்டார்ட் செய்து acceleratorஐ முறுக்கிய போது ஏற்பட்டது என் முதல் மோட்டார் காதல். அன்று முதல், தினமும் ஐந்து நிமிடமாவது முறுக்காமல் தூங்க மாட்டேன். ஆனால் ஒரு போதும் வண்டியை ஓட்ட ஆசை வந்தது இல்லை.

என்னுடன் பள்ளி பயின்ற நண்பன் J.நவீன் (என்னுடன் பல நவீன்கள் படித்துள்ளனர். இங்கு நமக்கு தேவை 'J' என்ற முன்னெழுத்து கொண்டவன்) என் வீட்டுக்கு இரு சக்கர வண்டியில் வருவதுண்டு. எட்டாம் வகுப்பிலே ஆறு அடி, கட்டுக்கோப்பான உடல், ஒரு சோடாபுட்டி கண்ணாடி (எங்க இருந்தாலும் என்ன மன்னிச்சிக்கோ நண்பா. கண்ணாடி இல்லாம உன்ன அடையாளம் காட்ட முடியாது ). பல முறை, ஓட்டுனர் உரிமம் இல்லாததால் போலீஸ்கு மொய் எழுதி உள்ளான். படிப்பை தவிற மற்ற அனைத்திலும் ஆர்வம் அதிகம். ஒரு முறை எளிதில் அவன் தேர்ச்சி பெற அவனுக்கு வழி காட்டினேன், அன்று முதல் எல்லா பரீட்சையின் போதும் என் வீட்டுக்கு வந்திடுவான் 'முக்கியமான கேள்வி எல்லாம்  சொல்லு டா 'னு. என்னை வண்டி ஓட்ட கத்துக்கோ என்று பல முறை சொன்னான். சில முறை, இங்கு எழுத முடியாத வார்த்தையாலும் திட்டியதுண்டு.  அப்படியும் எனக்கு பெரிய ஈர்ப்பு வரவில்லை.

பத்தாம் வகுப்பு பயில புதுவை செல்ல வேண்டிய கட்டாயம். பள்ளி தேடி அலைந்த அந்த கோடையில் ஒரு நாள், என் அப்பா பின் அமர கிழக்கு கடற்கரைக் சாலையில் புதுவையில் இருந்து என் கிராமம் வரை சுமார் நாற்பது கிலோ மீட்டர் ஓட்டிச் சென்றேன். சிறு பிள்ளைகள் சைக்கிள் முன்னாடி அமர்ந்து handle barஐ பிடித்தாலே தாங்கள் தான் ஒட்டுவதாக நினைப்பார்களே, அதே போல் தான் நான் அன்று உணர்ந்தேன். நான்காவது கியர் வரை அப்பா போட்டு விட்டார், நான் வண்டியை நேராக செலுத்தியதோடு சரி.  நெடுஞ்சாலை என்பதால் அதுக்கும்  பெரிதாய் ஆற்றல் தேவைப் படவில்லை. கடைசியாக ஒரு பள்ளியில் சேர அனுமதி கிட்டியது (சிபாரிசு மூலம் தான்). பத்தாம் வகுப்பு என்றால் பள்ளிகளில் உள் எடுப்பே கிடையாது என்பதை அன்றுதான் அறிந்தேன்.

வீட்டில் இருந்து பள்ளி தூரம் இல்லை என்றாலும், சரியான போக்குவரத்து இல்லாததால், சைக்கிளில் செல்ல முடிவு செய்தோம். புது சைக்கிளும் வாங்கித் தந்தார்கள். புதுவை முழுவதும் அந்த சைக்கிள்லதான் சுத்தி இருக்கேன். வேட்டையாடு விளையாடு படத்துக்கு டிக்கெட் கிடைக்காம, கள்ளச் சந்தையில  விக்கறவங்கள தேடி சென்று டிக்கெட் வாங்கனதும் அந்த சைக்கிள்ல தான்.

