Showing posts with label சிறுகதை. Show all posts
Showing posts with label சிறுகதை. Show all posts

Monday, November 16, 2015

வலி (சிறுகதை)

எந்தப் பெண்ணுக்கும் கிடைக்காத அந்த அரியாபாக்கியம் என்றோ அல்லது  துரதிஷ்டம் என்றோ சொல்ல முடியாத ஒரு நிகழ்வு எனக்கு நேர்ந்தது.  அந்தச் செய்தியை கேட்டு, நள்ளிரவில் தனியாக காட்டு வழியில் செல்லும் வண்டியின் இரு சக்கரத்திலும் காற்று போனது போல், எனது வாழ்க்கை அந்த நொடி ஸ்தம்பித்துப் போனது. பலரும் தவமாய் தவமிருந்து பெரும் அந்த வரம் எனக்கு சாபமாகவே வந்தது. எனது பெற்றோர், கணவர் உற்றார் உறவினர் அனைவரின் முன்பு என் இதழ்கள் போலியாக புன்னகை செய்ய உள்ளம் என் நிலையைக் கண்டு குமுற, 'நான் சிரித்துக்கொண்டே அழுகின்றேன்' என்ற பாடல் வரிகளின் அர்த்தத்தை உணர்ந்தேன். இப்போது நீங்களே அதை யூகித்து இருப்பீர்கள் என்று நம்புகிறேன். ஆம், நீங்கள் நினைத்தது சரி தான். நான் கருத்தரித்துள்ளேன். என்னை நீங்கள் திமிரு பிடித்தவள் என்று எண்ணியிருக்க வேண்டும். உங்கள் மீது எனக்கு கோவம் இல்லை. உங்கள் கோணம் அது, என் கோணம் வேறு.            

பெண்களை படிதாண்ட விடாத ஒரு சமூகத்தில் பிறந்தாலும், பெற்றோரின் துணையுடன், பள்ளி கல்வியில் எங்கள் ஊர் பள்ளியில் முதல் மாணவியாக தேர்ச்சி பெற்றேன். நான் பெற்ற மதிப்பெண்களுக்கு சென்னையில் முன்னிலை கல்லூரிகளில் நுழைய வாய்ப்பு கிட்டியபோதும், எனது சமூகத்தை எதிர்த்து என்னால் பக்கத்துக்கு ஊரில் இருக்கும் கல்லூரி வரை தான் செல்ல முடிந்தது. நான் பேருந்து ஏறி தினமும் கல்லூரி செல்வதைக் கண்டு பொறுக்க முடியாத என் உறவெனக் கூறிக் கொள்ளும்  பலர் எனது படிப்பை நிறுத்தும்படி என் தந்தைக்கு நெருக்கடி கொடுக்கத் தொடங்கினர். என் பிடிவாதத்தால் மட்டுமே, நான்கு ஆண்டுகள் நீடித்தது என் கல்லூரி வாழ்க்கை. கல்லூரியில் படிக்கும் பொழுதே ஒரு பிரபல மென்பொருள் நிறுவனத்தில் பணியும் கிட்டியது. பணியிடம் சென்னை. வீட்டில் ஒரு பிரளயம் வெடித்தது.

சினந்தேன், சினுங்கினேன், உருகினேன், அழுதேன், கெஞ்சினேன், கதறினேன். எது பலித்தது என்று தெரியாது, என் அன்னை எனக்கு துணை நிற்க பெரிய கனவுக் கோட்டைகளுடன் சென்னையை நோக்கி பயணித்தேன். சென்னை என்னை ஏமாற்றவில்லை. என் ஏக்கங்களை தீர்த்தது. பல தரப்பட்ட மக்களை சந்தித்தேன், பல கதைகளை கேட்டேன், நான் இழந்த பருவங்களை எண்ணி வருந்தினேன். கட்டுப்பாடு இல்லாத வாழ்கையில் சகல சந்தோஷங்களுக்கு வாயில் கதவு திறந்தே இருந்தபோதும் ஒரு கணமும் என் நிதானத்தை இழக்கவில்லை நான். அயாரது உழைத்தாலும், பெண்கள் ஆண்களுக்கு கீழ் தான் என்று முகத்தில் அறையாத குறையுடன் அந்த கார்ப்பரேட் சமூகம் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை எனக்கு நினைவூட்டிக்கொண்டிருந்தது.

