Monday, October 28, 2013

நித்ரா - 2. கடைக் கண்

முந்தைய பதிவுகளுக்கு 
...................................................................................................................................................................
இதுவரை

'வாட் தி ஹெல் ஸ் யுவர் ப்ராப்லெம்?' என்று தன் காலால் முன் டயரை உதைக்க, அவள் உடல் சற்று குளுங்கியது.

முதல் முறை அவள் அவனை நேராக பார்த்தாள், அவள் மெல்லிய உதடுகள் அசைய அவனை நோக்கி அவள் சொல்லியது அவனுக்கு முதலில் சரி வர உரைக்கவில்லை.

பின், அவன் மூளை அவள் சொல்லியதை மீண்டும் அசைப்போட்டது..... 

'AIDS' 
...................................................................................................................................................................

இனி 

'ஒ மை கார்ட்' என்று தன்னுள் சொல்லிக் கொண்டான் பாஸ்கர். அவனது கோபம் பரிதாபமாக மாறியது. 

ஆனால் அவள் முகத்தில் எவ்வித சலனமும் இல்லை, பல முறை பலரால் காயப்பட்டு அவளின் உணர்சிகள் செயல் இழந்துபோன உச்சக்கட்டம். பொம்மை போல் அமர்ந்திருந்தாள். அவன் தன் பியஸ்டாவில் அவளை அமரவைத்து, அந்த ஆல்டோவை tow செய்து கொண்டு, புறப்பட்டான். அவள் நோயால் பாஸ்கருக்கு ஒரு லாபம் உண்டு என்பது நித்ராவுக்கு தெரியாது. 

'நீங்க சாகனும்னு நினைக்கற அளவுக்கு இது ஒன்னும் கொடிய நோய் இல்ல.' என்று பாஸ்கர் அவளிடம் உரையாடலை தொடங்க முயற்சித்தான்.

அவளிடம் இருந்து வழக்கமான மௌனம்... 

'முழுமையா குனப்படுத்த முடியாட்டியும் உங்க ஆயுளை அதிகரிக்க முடியும்' என்று சொல்லி அவளைப் பார்த்தான், அதே மௌனம். 

'மிஸ் நித்ரா. உங்கள இந்த நிலையில தனியா விட்டுப் போக எனக்கு விருப்பம் இல்ல. உங்களோட பிரச்சனைய நீங்க சொல்லாட்டி, நான் உங்கள போலீஸ் கிட்ட தான் ஹான்ட் ஓவர் பண்ணனும்' என்று சொல்லி வண்டியை நிறுத்தினான். 

'எனக்கு தேவை மரணம்' என்று இயந்திரம் போல கூறினாள். 

வண்டியை பாலத்தில் இருந்து இறக்கி, அம்பத்தூர் நகராட்சிக்கு அருகில் இருக்கும், மகளிர் காவல் நிலையத்திற்கு சென்று, அங்கிருந்த மகளிர் இன்ஸ்பெக்டரிடம் நடந்ததைச் சொல்லி, அந்த RC புக்கை கொடுத்து, நித்ராவையும் ஒப்படைத்துவிட்டு வீடு திரும்பினான். நித்ராவின் உணர்ச்சி அற்ற முகம் அவன் நித்திரையை கெடுத்தது. காலை முதல் வேலையாக காவல் நிலையம் சென்று அவளை பார்க்க வேண்டும் என்று முடிவு செய்தான் பாஸ்கர். 

Image Courtesy - Google

'அந்தம்மா 'நித்ரா enterprises' ராம்நாத்தோட பொண்ணு. அவங்க கம்பெனி மேனேஜர் வந்து அவங்கள அழைசிக்குனு போய்டாங்க..' என்று அவனை கிளம்ப சொல்லாமல் சொன்னாள் அந்த ஏட்டு.

'அவங்க அட்ரெஸ் கிடைக்குமா?' என்று பாஸ்கர் ஏக்கத்துடன் கேட்டான். 'அண்ணா நகர்ல எங்கயோ. அந்த ரெஜிஸ்டர்ல இருக்கும் பாரு' .

அவன் அந்த முகவரியை தன் கை பேசியில் குறித்துக் கொண்டு புறப்பட ' மிஸ்டர் அந்தம்மா hand bag விட்டுட்டு போய்டாங்க.' என்றாள் அந்த பெண் போலீஸ்.

அந்த பச்சை நிற hand bag உடன் வந்து தன் சீருந்தில் அமர்ந்தான். அதை பிரித்து உள்ளே ஏதேனும் தகவல் கிடைக்குமா என்று அவனுள் ஒரு இச்சை தோன்றினாலும், அது ஒரு பெண்ணுடையது என்ற தயக்கம் அவனை தடுத்தது. அவனுடைய தேடல் அவன் தயக்கத்தை வெல்ல, அந்த பையை திறந்தான். இட்லியும் பொடியும் கிடைத்தால் போதும் என்று இருந்தவனுக்கு, ஓசியில் சரவணபவன் பூரி மசாலா கிடைத்தது போல், நித்ரா பையினுள் அவள் கைபேசி இருந்தது. ஆனால், அந்த கைபேசி உயிர் இன்றி செத்துக் கிடந்தது. தன் சீருந்தில் இருந்த charger வழியே அதற்கு உயிர் ஊட்டினான். 

