இனியவளே,
உன்னை நம் கல்லூரியில் முதல் நாள் சந்தித்த போதே உன் மேல் எனக்கு ஒரு இனம் புரியாத உணர்வு பிறந்தது, பின் நம் நட்பு வளர என் உணர்வு நேசமாக மாறியது. நீ என்னுடைய தோழியாக இருப்பதனாலோ என்னவோ என்னால் மனம் திறந்து உன்னிடம் இந்த நேசத்தை பற்றி பேச முடியவில்லை, நம் நட்பில் விரிசல் வந்து விடுமோ என்ற பயம் மறுபுறம். இந்த வேதனையை நம்ம சீனுவின் தோளில் கொட்டியபோது, அவர் 'உன் உணர்ச்சிகள ஒரு லெட்டர்ல கொட்டி அவ கிட்ட கொடுத்திடு, பொதச்சா தென்னமரம் ஒடச்சா சட்டினி' என்று சொன்னார். எனக்கும் இந்த முயற்சியில் விடை கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் என் எண்ணங்களை இங்கு கிறுக்குகிறேன்.
எனக்கு கவிதை நடையில் எழுதும் ஆற்றல் இல்லை என்பது என் வீட்டு குப்பைத்தொட்டி நான் கசக்கிய காகிதங்களால் நிரம்பிய பின் தான் புரிந்தது. கவிதை வந்தால் தான் காதலா என்ன? என்னால் உன்னை மானே, தேனே என்றெல்லாம் கூப்பிட முடியவில்லை, என்றுமே நீ என் செல்லமான 'லூசு' தான். நீ என்னிடம் பல முறை 'தமிழ் எழுத்தில் தான் உணர்சிகளை சரியாக காட்ட முடியும்' என்று சொல்லி இருக்கிறாய், ஆகையால் நான்கு ஆண்டுகள் கழித்து, தமிழில் எழுத நான் எடுக்கும் விபரீத முயற்சி இது, வழக்கம் போல் பிழைகளை மட்டும் காணாமல், என் எண்ணத்தையும் படி.
நம் கல்லூரி புழல் அருகில் இருக்கும் இரண்டாம் சிறை என்பது அனைவரும் அறிந்த உண்மை. ஆண்-பெண் பேசக் கூடாது என்ற சட்டம் நம்மை சில நாள் பேச விடாமல் பிரித்து வைத்ததாலும், நம்மை இணைத்தது செய்முறை வகுப்புகள் தான். வேதியியல் செய்முறை வகுப்பில் தான் நாம் முதன் முறை பேசியது, என் குறிப்பேட்டை என்னிடம் இருந்து பெற்றுச் சென்றாய், அதை திரும்ப பெற நான் உன்னிடம் பேசினேன். பெயர் வரிசையில் என் பெயருக்கு பின்னால் உன் பெயர் வருவதால், மற்ற செய்முறை வகுப்புகளில் விதி நம்மை ஒரே பாட்சில் போட்டது. அதற்குப் பின் என் எதிரில் வரும் போது உன் அழகிய புன்னகையால் என் நலம் விசாரித்து செல்வாயே அப்பொழுது கூட நீ எனக்கு அழகாகத் தெரியவில்லை, அந்தத் தருணம் வரும் வரை.
நம் நட்பை அடுத்த கட்டத்துக்கு அழைத்துச் சென்றது Gmail தான், உனக்கு நினைவு இருக்கிறதா, நீ கல்லூரி விடுதி சென்று, மீண்டும் கல்லூரி இணைய மையம் வரும் முன், நான் என் வீடு சென்று லாகின் செய்து உனக்காக காத்திருப்பேன். பல நாள் லாகின் செய்ய நான் என் அண்ணனுடன் சண்டை போட்டதும் உண்டு. ஒரு நாள் என் வீட்டில் இணையம் வேலை செய்யாததால், அவசரமாக துணி கூட மாற்றாமல் ப்ரௌசிங் சென்டர் சென்று உனக்காக காத்துக்கொண்டு இருந்தேன், ஆனால் நீ அன்று ஆன்லைன் வரவே இல்லை. ஏமாற்றத்துடன் வீடு சென்ற எனக்கு, அன்று இரவு உன்னிடம் இருந்து வந்த மன்னிப்பு மின்னஞ்சல், என்னை மிகவும் கவர்ந்தபொழுது கூட நீ எனக்கு அழகாகத் தெரியவில்லை, அந்தத் தருணம் வரும் வரை.
