Monday, October 14, 2013

நித்ரா - 1.புறவழிச் சாலை

மேக மூட்டங்கள் சந்திரனை கடத்திச் செல்ல, பேய் காற்று சென்னை புறவழிச்சாலையின் ஓரத்தில் இருந்த குப்பை கூளங்களை நடனமாடச் செய்து கொண்டிருந்தது. சட்டென்று மழைத்துளிகள் அர்ஜுனன் வில்லில் இருந்து சீறிப் பாய்ந்த அம்பு போல் பூமியைத் தாக்கின. தார் சாலையை துளைக்க முடியாத அந்த நீர் அம்புகள், சாலை எங்கும் பரவின. சில விநாடிகளில், சென்னைப் புறவழிச் சாலை ஒரு நீரோடை போல் மாறியது. விரைந்து பாய்ந்து கொண்டிருந்த வாகனங்கள், மகளிர் கல்லூரியை கடக்கும் வாலிபர் வண்டிகளின் வேகத்தை விடவும் குறைந்து, பார்க்கிங் விளக்குகள் மின்ன, தண்ணீரில் மிதந்து சென்றன.  

மழையின் வேகம் அதிகரிக்க, பல வாகனங்கள் ஓரங்கட்டி நிற்கத் தொடங்கின. ஒரு மாருதி ஆல்டோ மட்டும் கட்டுப்பாடின்றி, சென்னை புறவழிச் சாலையில் இருக்கும்  அடையாறு மேம்பாலத்தின் மேல் உரசி நின்றது. சில நிமிடங்கள் கழித்து, சுமார் முப்பது வயது வாலிபன் ஒருவன், தன் போர்ட் பியஸ்டாவை அந்த ஆல்டோ பின் நிறுத்தினான். அந்த ஆல்டோ கட்டுப் பாடின்றி வந்தது தெரிந்திருந்தால் ஒரு வேளை இவன் தன் சீருந்தை அதன் பின் நிறுத்தாமல் இருப்பானோ என்னமோ. மழையின் சீற்றம் குறைந்தபாடில்லை. மின்னல் மின்னும் சமயம் தான் அவனால் எதிரில் இருந்த அந்த சிவப்பு ஆல்டோவைப் பார்க்கவே முடிந்தது. 'சின்ன சின்ன ஆசை' என்று ரகுமானின் இசை அவன் சீருந்து எங்கும் நிறைய, அவன் இருக்கையில் சாய்ந்து, மழை நிற்க காத்திருந்தான்.                          

அடுத்து மின்னிய மின்னலில் அவன் கண்ட காட்சி, அவன் வயிற்றில் ஒரு கம்புளிப் பூச்சை நெழிய வைத்தது. வண்டியை விட்டு இறங்கலாமா வேண்டாமா என்று யோசிக்க, அடுத்த நொடி அவன் பாதங்கள் நீரில் பதிய, அந்த ஆல்டோவின் அருகில் சென்று, வெள்ளை நிற சல்வாருடன், அந்த பாலத்தின் விளிம்பில் நின்றிருந்த பெண்ணை லாவகரமாக அணைத்து தூக்கி, தன் சீருந்தினுள் அவளை செலுத்தி, கதவை அடைத்தான். ஈரம் சொட்ட சொட்ட ஓட்டுனர் சீட்டின் மேல் அமர்ந்து, சென்ட்ரல் லாக்கை ஆன் செய்தான்.       

அந்தப் பெண் எந்த வித அசைவும் இன்றி சாலையை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் தலை முடி ஈரத்தில் மிகவும் சிறியதாக தோன்றியது, அவள் ஆடையில் இருந்து சொட்டும் நீர், மிதியடியை நனைத்துக் கொண்டிருந்தது. மழையின் வேகம் படிப் படியாக குறையத் தொடங்கியது.

'என் பெயர் பாஸ்கர்'..... மௌனம்.... 'உங்களை நான் எந்தக் கேள்வியும் இப்போ கேட்கக் போறதில்லை... எங்க போகணும்னு சொல்லுங்க. நான் ட்ராப் பண்றேன்' என்று சொல்லி முடித்து அவள் பதிலை எதிர்பார்த்துக் காத்திருந்தான்.

'நரகம்' என்று அழுத்தமாக சொன்னாள். அவள் குரலில் இருந்த இனிமையை அந்த சூழ் நிலையில் பாஸ்கரால் ரசிக்க முடியவில்லை. அவளின் பதில் அவனுக்கு கோபத்தை தூண்டியது. டாஷ் போர்டில் இருந்த சிகரெட்டை எடுத்து பற்ற வைத்தான். சிகரெட் புகை அவள் சுவாசத்திற்கு இடையூறு செய்ய, அதை வெளியே வீசினான்.