பல அடிகள் பட்டு, ஒருவழியாக பணியில் முன்னேறும் தருணம் வந்தபொழுது, வீட்டில் இருந்து ஒரு செய்தி வந்தது. சென்னையின் எனது சுதந்திர வாழ்க்கைக்கு முடிவு கட்ட. சில விஷயங்களில் என்னைப் போல் அதிஷ்டக்காரி யாரும் இல்லை. ஏன் தெரியுமா?. சொல்கிறேன். பல மாதங்கள் பல ஆண்டுகளா மாப்பிள்ளைத் தேடியும் வரன் அமையாமல் பலர் தவிக்க, எனக்கு மட்டும் முதல் வரனே கைகூடியது உங்களைப் பொறுத்தவரை அதிர்ஷ்டம் தானே.

திருமணத்திற்கு முன்னரே வேலை விட வேண்டி எனது புகுப்போகும் வீட்டார் கட்டளையிட எனது தந்தை அடிபணிந்தார். இது நான் எதிர்பார்த்தது தான், ஆனால் இவ்வளவு விரைவில் அல்ல. இருப்பினும் ஒரே ஆறுதல் தந்த விசயம் என்னை மணக்கப் போகும் அவர் பணிபுரியும் அயல் நாட்டிற்கு என்னையும் அவர் உடன் அழைத்துச் செல்ல முடிவு செய்தது தான். கல்யாணம் மற்றும் எல்லாச் சடங்குகளும் என் மாமியாருக்கு பல குறைகளுடன் முடிய, திருமணமாகி இரண்டாம் வாரம் என்னைப் பின் வரச்சொல்லி விட்டு என் கணவர் பறந்து சென்றார்.

சென்னையில் எனக்கு கிடைத்த நடப்புகளைக் கொண்டு எனது வீசா ஏற்பாடுகளை விரைந்து செய்தேன். வீசா நேர்காணலையும் சிக்கலற்று முடித்துவிட்ட மகிழ்ச்சியுடன் மருத்துவ சோதனைக்கு சென்ற பொழுது தான் அந்தச் செய்தி எனக்கு கிடைத்தது. கருவுடன் விமானம் ஏற மருத்துவம் பச்சை கொடி காட்டினாலும், வீசா தர அந்த நாடு மறுத்தது. என்னை தவிர்த்து அனைவருக்கும் மகிழ்ச்சி பிறந்தாலும், 'கல்யாணம், குழந்தை என்ன வாழ்க்கை இது' என்ற எனது வாழ்க்கை மீது எனக்கு வெறுப்பு தான் தோன்றியது.                        

கருவுற்று கணவனைப் பிரிந்து தனிமையில் போராடுவதன் வலி எனக்கு புரிந்தது அந்த ஆரம்ப காலங்களில் தான். நீங்கள் மாமியார் கொடுமைகள் பற்றி பல கதைகள் படித்திருபீர், பல தொடர்கள் பார்த்திருப்பீர் ஆனால் அவற்றில் ஒன்றிலும் ஒவ்வாத சம்பவங்கள் தான் எனக்கு அவர் வீட்டில் நடந்தது. எனக்கு பிறக்கப் போவது நிச்சயம் பெயரன் தான் என்று எதோ ஒரு நிமித்தக்காரன் மூலம் முடிவு செய்து கொண்ட என் மாமியார், என்னைக் கையில் வைத்து தாங்கத் தொடங்கினார். இதைப்போய் கொடுமை என்று சொல்லுகிறாயே உனக்கு எவ்வளவு நெஞ்சழுத்தம் என்று தானே நினைக்கின்றீர். அளவுக்கு மீறும் போது அன்பும் கொடுமையாகத் தான் மாறியது எனது விஷயத்தில். என்ன புரியலையா?. உங்களுக்கு எல்லாவற்றிற்கும் உதாரணம் சொன்னால் தான் விளங்குகின்றது. உங்களுக்கு மார்கண்டம்  தெரியுமா?. நீங்கள் அசைவ பிரியர் என்றால் தெரிந்திருக்க வாய்ப்பு இருக்கு. மூன்று மாதங்களுக்கு முன்னால் இதேக் கேள்வியை என்னிடம் கேட்டிருந்தால் 'எனக்கு கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் மார்த்தாண்டம் தான் தெரியும்' என்று சொல்லியிருப்பேன்.