இவ்வளவு பேசியும் உன் கைபேசி எண்ணை வாங்கவேண்டும் என்று எனக்கு தோணியதில்லை. இரண்டாம் ஆண்டு, நாங்கள் சுற்றுலா சென்று திரும்பும் போது, நம் வகுப்பு குமார் உன் மீது இருந்த கோபத்தில், உன் கைபேசி எண்ணை என்னிடம் தந்து உன்னை வம்பிழுக்க சொன்னான். நண்பன் குமாருக்கு நன்றி சொல்ல நான் கடமை பட்டிருக்கிறேன், ஒரு வேளை அவன் இதை செய்யாமல் இருந்தால், நாம் இந்த அளவு நெருக்கமாக ஆகி இருக்க முடியாது. பக்கத்துக்கு வகுப்பு, வேறு ஆண்டு என்று பல பேர் நம் வகுப்பு நோக்கி உன்னை பார்க்க (சைட் அடிக்க) வருவதுண்டு, அப்பொழுது கூட நீ எனக்கு அழகாகத் தெரியவில்லை, அந்தத் தருணம் வரும் வரை.
நீ கல்லூரி விடுதியில் இருந்ததால் உன் கைபேசியை சித்தி வீட்டிலேய விட்டுச் செல்வாய். வெள்ளிக்கிழமை வந்தால் போதும், பல நாள் கழித்து ரஜினி படம் அன்று இரவு வெளியாகப் போவது போன்ற உற்சாகம் எனக்கு பிறந்துவிடும். வீடு வந்து நீ எனக்கு அனுப்பும் குறுந்தகவல் வரும் வரை, எலும்பை பாதுகாக்கும் நாய் போல, என் கைபேசியை என் பார்வையிலேயே வைத்து காத்திருப்பேன். அளவே இல்லாமல் இரண்டு நாட்கள் வெறும் குறுந்தகவலுடன் நாம் கழித்தாலும், அந்த திங்கட் கிழமை காலை வந்தவுடன், இந்தியா பாகிஸ்தானுடன் படு தோல்வி அடைந்தால் வருவது போன்ற சோகமும் வெறுப்பும் என்னை தாக்கும். அடுத்த வெள்ளி வர மனம் ஏங்கும்பொழுது கூட நீ எனக்கு அழகாகத் தெரியவில்லை, அந்தத் தருணம் வரும் வரை.
நம் நட்பு கொஞ்சம் கொஞ்சமா வளர்ந்து, கல்லூரி மூன்றாம் ஆண்டில் இருந்து கைபேசி மூலம் பேசத் தொடங்கினோம். பேசுவோம் பேசுவோம், சார்ஜ் காலியானால் சார்ஜ் போட்டு பேசுவோம், விடியும் வரை பாலன்சு தீரும் வரை பேசிக் கொண்டே இருப்போம். நம் கைபேசிகளுக்கு வாய் இருந்தால் கண்டிப்பா அழுதிருக்கும்! அவ்வளவு நேரம் பேசி விட்டாலும் அழைப்பை யார் துண்டிப்பது என்று நமக்குள் சண்டை வரும், அதில் எப்பொழுதும் நீ தான் வெல்வாய்.அழைப்பை துண்டித்த அடுத்த நொடியில் 'இந்த விசயத்தை சொல்லலையே' என்று என் மனம் துடிக்கும் போது தான்
" உலகத்தின் கடைசி நாள் இன்று தானோ என்பது போல்
பேசி பேசி தீர்த்த பின்னும் ஏதோ ஒன்று குறையுதே!!"
என்ற பாடல் வரிகளின் அர்த்தம் புரிந்த பொழுதில் கூட நீ எனக்கு அழகாகத் தெரியவில்லை, அந்தத் தருணம் வரும் வரை.
திங்கள் முதல் வெள்ளி வரை கல்லூரியில் தினமும் சந்தித்தாலும் நம்மால் பேச முடியாது, இருப்பினும் என்னுடன் பேசுவதற்காக நாணய தொலைபேசியில் இருந்து என்னை அழைப்பாய், எல்லா முறையும் விடுதியை விட்டு வீட்டுக்கு வா என்றுதான் நான் சண்டையிடுவேன். இறுதியாக கல்லூரி நான்காம் ஆண்டு விடுதியை நிரந்தரமா துறந்து வீட்டுக்கு வந்தாய், எங்கள் வீட்டில் புதிதாய் தொலைக்காட்சி வாங்கிய போது கூட எனக்கு அந்த அளவு சந்தோஷம் வந்தது இல்லை.
நம் நட்பும் அடுத்த கட்டம் நோக்கி செல்ல, நான் தினமும் உன்னை வீடு வரை வந்து விடுவது வழக்கமானது. புழலில் இருந்து அசோக் பில்லர் வரை, நீ பேசுவதை கேட்டுக்கொண்டே மனம் செல்லும், வழக்கமாக எரிச்சலை உண்டாக்கும் போக்குவரத்து நெரிசலும் உன்னுடன் இருக்கையில் ஆனந்தமானது, எல்லா சந்திப்பிலும் சிகப்பு விளக்கு எறியாத என்று மனம் ஏங்கும். சன்னல் ஓரத்தில் நான் தான் உட்காருவேன் என்று அடம் பிடிப்பாயே, அந்த குழந்தைத் தனத்தில் கூட நீ எனக்கு அழகாகத் தெரியவில்லை, அந்தத் தருணம் வரும் வரை.