'அந்த ஆல்டோ உங்களுதா ?' என்று அவளை பார்த்து கேட்டான். அவளிடம் எந்த அசைவும் இல்லை, தன் பியஸ்டாவை அந்த ஆல்டோ முன் சென்று நிறுத்தினான். ஆல்டோவின் கதவு திறந்திருந்தது, உள்  சென்று பார்த்தான், டாஷ் போர்டில், RC புக் நகல் இருந்தது. அதில் அந்தப் பெண்ணின் சற்று பழைய புகைப் படம் போல் தெரிந்தது, பெயர் நித்ராதேவி என்று இருந்தது.

இயல்பாக கிடைத்த அனுபவம் என்றால்,  'நித்ரா' என்பது ஸ்லோவாகியா நதியின் பெயரா அல்லது தூக்கம் தரும் தேவியின் பெயரா என்று அவன் மனதில் ஒரு பட்டி மன்றம் கூட நடந்திருக்கும்.   அதற்குள் அவள் அந்த காரில் இருந்து வெளி வந்து ஆல்டோவில் ஏறினாள். பாஸ்கர் 'கேன் யு டிரைவ்' என்று கேட்கும் பொழுது அவள் வண்டியை ஸ்டார்ட் செய்தாள். வண்டி வேகமாக அமபத்தூர் நோக்கி பாய்ந்தது.

ஆல்டோ சென்றவுடன் தான் பாஸ்கர், தன் கையிலேயே அந்த RC புக் இருப்பதை உணர்ந்தான். நாளை முகவரி விசாரித்து அவள் வீட்டிற்கே சென்று கொடுத்து விடலாம். அவள் கதையை தெரிந்து கொள்ள இது நல்ல சாக்காக இருக்கும் என்று எண்ணி அவன் பியஸ்டாவை ஸ்டார்ட் செய்தான்.

அம்பத்தூர் தொழிற்பேட்டை மேல் செல்லும் பாலம், பாஸ்கருக்கு மிகவும் பிடிக்கும்.  அம்பத்தூரின் போக்குவரத்து நெரிசலுக்கு டாட்டா சொல்லி நேராக செல்வது அந்த பாலம்.

அதே ஆல்டோ அங்கு நின்றிருப்பதைக் கண்டு அவன் வண்டியை நிறுத்தினான். அதற்குள் அந்தப் பெண் வண்டியை விட்டு இறங்க, இவன் விரைந்து சென்று அவள் பாலத்தின் விளிம்பில் ஏற முயற்சிக்கும் பொழுது நிறுத்தினான். 

Image Courtesy - Google
அவள் முகத்தில் ஒரு எரிச்சல் தெரிந்தது. அவளை ஆல்டோவினுள் தள்ளினான். இம்முறை அவனால் அவன் கோபத்தை அடக்க முடியவில்லை.

'வாட் தி ஹெல் ஸ் யுவர் ப்ராப்லெம்?' என்று தன் காலால் முன் டயரை உதைக்க, அவள் உடல் சற்று குளுங்கியது.

முதல் முறை அவள் அவனை நேராக பார்த்தாள், அவள் மெல்லிய உதடுகள் அசைய அவனை நோக்கி அவள் சொல்லியது, அவனுக்கு நன்கு பழக்கமான வார்தையென்றாலும், அது முதலில் சரி வர அவனுக்கு உரைக்கவில்லை.

 பின், அவன் மூளை அவள் சொல்லியதை மீண்டும் அசைப்போட்டது.....

'A......I.......D.......S............ AIDS !'                       
           
தொடரும்.........  

9 comments:

  1. ஆஹா தொடர் கதையா? ஆரம்பமே விறுவிறுப்பு......

    தொடருங்க ராம்....... நானும் தொடர்கிறேன்.

    ReplyDelete
  2. 'A......I.......D.......S............ AIDS !' aaaaaaaaaaaa???????????

    சமூக விழிப்"புணர்வு" கதை போல இருக்கு?

    ReplyDelete
  3. ஆரம்பமே வித்தியாசமா இருக்கே...!

    ReplyDelete
  4. பார்த்துப்பா ஜாக்கிரதையா இருங்க?

    ReplyDelete
  5. அடடா... இதற்கு போய் நரகமா...? தொடர்கிறேன்...

    ReplyDelete
  6. தொடரா...கஷ்டம் ரூபக் தொடர்வது....வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. பின், அவன் மூளை அவள் சொல்லியதை மீண்டும் அசைப்போட்டது.....

    'A......I.......D.......S............ AIDS !'
    >>
    அதி பயங்கர கதையா இருக்கும் போல இருக்கே!!

    ReplyDelete
  8. கிரைம் கதைகளில் கதா பாத்திரங்கள் ஜாஸ்தி பேச மாட்டாங்களோ...

    ReplyDelete