முட்டை வாசனை என்றாலே பக்கத்து தெரு வரை ஓடும் எனக்கு, பெயரன் வளமுடன் பிறக்க வேண்டும் என்று சகல உயிரினங்கள் மற்றும் தாவரங்களை சமைத்து தினமும் விருந்தளித்தார் என் மாமியார். அந்த அப்பாவி ஆட்டின் எந்த பகுதியையும் உண்ணாமல் விடுவதில்லையா நீங்கள்?. முதல் முறை அந்த மார்கண்டத்தை பற்றி உண்ட பின் தான் அறிந்தேன், உடனே வாந்தியும் எடுத்தேன். பேறு கால வாந்தி என்று அவரே முடிவு செய்து மீண்டும் அதை என் வாயில் திணித்தார் என் கணவரின் அன்பு அன்னை. என் நடையில் தப்பு, அமர்வதில் திருத்தம், படுப்பதில் கவனம் என்று ஒன்றல்ல ரெண்டல்ல அடுக்கிக்கொண்டே போகலாம் அவர் தன் பெயரன் பால் செய்த அன்புத் தொல்லைகளை.        

உனக்கு எதிலும் குறைகள் தானா சந்தோஷம் என்பதே கிடையாதா என்று உங்கள் மனதில் ஓடும் எண்ண அலைகளை என்னால் உணரமுடிகின்றது. என் வயற்றில் இருந்த குழந்தையை, கருப்பு வெள்ளை படமாக கணினி திரையில் மெல்ல அசையக் கண்ட போது எனக்கு கிட்டிய இன்பத்தை வர்ணிக்க வார்த்தைகள் கிடைக்கவில்லை. பத்து நாள் தவிர்த்து, கைபேசியில் மட்டுமே கண்ட கணவன், கணவன் இல்லாது மாமியார் வீட்டில் சிறை, என சிதைந்து போன எனது கனவுக் கோட்டைகளை எண்ணி கண்ணீர் பெருகிய பொழுது, 'உனக்கு நான் இருக்கிறேன்' என்பது போல, என் செல்வம் என்னை முதன்முறை வயிற்றில் உதைத்து சைகையால் உணர்த்தினான். அதன்பின் எப்பொழுதெல்லாம்  என் மனம் கணக்கின்றதோ, அப்பொழுதெல்லாம் அவன் உதைத்தான். இப்படியே இன்பமும் துன்பமும் ஒரு சேர கலந்தோடி ஏழு மாதங்கள் கடந்து, யாரும் எதிர் பாராத ஒரு சிக்கல் உருவானது.      

தலை பிரசவத்திற்கு என்னைத் தாய் வீடு அழைத்துச் செல்ல வந்த என் பெற்றோரை, 'அனுப்ப முடியாது'  என்று விரட்டி அடித்தார் என் மாமியார். அவருக்கு என் மீது அவ்வளவு பாசம் என்று தவறாக நினைத்து விட வேண்டாம். அவரது பெயரன் நலமுடன் உலகில் அடியெடுக்கும் வரை என்னை எங்கும் அனுப்ப மாட்டேன் என்று பிடிவாதம் பிடித்தார். இரு தரப்பினருக்கும் சண்டை வலுத்து, ஊர் பஞ்சாயத்து வரை சென்று, இறுதியில் நான் பிரசவத்திற்கு தாய் வீடு செல்ல வேண்டும் என்று தீர்ப்பானது. இதில் வேடிக்கை என்னவென்றால், என் தொடர்பான எந்தவொரு பிரச்சனைகளிலும் கடைசி வரை யாருமே என் விருப்பத்தை கேட்டதில்லை. என் மாமியாரின் அன்புதொல்லைக்கும் என் பெற்றோரின் சுய மரியாதைப் போருக்கும் இடையில் சிக்கி சின்னாபின்னமானவள் நான்.  