உன்னுடன் ரசித்த அதே பயணத்தை தொடர்ந்து, நான் தனிமையில் வீடு திரும்பும் பொழுது தான் உன் சிறப்பை உணர்ந்தேன். நீயே என் வாழ்க்கை துணையாக இருந்தால் என் வாழ்க்கை எத்தனை மகிழ்ச்சியாக இருக்கும் என்று எண்ணத் தொடங்கினேன்.
கல்லூரி பேருந்து கட்டணம் செலுத்தியும் நீ என்னுடன் மாநகரப் பேருந்தில் வருவாய், அப்படி ஒரு நாள், உனக்கு ஜுரம் என்று நினைக்கிறேன், நீ என் தோள் மீது சாய்ந்து உறங்கி விட்டாய் - அந்த தருணம் வந்தது!! உலகின் பேரழிகியாக நீ எனக்கு தெரிந்தாய்!! அத்தருணம் என் மேல் நீ வைத்த நம்பிக்கை அழகாகத் தெரிந்தது, நம் நட்பு அழகாகத் தெரிந்தது, உன் மேல் காதல் கொண்டு, உன்னுடன் வாழ ஆசை கொண்டேன்.
அடுத்த நாள், வழக்கம் போல் நான் இறுதி பெஞ்சில் அமர்ந்திருந்தேன், நீ உள்ளே நுழைந்தாய், சாம்பல் நிற சல்வார், மடிக்க பட்ட துப்பட்டா, சடை பின்னிய நீள கூந்தல், இதே போல் உன்னை முன் பல முறைக் கண்டதுண்டு, ஆனால் அன்றுதான் என்னுள் எதோ நிகழ்ந்தது, சொல்லத் தெரியவில்லை, என்னை சுண்டி இழுத்து விட்டது உன் அழகு, இந்த நொடியும் அந்த காட்சி என் மனத்தில் தோன்றி மறைகிறது.இருந்தாலும் உன்னுள் இருக்கும் எண்ணங்களை அறியாமல் இதை உன்னிடம் சொல்ல ஒரு தயக்கம், நீ என்னுடைய தோழியாக இருப்பதனாலோ என்னவோ என்னால் என் மனம் திறந்து உன்னிடம் இந்த நேசத்தை பற்றி பேச முடியவில்லை, நம் நட்பில் விரிசல் வந்து விடுமோ என்ற பயம் மறுபுறம்.
வகுப்பில் உன் பின்னால் அமர்ந்து நான் பல நாள் ரசித்த உன் கூந்தலை, திடீரென்று ஒரு நாள் பாதியாக வெட்டி விட்டாய். நான் ரசித்ததை சொல்லி இருந்தால் ஒரு வேளை வெட்டியிருக்க மாட்டாயோ என்று என் மனம் தவித்தது.இதே போல் என் காதலை சொல்லா விட்டால் என்ன நடக்குமோ என்ற பயம் வந்து விட்டது. 'ஒரு வேளை சொல்லி இருந்தால் அவள் சரி என்று சம்மதித்து இருப்பாளோ?'என்ற கேள்வியுடன் என் மொத்த வாழ்வையும் தொடர எனக்கு விருப்பம் இல்லாததால், இதோ தைரியமாக என் எழுத்தில் சொல்கிறேன்,
"நான் உன்னைக் காதலிக்கிறேன், உன்னுடன் வாழ ஆசைப்படுகிறேன்"
சினிமாவில் சொல்வது போல், 'நம் வாழ்வு சிறப்பாக இருக்கும்' என்று நான் பொய் சொல்ல மாட்டேன்,'என்னுடன் வா வாழ்வது எப்படி என்று காட்டுகிறேன்' என்று ஏத்தியும் கூற மாட்டேன். என்னை புரிந்தவள் நீ, உன்னை நன்கு புரிந்தவன் நான், பல சண்டைகள் இருப்பினும், நீ இல்லாமல் பேருந்தில் கூட பயணம் செய்யமுடியாத எனக்கு, நீ இல்லாத வாழ்க்கை பயணத்தை நினைத்து கூட பார்க்க முடியவில்லை. உனக்கும் என் மேல் ஒரு பிரியம் உண்டு என்பது எனக்கு தெரியும், இல்லை என்று மறுக்க மாட்டாய் என்ற நம்பிக்கையுடன்...
என்றும் அன்புடன்
ரூபக்
| Tweet | ||