கல்லூரி சேர, எனக்கு பிடிக்கவே பிடிக்காத மாந(க)ரமான சென்னைக்கு வந்தேன். புதுவையில் இருந்த வரை வெளியூர் செல்ல மட்டுமே பேருந்தில் ஏறியவனை,  சென்னை எங்கு செல்லவும் பேருந்தில் ஏற்றியது. முப்பது ரூபாய் டிக்கெட்(ஒரு நாள் பஸ் பாஸ். இன்று இது ஐம்பது ரூபாய்) எடுத்தா கிழக்கே மெரினா, வடக்கே பழவேற்காடு, மேற்கே திருவள்ளூர், தெற்கே மாமல்லபுரம், எங்க வேண்ணா ஒரு நாள் பூரா சுத்தலாம். எத்தனை பஸ் வேண்ணா மாறலாம். கல்லூரியில் முதலாம் ஆண்டு முடிந்தது. நண்பர்கள் வண்டியில் பின்னிருக்கையில் உட்கார்ந்து செல்வது வழக்கம், அப்போது கூட  வண்டி ஓட்ட கத்துக்க வேண்டிய ஈர்ப்பு வரவில்லை.

இந்த  அழகு எல்லாம் இல்லங்க 
கல்லூரி இரண்டாம் ஆண்டு (2008- 2009) . என் வாழ்வில் நான் நினைக்காத திருப்பம் மிக சாதாரணமாக நடந்த நாள் அது. என் தெருவில் நான் பல நாட்கள் தூரத்தில் இருந்தே பார்த்துக் கொண்டு இருந்த (எனக்கு பிடித்த) பெண் என் முன்னால் பல்சர் ஓட்டிச் சென்றாள். எனக்கு அப்ப நளதமயந்தி படத்தோட கதாநாயகி அறிமுகம் நினைவில் வந்தது.  துடித்தது மீசை, பொறுத்தது போதும் என்று பொங்கியது ஆண் கர்வம். மறுநாளே பயில்வோர் ஓட்டுனர் உரிமம்  (LLR) வாங்கினேன். அடுத்த நான்கு மாதங்கள் நான் விழாத தெரு கிடையாது. ஐந்தாம் மாதம் 'எட்டு' போட்டு விட்டு உரிமம் பெற்ற ஓட்டுனர் ஆனேன். அன்று முதல் எங்கு சென்றாலும் என் ஸ்ப்ளென்டரில் தான். எவ்வளோ நிகழ்வுகள், எவ்வளோ விபத்துக்கள். அப்பப்பா ! சொல்ல ஒரு கதை போதாது. என் மனதில் நின்ற முக்கியமான நிகழ்வுகளை மட்டும் பட்டியலிடுகிறேன்.

முதல் விபத்து. எல்லாரையும் போல் என்னை மிரட்டிய முதல் தருணம், ஒரு நாய் சாலையை கடக்கும் போதுதான். இந்த நாய்கள் எந்த பக்கம் போகும் என்று googleஆல் கூட  கணிக்க முடியாது. நான் சற்று திணறி, brake பிடிக்க வண்டி சாய்ந்தது. இடது முட்டியில் முதல் விழுப்புண்.

இரண்டாம் விபத்து. வடக்கு உஸ்மான் சாலையைக் கடந்து கல்லூரி சாலையை நோக்கி சென்றுகொண்டிருந்தேன். மணி எட்டு இருபது, மின் விளக்குகள் பளிச்சிட்டு கொண்டிருந்தன. ஒரு சிறிய மேம்பாலம். திடீரென்று ஒரு கார் ஆட்டோவை முந்தி செல்ல, தடம் மாறி  என்னை நோக்கி வேகமாக வந்தது. நான் வண்டியை ஓரம் தள்ள, சாய்ந்து கீழே விழுந்தோம் (ஸ்ப்ளென்டரும் நானும்). நீங்க கேட்கலாம் 'விபத்துனா எப்பவுமே எதிர்ல வரவனதானே தப்பு சொல்லுவிங்க?'னு. உண்மையாவே விபத்து நடந்ததுக்குக் காரணம் அந்த வீணாப்போன கார் தான்,  நிறுத்த கூட இல்ல. எங்க ரெண்டு பேருக்குமே சேதம் அதிகம், ஆனா வீடு போய்  சேர்ர வரைக்கும் எதையும் வெளிய காட்டல.      