தாய் வீட்டில் சுகந்திரத்துடன் இருந்தாலும், கர்ப காலத்தின் இறுதி சில வாரங்களில் உடல் எடை கூடி உட்காரவும் முடியாமல் படுக்கவும் முடியாமல், மிக மெதுவாக நாட்கள் சென்று ஒரு வழியாக மருத்துவர் கொடுத்த கெடு நெருங்கியது.  பொதுவாக அனைவருக்கும் குறித்த தேதிக்கு இரண்டு நாட்கள் முன்னதாகவே வலி வரும் என்பர், எனக்கு என் மாமியார் உருவில் சுனாமியே வந்தது. அவர் என் வீட்டிற்கு வந்து எங்களுடன் தங்கி, வீட்டில் யாரும் யாருடனும் பேசாமல் இருந்த அந்த இரண்டு நாட்கள் நரகம். என் அம்மா ஒன்று சொன்னால் வீம்பிற்கு என்றே இவர் அதற்கு முரணாக ஒன்று சொல்வார். இவர்கள் சண்டையில் எனக்கு மனவேதனை வந்ததே ஒழிய, வரவேண்டிய வலி வரவில்லை. குறித்த தேதி இன்று, மாலை வரை வலி வராததால் மருத்துவமனைக்கு சென்று விட்டோம். மருத்துவர் வலி வர சற்று நேரம் காத்திருக்க வைத்த நேரத்தில், 'என்னிடமே இருந்திருந்தால் இந்நேரம் என் பெயரன் அழும் சத்தம் கேட்டிருக்கும்' என்று என் மாமியார் தொடங்கிய வாசகம், என் அன்னைக்கும் அவருக்கும் பெரும் வாக்குவாதத்தை கிளறியது. என்ன கொடுமை இது இறைவா! என் குழந்தை தோன்றும் பொழுதே இந்த உலகின் மீது வெறுப்புடன் பிறக்க வேண்டுமா?. இல்லை, வேண்டாம்.  இந்த வாசகங்கள் கேட்காதபடி உன் கருணையால் என்னைச் சில நாட்கள்  செவிடாக்கி விடு. 

Saturday, November 14, 2015

அவன் (சிறுகதை)

எல்லாக் கதைகளையும் போல், 'இது ஒரு உண்மைச் சம்பவத்தை தழுவி எழுந்த கற்பனை' என்று புணைப் பாத்திரங்களுடன் இந்தக் கதையை சொல்ல எனக்கு விருப்பம் இல்லை என்பதால் என் வாழ்வில் நடந்த இந்த உண்மை சம்பவத்தை நடந்தவாறே உங்களுடன் இங்கு பகிர்கின்றேன்.  

நான் எப்பொழுது வட சென்னை  சென்றாலும், தாம்பரம் சானடோரியம் ரயில் நிலையத்தின் அருகில் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு ரயிலில் சென்று திரும்புவது வழக்கம். சென்னையின் மக்கள் மற்றும் வாகன நெருக்கடியில் சிக்கித் தவிக்காமல்  தென் சென்னையில்   இருந்து வட சென்னைக்கு ரயிலில் சென்று திரும்புவது உசிதமாகவே கருதுவேன். அன்று சனிக்கிழமை என்பதால், வழக்கமாக ரயிலில் செல்பவர் கூட்டம் இன்றி காலியாக இருக்கும் வேளை, என்று நினைத்து ரயில் நிலையம் சென்ற எனக்கு அங்கு கடலென தேங்கி நின்ற மக்கள் கூட்டத்தைக் கண்டு ஒரு கணம் மிரண்டேபோனேன். பின்பு விசாரிக்கையில் தான், தண்டவாள பழுது பார்க்கும் பணிகள் நடப்பதால், ரயில்கள் ஒரே தண்டவாளத்தில் செலுத்தப்பட்டு அவற்றின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்ட செய்தி தெரிந்தது. ரயிலில் பெருகி வழிந்த மக்களின் வியர்வை மணத்தில் தான் தொடங்கியது எனக்கான அன்றைய தினம்.

