சன்னல் திரைகள் மூடிய இருட்டு அறை .ஒற்றைக் கட்டில். மனித உடம்பு முழுவதும் போர்வையால் மூடியது போல் ஒரு உருவ அமைப்பு. மயான அமைதி . திடீர் என்று 'ஆசைய காத்துல தூது விட்டு ........ ' என்ற இளையராஜாவின் பாடல் ஓசை அறை எங்கும் பரவியது .
தன் கைபேசியை கையில் எடுத்தான் மாதவன். துயில் தெளியாத அவன் முகம் , கைபேசி அவன் காதில் கூறிய ரகசியம் கேட்டதும் தெளிந்தது. தன் நண்பனின் தந்தை இயற்கை எய்திய செய்தி அவனை படுக்கையை விட்டு கிளப்பியது . அதிர்ந்து போய் இருந்தான். நிதானித்தான். இன்று தனக்கு நேர்காணல் இருப்பதால் தன்னால் செல்ல இயலாததை எண்ணி வருந்தினான்.
கல்லூரியின் இறுதி ஆண்டில் ஒரு மிகப் பெரிய மென்பொருள் நிறுவனதில் campus interview மூலம் தேர்வாகினான். சரியாக ஒரு ஆண்டு கழித்து அவனுக்கு வேலையில் சேர அழைப்பு வந்தது. மூன்று மாதங்கள் பயிற்சிக்கு பிறகு அவனுக்குக் கிட்டியது- நான்கு மாத ஓய்வு சம்பளத்துடன். இதை bench period என்பார்கள் . கிரிக்கெட் விளையாட்டில் பதினோரு பேர் விளையாடும் போது, ஐந்து பேர் மைதானத்துக்கு வெளியே இருந்து வேடிக்கை பார்ப்பார்களே, இதுவும் அது போலதான்.
ப்ராஜெக்ட்இல் சேர நடக்கும் இரண்டாம் கட்ட நேர்காணல் தான் இன்று நம் மாதவன் சந்திக்க இருப்பது. கைபேசி, ஆசைய மீண்டும் காத்துல தூது விட்டுக்கொண்டிருக்க, குளித்து கொண்டிருந்த மாதவன் விரைந்து வந்து அழைப்பை எடுத்தான் .
"............................................"
"வாழ்த்துக்கள் ! . சுக பிரசவமா. என் தோழி எப்படி இருக்கா ? "
"......................................................."
"உங்க வீடு இனி கலகலப்பாயிடும். ட்ரீட் எப்போ ? "
"..............................................................."
"சீக்கிரம் மீட் பண்ணுவோம் "
இந்திய நாட்டின் மக்கள் தொகையைக் கடவுளாலும் அசைக்க முடியாது என்று தன்னுள் எண்ணிக்கொண்டு, அலுவலகம் புறப்படத் தயாரானான். இந்தக் கதையை இங்கிருந்து மாதவன் வழி நடத்துவான்.
வேகமாக நடந்தேன் பஸ் ஸ்டாப்பை நோக்கி. நான் சாலையைக் கடக்கும் முன் பேருந்து என்னைக் கடந்தது. இனி இரண்டு பேருந்துகள் மாறிச் செல்ல வேண்டும். எக்ஸ்பிரஸ் போர்டு வரும் வரை காத்திருந்தேன். மாசக் கடைசி, deluxe பஸ்இல் செல்ல முடியாத கட்டாயம். இரண்டாவது எக்ஸ்பிரஸ் பஸ்ஐ பிடித்து சிப்காட் வாசலில் இறங்கினேன். ஒரு பெரும் படையுடன் சாலையைக் கடந்தேன். பண்டிகைக் காலத்தில் மாம்பலம் ரயில் நிலையத்தில் இருந்து ரங்கநாதன் தெரு நோக்கி செல்லும் படை போல.
இங்கு செல்லும் எல்லாப் பெண்களிடமும் ஒரு ஒற்றுமை உண்டு. சால்வை போன்ற துணியால் கழுத்து முதல் தலை வரைச் சுற்றி கட்டிககொண்டு, கண்களை கூலிங் கிளாஸ் போட்டு மறைத்துக்கொண்டு ஒரு தீவிரவாதியைப் போல் செல்வர். அழகை பாதுகாக்கிறார்களாம். ஒசாமா பின் லேடன் கூடத் தன் முகத்தை இவ்வாறு மறைத்திருக்க மாட்டார். இந்த பாரதி கண்ட புதுமைப் பெண்கள், தம் உயரத்தை கூட்ட ஹீல்ஸ் உடன் இருக்கும் செருப்புகளை அணிந்து என் முன் சிங்காரநடை போட்டுச் சென்றுகொண்டிருந்தனர். இவ்வகை செருப்பை வீட்டில் ஆணி அடிக்கவும் பயன்படுத்துவர் போலும்.