மூன்றாம் விபத்து. அலுவலகத்தில் வேலை செய்ய ஆரம்பித்த சமயம். ஒரு நாள் வீடு திரும்பும்போது திருமங்கலம் சந்திப்பில், கைபேசி பேசி கொண்டே ஒரு பெண் சாலையை கடக்க, அவள் மீது ஏற்ற கூடாது என்று நான் வண்டியை ஓரம் தள்ள, வந்த வேகத்தில் வண்டி சாய்ந்து சற்று தூரம் இழுத்துக் கொண்டு சென்றது. கடன் வாங்கி பயன் படுத்திய என் நண்பனின் கண்ணாடி நொறுங்கியது. வண்டியை தள்ளி ஓரம் நிறுத்திவிட்டு அந்த பெண்ணை காணச் சென்றேன். வாயெல்லாம் ரத்தம் ,வண்டி சக்கரம் அவள் காலை தட்டியதில் கீழே விழுந்திருப்பாள் போலும். பெண் என்பதால் எப்போதும் போல் கூட்டம் கூடியது. அந்த பெண்ணை ஆட்டோவில் ஏற்றி மருத்துவமனை கொண்டு சென்றனர். ஒரு  ஆபத்தாண்டவன் (இவர் அடுத்த காட்சியிலும் வருவதாலும் உயர்ந்த உள்ளம் கொண்டவர் என்பதாலும்  இவருக்கு ஆபத்தாண்டவன் என்று பெயர் சூட்டுகிறேன்)  நான் தப்பி செல்லாமல் இருக்க அவர் வண்டியை அங்கேயே விட்டுவிட்டு என் வண்டியில் பின் இருக்கையில் அமர்ந்து வந்தார்.  அவர் நண்பர் எங்களைப் பின் தொடர்ந்து   வந்தார். சிறு தையல் போட்டனர். சில ஊசி, மாத்திரை எழுதி தந்தனர். நான்தான் வாங்கிக் கொடுத்தேன். ஆபத்தாண்டவன் என்னை முழு வீச்சில் கண்காணித்தார். 

விபத்து நடந்த பகுதி (இன்று)
அந்த பெண்ணின் அம்மா அவளின்  நான்கு வயது குழந்தையை  இடுப்பில் தூக்கிய படி  'ஏன்ப்பா இப்படி பண்ணிட்ட? அவ புருஷன் பிரைன் பீவர்ல படுக்கையா கிடக்கிறான். அவன பார்க்கத்தான் இப்ப ஊருக்கு கிளம்புறேன்னு போன் பண்ணினா'

அருகில் இருந்த ஆபத்தாண்டவனின் நண்பர்  'அவங்கதாம்மா பார்க்காம சாலைய கடந்துட்டாங்க' (இவர் உண்மையிலே நல்லவர் போலும்). 

அக்கறையுடன் என்னை போக விடாமல் தடுப்பதாக எண்ணிக் கொண்டு இருந்த ஆபத்தாண்டவன்

'அவங்க அப்பா போலீஸாம். இங்க வந்துட்டு இருக்காரு. எங்கயும் போய்டாத '

'யோவ் ....... உன் வேலையப் போய் பாரு. விட்டுட்டு போகணும்னா அங்கேயே போய் இருப்பேன். அவர் யாரா இருந்தா எனக்கு என்ன?'

போலீஸ் அப்பா வந்தவுடன் அந்த உயர்ந்த உள்ளம் என்னை ஒப்படைத்து விட்டு கெளம்பியது. வாயில் பற்கள் உடைந்ததால் பல் மருத்துவமனை கொண்டு செல்ல சொன்னார்கள். அவங்க அப்பா ஆட்டோ பிடிக்க சென்றார்.