பல வித பொருட்களை பல பாணியில் கூவி விற்போர், திண்பண்டங்கள் விற்போர், பாட்டு பாடி பிச்சை கேட்போர், வலுக்கட்டாயமாக பணம் வசூலிக்கும் திருநங்கைகள் என அடிக்கிக் கொண்டே போகலாம் ரயில் பயணங்களின் சுவாரசியங்களை.   ரயில் பயணம் தரும் சுகமும் வேறு எந்தப் பயணத்திலும் கிடைப்பதில்லை. அன்று எனது அலுவல்களை முடித்து மீண்டும் ரயிலில் வீடு திரும்பும்போது நடந்த அந்த சம்பவம் தான் இந்த தமிழ் சமூகத்தின் மீது எனது பார்வையை மாற்றியது.  

பர்மா பஜாருக்கு அருகில்  அத்தோ(பர்மா வகை உணவு) சாப்பிட்டு, சென்னை பீச் ரயில் நிலையத்தில் தாம்பரம் செல்ல தயாராக இருந்த ரயிலில் வேகமாக ஓடி ஏறினேன். ரயிலில் கூட்டம் சற்று மந்தமாக இருந்த பொழுதும் உட்கார இடம் இல்லாததால், கதவுக்கு அருகில் நின்று கொண்டேன். பார்க் ரயில் நிலையத்தில் சுமாரான கூட்டம் ஏற ரயில் சற்று நிரம்பியது. கூட்டம் அதிகமானபோதும் என்னால் எனது இடத்தை தக்க வைக்க முடிந்ததை எண்ணி நான் கொண்ட பெருமிதம் மாம்பலம் வரையில் தான். வடக்கில் கங்கை வற்றா நதியென்றால், தெற்கில் ரங்கநாதன் தெருவிலும் அதை சார்ந்த அடுக்குமாடி கட்டிடங்களைக் கொண்ட அங்காடிகளிலும் என்றும் மக்கள் கூட்டம் வற்றுவதில்லை. இவர்கள் நகரின் பல பகுதிகளில் கிளைகளை தொடங்கினாலும், மண்ணை பிரியா பூர்வக்குடிகள் போல மக்கள் படையெடுப்பு தி.நகருக்கு தான். மாம்பலம் ரயில் நிலையத்தில் ஏறிய மக்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு, ரயில் பெட்டியின் மத்தியில், ஒரு காலை தரையில் ஊன்றி, மறுகாலை காற்றில் நிறுத்தி தவம் செய்யும் முனிவர் போல் எனது நிலைமை நொடிப்பொழுதில் மாறியது.

              
இன்னும் இருபது நிமிடம் தம் கட்டினால் குறைந்த சேதாரத்துடன் வீடு திரும்பி விடலாம் என்று எனக்கு நானே ஆறுதல் சொல்லிக்கொண்டு எனது காற்சட்டையில் இருக்கும் பணப்பையின் சௌக்கியத்தையும் விசாரித்துக் கொண்டேன். சைதையில் ரயில் புறப்படும் போது கதவருகில் நின்றுகொண்டிருந்த இரண்டு கண்கள் என்னையே காண்பது போல தோன்றியது. எனது கண்களை அந்தக் கண்களோடு பொருத்தினேன், அந்தக் கூடலில் நான்கு கண்களும் இமைக்கவில்லை. எனது கண்களை வேறு திசையில் திருப்பி கைபேசியை நோண்டுவதுபோல்  பாசாங்கு செய்து, ஓரக்கண்ணால் அந்த திசையை நோக்கினேன், அந்தக் கண்கள் என்னையே நோக்கிக்கொண்டிருந்தன. 