வெள்ளிக்கிழமை என்றால் அனைவரும் பிசினஸ் casual அணியலாம். இன்று வெள்ளிக்கிழமை என்பதால், உடல் அமைப்புக்கு பொருந்தாத உடைகளை அணிந்து வந்த (என்னை வெறுப்பு ஏற்றும்) மகளிரையும், பல தொந்தி கணபதிகளையும் பார்க்க முடிகிறது. ஓர் ஆண்டிற்குப் பிறகு நானும் இப்படித்தான் ஆயிடுவேனோ ?
உள்ளே செல்ல access வேண்டும். இங்கு எல்லாமே ஒரு கார்டு தான். உங்கள் ஜாதகத்தையே சொல்லி விடும் அறிவியல் அதிசயம் இது. இந்த கார்ட்ஐ வீட்டில் மறந்தால், நீங்களும் வீடு திரும்பலாம். எல்லாம் எண்கள், இயந்திரம் என்று அதிவேகமாக மாறிக்கொண்டிருக்கிறது உலகம். பெயர் கூடத் தேவை இல்லை, எண்கள் மட்டும் போதும். என் வருகையை ஒரு call மூலம் பதிவு செய்தேன். சிறிது நேரம் கழித்து ஒருவர் வந்து என்னை உள்ளே அழைத்தார்.
நடுவில் மேசை, சுற்றி எட்டு நாற்காலிகள் (சக்கரம் பொருந்தியவை. சக்கரகாலி என்று தான் பெயர் சூட்ட வேண்டும்) கொண்ட அறைக்கு உள்ளே சென்றார். அவரை பின் தொடர்ந்தேன். வெளி காற்று உள்ளே வர ஒரே வழி AC ஷாப்ட் மட்டும் தான்.என் நேர்காணல் தொடங்கியது. எல்லா கேள்விகளுக்கும் சரியான பதில்கள்.
"Madhavan please wait outside. We will call you back with the results in sometime "
அவனுக்கும் தமிழ் தெரியும், எனக்கும் தெரியும். அப்புறம் எதுக்கு இங்கிலீஸ்ல பேசனும். எனக்கு புரியல, நாட்டுல பல பேர் இப்படிதான் அலையிராங்க. தமிழ் தெரியாதவங்க கிட்ட பேசுங்க, நான் எதுவும் கேட்க மாட்டன். தமிழ் அவமானம் இல்ல, ஒரு அடையாளம்னு எப்ப எல்லாருக்கும் புரியப் போகுதோ. சரி நம்ம கதைக்கு திரும்ப போவோம்.
எல்லா கேள்விகளுக்கும் நான் சரியான பதில் சொன்னதுக்கு ஒரு காரணம் உண்டு.நான்கு மாதங்களுக்கு முன்பு .............
பயிற்சி முடிந்து உற்சாகத்துடன் வேலையில் சேரலாம் என்று சென்ற எனக்கு ஏமாற்றம் தான். காரணம் எனக்கு முன் சென்ற ஆண்டு பயிற்சி முடித்தவர்களே இன்னும் வேலையின்றி இருந்தனர். இருபது நாட்கள் தொடர்ந்து என் RMGஐ நோக்கி படை எடுத்தேன். (Resource Management Group தான் என் போன்றவரை , ஆட்கள் தேவைப்படும் ப்ராஜெக்ட்களுக்கு map செய்பவர்கள் ). என் படை எடுப்பு தினமும் 'இன்று போய் நாளை வா ' என்றே முடிந்தது. என் படை வலிமை இழந்து வீ ட்டில் ஓய்வு எடுக்க தொடங்கியது .
திடீர் என்று ஒரு நாள் நான்கு மாதங்கள் கழித்து , என்னைப் போருக்கு அழைத்தனர் (முதல் நேர்காணல் ).
போர்க்களத்தில் ...........
".................................................."
"அது ..... அது வந்து ...................."
"............................................."
"மறந்து விட்டேன் "
".............................................."
" தெரியாது "
".................................................."
அமைதி . என் சேனைகள் பயிற்சி இன்றி கடும் தோல்வியைத் தழுவின .