அந்த பெண் வெளியில் வந்து ' I am alright. நீங்க கெளம்புங்க' என்றாள் .கெளம்ப மனசு இல்லாம ஆட்டோ பின் சென்றேன் .(மறுநாள் வீட்டில் திட்டு வாங்கியபோது இந்த தருணம்  கெளம்பியிருக்கலாம் என்று தோணியது)

பல் மருத்துவமனையில் பல்லுடன் சேர்த்து காசும் பிடுங்குவது வழக்கம். மூன்று பற்கள் உடஞ்சதுக்கு பதினெட்டு ஆயிரம் ஆகும்னு சொன்னாங்க. அந்த பெண் மீண்டும் என்னை போக சொல்ல, அவங்க அப்பா 'இருந்தா தான்மா இவனுங்களுக்கு எல்லாம் கஷ்டம் தெரியும்' என்று என்னைப் பார்த்து கருவ. என்ன உலகமடா இது என்று மனதினுள் பொருமிக் கொண்டேன் !. என் மனசாட்சி பொறுக்க வில்லை. அந்த மாத சம்பளத்தில் பாக்கி இருந்த ஏழு ஆயிரம் ரூபாயையும் கொடுத்துவிட்டுதான் சென்றேன். அதற்கு வீட்டில் கச்சேரி கலை கட்டியது. 

கல்லூரியில் ஒரு நாள் நண்பர்கள் அனைவரும் சேர்ந்து இரு சக்கர வண்டிகளில் பழவேற்காடு சென்றோம். நண்பர்கள் எல்லோரும் புது ரக  பவர் வண்டிகள் வைத்திருந்தனர். ஆகையால் சீறிப் பாய்ந்தனர். நம்ம ஆளு கொஞ்சம் மெதுவாத்தான் போவாரு. இப்ப அவருக்கு முதுமை வந்துடுச்சு, பத்து வயசு. தொலைவில் ஒரு வண்டி நின்று கொண்டிருந்தது. என் நண்பன் ஒருவன் மறைவில் தன் டேங்க்ஐ காலி செய்துகொண்டிருந்தான். என்னைக் கண்டவுடன் கை காட்டி நிறுத்தச் சொன்னான். நின்ற பின்பு தான் தெரிந்தது அவன் வண்டி டேங்க்உம் காலி என்று. ஆமை முயலை வென்றதை அன்று நான் கண்டு உணர்ந்தேன். அப்ப அவன் வண்டிக்கு சாப்பாடு போட்டது நம்ம ஸ்ப்ளென்டர்தான். நுறு ரூபாய்க்கு சாப்ட்டா நம்ம ஐயா சென்னை முழுக்க சுத்துவாரு.

என்னங்க, இன்னும் போக்குவரத்து காவல் வரலன்னுதான பார்க்கரிங்க. அவங்க இல்லாம சென்னைல எந்த வண்டி கதையும் ஓடாது. இனிமே பூரா அவங்கதான்.

வடபழனி சந்திப்பில் சிவப்பு விளக்கு எரிந்தது. நமக்குதான் எங்கும் அவசரம் ஆச்சே, எல்லா சந்துலயும் புகுந்து, முன்னாடி வந்து நின்னாச்சு. ஒருத்தர் வந்து அந்த கோயில் வரைக்கும் விட்டுடுங்கன்னு ( நான் எதுவும் சொல்வதுக்குள்) ஏறி, பின் இருக்கையில் அமர்ந்தார். அவர் கை காட்டிய இடத்தில வண்டியை நிறுத்திய உடன், என் முன் வந்து (நன்றி சொல்லுவாருன்னு நினைத்தால்) ஒரு அடையாள அட்டையை நீட்டி, 'நான் போலீஸ். டாகுமென்ட்ஸ் எல்லாம் எடு' என்றார்.

இவங்க கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையா. நானும் எல்லாத்தையும் சரியா எடுத்து காண்பிச்சேன். எங்க அப்பா பேரில் வண்டி பதிவாகி இருந்தது.
'வண்டி வேர ஒருத்தர் பேர்ல இருக்கே'

'என்னோட அப்பாதான். '

'போன் போடு பேசுவோம்' என்று வண்டியில் இருந்து சாவியை எடுத்துக்கொண்டார். 