உயிர் பெற்றவுடன் அதன் திரையில் தோன்றியது ஒன்பது புள்ளிகள், மறந்து போன எட்டு புள்ளிக் கோலங்கள், மீதம் இருப்பது ஸ்மார்ட் போனில் தான் என்று எண்ணி புன்னகைத்தான். அந்த புள்ளிகளை சரியான வடிவமாக மாற்றினால் தான் உள்ளே செல்ல முடியும் என்று சொல்லியது. ஒரு நொடி கூட யோசிக்காமல் ஏழு புள்ளிகளை ஆங்கில இசட்(Z) வடிவில் இணைத்தவுடன், அவனுக்கு அனுமதி கிடைத்தது. இருப்பினும் முக்கியமான தகவல்கள் அனைத்திற்கும் கடவுச் சொல் போட்டு பூட்டி வைக்கப் பட்டிருந்தது அவனுக்கு ஏமாற்றமே. அவனால் கால் ஹிஸ்டரி மற்றும் பார்க்க முடிந்தது. 

அதில் நேற்று அதிமாக கால் செய்யப் பட்டது மூன்று எண்களுக்கு.
  1. Hubby
  2. Dad
  3. Swetha
Hubby '44' என தொடங்க, அவள் கணவன் UKவில் இருக்கிறான் என்றும், Dad '49' என தொடங்க அவள் தந்தை ஜெர்மனியில் இருக்கிறார் என்றும் யூகித்தான். ஸ்வேதாவின் எண் சென்னை சேர்ந்தது என்பதால் அதை குறித்துக் கொண்டான். 

அவன் அந்த முகவரிக்கு சென்று, இரண்டாவது மாடியில் இருந்த வீட்டின் அழைப்பு மணியை அடித்து காத்திருந்தான். இரண்டாவது முறையும் அடித்தான், எந்த சத்தமும் இல்லை. கதவை தட்டலாம் என்று தொட்டவுடன் அது திறந்துக் கொண்டது. மழை காலத்தில், துணிகளை வீட்டினுள் உலர வைக்கும் பொழுது வருமே அது போல் ஒரு வாடை உள்ளே வீசியது. நடந்தால் கால் அடி தெரிவது போல் தூசி படிந்திருந்தது. 

பல கோடிகளுக்கு சொந்தக் காரி, ஏன் இப்படி இருக்க வேண்டும் என்ற கேள்வி அவனுள் பலமாக எழுந்தது. படுக்கை அறையில், தரையில் ஒரு மூலையில் உட்கார்ந்திருந்த நித்ரா, இவன் வருவதைக் கண்டும், பொம்பை போலே அமர்ந்து இருந்தாள். 'மிஸ் நித்ரா யுவர் hand bag.' என்று அவள் அருகில் வைத்தான். அவள் அதை பார்க்கக் கூட இல்லை. 

'நித்ரா. நான் உங்களுக்கு எப்படியாவது உதவனும்னு நினைக்கறேன். அதுக்கு நீங்க முதல்ல உங்க மனம் துறந்து பேசணும். இப்ப நீங்க எனக்கு எதுவும் பதில் சொல்ற நிலைமையில இல்லைன்னு எனக்கு தெரியுது. உங்க வலியை என்னால புரிஞ்சிக்க முடியுது. உங்களுக்கு எப்ப என் உதவி தேவை பட்டாலும், நீங்க இந்த நம்பர்க்கு அழைக்கலாம்' என்று தான் கார்டை அவள் மடியில் வைத்து, 'வருகிறேன்' என்று புறப்பட்டான்.

அந்தக் கார்டை கடைக் கண்னால் பார்த்தாள், அதில் அவன் பெயர், கைபேசி எண், மின்னஞ்சல் என எல்லா விபரங்களும் இருந்தாலும். ஒன்று மட்டும் அவள் புருவத்தை உயர்த்தியது....

Institute for AIDS Eradication, Chennai.

தொடரும்.... 

7 comments:

  1. வணக்கம்
    தொடர் அருமையாக உள்ளது மேலும் தொடர எனது வாழ்த்துக்கள்....

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. சுவாரஸ்யத்துடன் செல்கிறது... தொடர்க...

    ReplyDelete
  3. சற்றே இடைவெளிக்குப் பின் அடுத்த பகுதி.

    சீக்கிரமே அடுத்த பகுதியினை வெளியிடுவீர்கள் என நம்புகிறேன்..

    ReplyDelete
  4. மிக விறுவிறுப்பாக செல்கிறது ரூபக்... தேர்ந்த எழுத்தாளனின் நடை.. விட்டுவிடாமல் தொடரவும்... தொடர்கதையை படிப்பவர்கள் குறைவு மேலவும் அவர்களுக்கு மறந்து விடாமல் இருக்க வாரம் ஒரு பகுதி (அ) இரண்டு என்றால் பதிவு செய்தால் நலமாய் இருக்கும்

    ReplyDelete
  5. நல்ல கதை விறுவிறுப்பாக செல்கிறது. எழுத்தின் நேர்த்தி மிக நன்றாக இருக்கிறது. வாழ்த்துகள்.

    ReplyDelete
  6. சுவாரசியமாக செல்கிறது தொடர் தொடர்க...

    ReplyDelete
  7. ரெண்டாம் பாகமும் நல்லாப் போகுது.. கடைசி டிவிஸ்ட் செம...

    ReplyDelete