" தம்பி ! என்ன நெனச்சிட்டு இண்டெர்விவ் வந்த? இப்படி இருந்தா உன்ன கண்டிப்பா யாரும் செலக்ட் பண்ண மாட்டங்க. நான் சொல்ற வெப்சைட்அ நோட் பண்ணிக்கோ . அதுல ஸ்டாண்டர்டா 100 questions இருக்கும். அதையாச்சு படி "
முன்காட்சிப் பதிவு முடிந்தது.
அந்த நூறு கேள்விகளுக்கு பதில் கண்டு பிடிக்கவே மூன்று நாட்கள் ஆனது. அதன் பின் சந்தித்த இரண்டாம் போர் தான் இது.மணி ஒன்றானது , வயிறு கத்த தொடங்கியது. சாப்பிட சென்றேன்.
campus உள்ளேயே ஆறு ஹோட்டல்கள். ஆனால் அனைத்திலும் கூட்டம். ஒரு ஹோட்டலில் நுழைந்தேன். எங்கும் Q வரிசை தான். சாப்பாடு டோக்கன் வாங்க 20 நிமிடங்கள். சாப்பாடு வாங்க 30 நிமிடங்கள். டேபிள்ல இடம் கிடைக்க 25 நிமிடங்கள். சாப்பிட்டு முடிக்க 5 நிமிடங்கள். அவளோ சாப்பாடு கொடுத்தார்கள். இதையெல்லாம் பார்த்த போது எனக்கு ஜெயில்ல கைதியா இருப்பது மேல்னு தோணுது .
வெற்றி செய்தி கிட்ட மணி ஐந்து ஆகிவிட்டது. நாளை முதல் வேலையில் சேரச் சொன்னார்கள். மறுநாள் சென்ற போது ஒருவரிடம் "இவர்தான் உன் லீட் " என்று அறிமுகம் செய்யபட்டேன். அவரும் என்னைப் பற்றி எல்லாம் கேட்டு தெரிந்துகொண்டு, " Gowri will be your mentor , the one sitting there ". அவர் கை காட்டிய திசையில் இருந்தவள் , 24 வயது - மெல்லிய உடல் அமைப்பு - நீண்டக் கருங் கூந்தல், அழகு என்ற அனைத்து இலக்கணமும் பொருந்திய பெண்.
'ஆண்டவன் படைச்சான் , என் கிட்ட கொடுத்தான் ,
அனுபவி ராஜான்னு அனுப்பி வைச்சான் '
நேராக சென்று "கௌரி ?" என்று வினவிய பொது, " Hi ! I am Gowri Shankar " என்று தன்னை அறிமுகப்படுத்தினான் அவள் பக்கத்தில் (முன் நான் கவனிக்காத ) ஆண்மகன். எடிசன் கண்டுபிடுத்த பல்ப் மிக பிரகாசமாக ஒளித்தது.
ஆறு மாதங்களுக்குப் பிறகு.....
நாள் : 2013 இல் ஒரு நாள்
கிழமை : தெரியாது
மணி : நடு சாமம்
பகலில் சூரிய வெளிச்சத்தில் உள்ளே வந்த நியாபகம். வெளிய வந்தால் வெறும் இருட்டு. நைட் சர்வீஸ் பஸ் பிடிச்சி என் ஸ்டாப்இல் இறங்கினேன். கைபேசி இறந்து விட்டது ( சார்ஜ் இல்லை ). என் வீட்டிற்கு நடந்து செல்லும் வழியில் தென்பட்ட மனித இனத்தின் ஒரே உறுப்பினர் நான்தான். நாய்கள் எல்லை சண்டைக்காக குரைத்து கொண்டிருக்க, என் வீட்டை நெருங்கினேன். கேட் பூட்டி இருந்தது. சுவர் ஏறி குதிக்க வேண்டிய கட்டாயம். திட்டமான உயரம் உள்ள சுவரனாலும் , ஜீன்ஸ் போட்டு ஏற சற்று சிரமமாக இருந்தது.
பக்கத்துக்கு வீட்டுக் கெழவி என் திசையை நோக்கி " திருடன் ! திருடன் ! எல்லாரும் வாங்க. திருடன் ! ".
ஆசிரியர் குறிப்பு :
மென்பொருள் துறையில் நொந்து நூடுல்ஸ் ஆகும் எல்லா நண்பர்களுக்கும் இந்தக் கதை சமர்ப்பணம்.
Tweet | ||
Feel like story is half-completed. But nice in description of things. I am also good in Tamil writing but factors made me to "comment" the story in English :( :( :(
ReplyDelete