'சார், இங்க ஒருத்தர் உங்க வண்டி வச்சிருக்கரே உங்க மகன் தானா'...(நல்ல கேள்வி. அது எங்க அப்பானு உனக்கு நான் சொல்லித்தானே தெரிஞ்சுது)

'இது வேலூர்ல பதிவு செய்த  வண்டி, சென்னைல ஓட்ட கூடாது' அவர்  அப்பாவிடம் பேசியதில் இது மட்டும் தான் எனக்கு கேட்டது. 

என் அப்பா  'காசு எதிர் பார்க்கிறான். எதாச்சு கொடுத்து தொல' என்றார்.

'என்ன தம்பி கோர்ட் போனா அபராதம் ஆயிரம் ரூபாய். இங்கயே கட்டனா இருநூறு தான்'

'என் கிட்ட காசு அவளோ இல்லைங்க'

'எவ்வளோ தான் வச்சி இருக்கே'

'இவ்ளோதான்' என்று என் பணப்பையை எடுத்து நீட்டினேன். நல்ல வேளையாக பெட்ரோல் போட்ட உடன் மீதி பணத்தை பெட்ரோல் டேங்க் மேலுறையில்  வைத்தேன்.

பணப்பையில் ஒரு இருபது ரூபாய் நோட்டும், ஏழு ரூபாய் சில்லறை காசும் இருந்தது.அவை அனைத்தையும் எடுத்துக்கொண்டுதான் என்னை அனுப்பினார். அன்றில் இருந்து தெரியாதவர்களை ஏற்றுவது இல்லை.

அடுத்த சம்பவம். ஒரு நாள் என் இரு நண்பர்களுடன் வில்லிவாக்கத்தில் வண்டியில் மூவருலா சென்று கொண்டிருந்த போது, காவல் துறை முன்னாடி நம்ம ஐயா நின்னுட்டாரு. ஞாயிற்று கிழமை வேற. ஒரு போலீஸ் மட்டும் சாவிய எடுத்து, வண்டி ஸ்டார்ட் பண்ணி 'வண்டி உன்னுதா, ஏறு' என்று தன் பின்னால் அழைத்துக்கொண்டு, காவல் நிலையம் சென்று வழக்கு பதிவு செய்யப் போவதா கூறினார். பேரம் பேசும் தருணம் வர காத்திருந்தேன்.

இதே போல் என் நண்பன் வண்டியில் மூவருலா சென்று நுங்கம்பாக்கத்தில் மாட்டிய போது. 

'எங்கள பார்த்தும் வண்டிய நேர வந்து விட்டுட்ட. உன் தைரியத்த நான் பாராட்டுறேன். அபாயகரமா வண்டி ஓட்டறதுக்கு அபராதம் ஆயிரத்து முப்பது ரூபாய்' என்று சொல்லிக்கொண்டே ஒரு துண்டு சீட்டை காட்டினார். பல முறை மடிக்க பட்ட அதில் அவர் கூறிய தொகை அச்சடிக்க பட்டிருப்பதை சுட்டி காட்டினார், ஏதோ அது ஒரு அரசு ஆணை போல.


'அவளோ காசு இல்ல சார்'


'வண்டிய இங்க விட்டுட்டு ATMல எடுத்துட்டு வாங்க' என்றார்.


 இந்த துணிக்கடையில எல்லாம் இருக்கே பண அட்டைதேய்த்தல்இயந்திரம் அது மாதிரி ஒன்னு இவங்களுக்கும் அரசு கொடுத்தா வசதியா இருக்கும் என்று நான்  எண்ணிக் கொண்டிருக்க என் நண்பன் ஐநூற்று அறுபது ரூபாயில் பேரத்தை முடித்தான்.


இப்ப நம்ம வண்டி போயிட்டே இருக்க, காக்கி சட்டை பனிக்கட்டியை உடைக்க 
'தம்பி வழக்கு பதிவு பண்ணா அதிகம்  அலையனும். இங்கயே எதாச்சு அபராதம் கட்டிட்டு போய்டு'. (இதற்க்குத்தானே ஆசை பட்டாய் பாலகுமாரா!)

'சரி சார். இருநூறு ரூபாய் வாங்கிக்கோங்க'

'ரொம்ப கம்மியாச்சே' என்று தன் மேல் அதிகாரியை கைபேசியில் அழைத்து தொகையை சொன்னார். அவர் சம்மதித்துவிட்டார் போலும். (மத்த வில வாசி மாதிரி போலீஸ் கட்டணமும் இடத்துக்கு ஏத்த மாதிரி மாறும் போல. நுங்கம்பாக்கத்துல ஐநூற்று அறுபது, வில்லிவாக்கத்துல இருநூறு.)

'என்னிடம் ஐநூறு ரூபாய் நோட்டு தான் இருக்கிறது. உங்க கிட்ட சில்லறை  இருக்கா?'

ஒரு கடை முன் அவர் நிறுத்த, காக்கி சட்டையை பார்த்தவுடன் அவன் எதுவும் சொல்லாமல் சில்லறை கொடுத்தான்.அவர் பேசியபடி இருநூறுதான் வாங்கினாரு. நேர்மையான மனுஷன்.

தேவி திரையரங்கம் சந்திப்பில் 'U' போன்ற திருப்பம்  எடுத்ததுக்கு ஒரு நூறு, அண்ணா வளைவு கீழே 'signal violation'ல ஒரு ஐம்பது என்று மொய் பட்டியல் நீளும்.

Hero மற்றும் Hondaவோட நட்பும் முடிஞ்சது, ஸ்ப்ளென்டர்+  போய் சூப்பர் ஸ்ப்ளென்டர் வந்து, இப்ப  ஸ்ப்ளென்டர் ப்ரோவும் வந்தாச்சு, ஆனாலும் தொண்ணூறு ஆயிரம் கிலோ மீட்டர் தாண்டியும் ஓடிக்கொண்டிருக்கும் நம்ம ஐயாவுக்கு ஒரே ஒரு ஆசை தான். என்ஜின் அடங்கரதுக்குள்ள புதுசா ஓடிட்டு இருக்கே இந்த ஸ்கூட்டி மாதிரி வண்டிங்க, அதுல எதயாச்சு ஒன்ன கொஞ்ச தூரம் தள்ளிட்டு போகணும்மா, அட அதுதாங்க  tow பண்ணிடனும்னு. உங்க யார் கிட்டயாச்சு அந்த மாதிரி வண்டி இருந்தா, இவர் ஆசைய நிறைவேத்த, சொல்லி அனுப்புங்க (மகளிர் மட்டும்). 

6 comments:

  1. Super da.. Especially loved d sequences like givin accelerator wen bike is idle in young age, LLR story, our friend's(kaaval thurai ungal nanban) attakasam nd finally ur bike's aim ..

    ReplyDelete
  2. ஹா ஹா சுவாரஸ்யமான அனுபவங்கள்... நானும் சென்னை போக்குவரத்துக் காவலிடம் நிறைய மாட்டியிருக்கேன். ஆனால் எல்லாமே நான் செய்த தவறுகளுக்காகவே... விபத்து எதுவும் ஏற்படுத்தியதில்லை...நல்ல பகிர்வு.. தெளிவான எழுத்துநடை...

    ReplyDelete
  3. ஹா... ஹா... 'நல்ல' அனுபவங்கள் தான்...

    இனிமேல் எந்த ஆபத்தில்லாமல் தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  4. சுவாரஸ்ய தேர்ந்த எழுத்துநடை,வாழ்த்துகள்

    ReplyDelete
  5. As usual Good narration rubak,,, u need to thank police dept for giving u an interesting short story :)

    Few interesting pts from my views,

    1. The third accident would have happened bcos of the coolers :)
    2. traffic polices are becoming brilliant by getting free lifts as well as money
    3. kadaisiya unna bike ota thoondivitta antha pen, car oti irunthaa traffic police evalavu panam paathu irupaanunga nu yosika thonudu!! :)

    Expecting love story in next publication :)

    ReplyDelete