பரங்கிமலை வந்ததும், கூட்டம் சற்று குறைய, அந்தக் கண்கள் என்னை நோக்கி நகரத் தொடங்கின. பெரிதும் கலவரம் இல்லாமல் இயல்பாக அந்தக் கண்களைக் கொண்ட உருவம் நகர, எனது சட்டை கழுத்து சங்கிலியை மறைக்குமாறு அதை மேலே தூக்கி விட்டுக் கொண்டு, கைபேசியை இறுக பிடித்துக் கொண்டேன். எனது ஒற்றைக் கால் தவம் முடிந்து, இரு கால்களை தரையில் ஊன்றி நிற்க, அந்தக் கண்களின் இரண்டு கால்கள் எனது கால்களுக்கு நடுவில் வந்து நின்றன. சுற்றி பல வித மக்களின் எண்ண அலைகள் ஓடினாலும், என்னையும் அந்தக் கண்களையும் சுற்றி ஒரு கவசம் போல காணமுடியா பிம்பம் ஒன்று அமைந்து தனிமை நிலையை உண்டாக்கியது. 

அந்தக் கண்களின் எண்ணம் புரியாமல் நான் தவிக்க அதன் வாய் தமிழில், 'நீங்க இன்போசிஸ் ஆ' என்று கேட்க, நான் 'இல்லை' என்று வார்த்தையால் சொல்லும் முன் வேகாமாக தலையை அசைத்து சைகை செய்தேன். 

'உங்கள எங்கயோ பார்த்த மாதிரி இருக்கு' என்றான்,

 நான் 'ழே' என வார்த்தையின்றி விழிப்பதை அவன் கண்டு அடுத்த கேள்வியை 'நீங்க தாம்பரமா?' என்று தொடுத்தான். 

நான் 'ஆம்' என்றேன். 

'எந்த தெரு' என்று  கணை போல் பாய்ந்தது அவனது அடுத்த கேள்வி. இப்பொழுது எனது உடல் நாலாப் பக்கமும் கூட்ட நெரிசலால் அழுத்தப் பட்டிருந்தது, இங்கு குறிப்பிட முடியாத சில அங்கங்களிலும் சற்று அழுத்தம் தோன்ற, எனது முகத்தில் சங்கடம் சலனமானது.     

அவன் எனது முகவரியைக் கேட்டவுடன் எனது நுண்ணறிவு விபரீதத்தை உணர்த்த, 'வால்மீகி தெரு' என்று தப்பான தெருவை சொல்லி தப்பித்து விட்டோம் என்று சற்றே இளகும் பொழுது ரயில் பல்லாவரம் வந்தடைந்தது.     

அவன் கண்ணில் ஆயிரம் வாட் விளக்கொளியுடன் 'நானும் தாம்பரம் தான். வீடு தேடிட்டு இருக்கேன். உங்க தெருவுல வாடகலாம் எவ்வளோ?' என்று வினவினான். 

இன்னும் ஒரே ஒரு ரயில் நிலையம் தான் என்று உற்சாகத்துடன் 'ஆறாயிரம் முதல் பத்தாயிரம் வரை இருக்கும்' என்றேன். 

'வீடு காலியா இருந்தா சொல்லுங்க. என்னோட நம்பர் சேவ் பண்ணிகொங்க. உங்க நம்பர் சொல்லுங்க நான் மிஸ்டு கால் தரேன்' என்று எனது இதழ் என் கைபேசி எண்ணை உதிற காத்திருந்தான்.

வேறு வழியின்று எனது கைபேசி எண்ணை நான் சொல்ல, அவன் எனது கைபேசிக்கு அழைத்து 'பிரகஷ்ணு சேவ் பண்ணிகொங்க. உங்க பேர்?' என்று அவன் கேட்க, எனது பெயரை சொல்லிக் கொண்டே எனது காற்சட்டையில் இருந்த கைபேசியை எடுக்கும் பொழுது தான் கவனித்தேன், எனது அங்கங்களை அழுத்திக்கொண்டிருந்தது அவனது உடல். அந்த இடத்தில் அழுத்தம் இருப்பதை அவனிடம் சொல்லி விலக சொல்ல தர்ம சங்கடமாக இருந்தது. அப்படியே விட்டுவிட்டால் எனக்கு அதில் விருப்பம் இருப்பது போல் அவன் எண்ணி விட்டால்? என்ற அபாய எண்ணமும் தோன்றியது. என் மனம் குழம்பி நிற்க ரயிலும் சானடோரியத்தில் நிற்க, விரைந்து வெளியேறினேன். அந்த ரயிலில் நடந்ததை நினைத்த பொழுது உடல் முழுவதும் மயிர் சிலிர்த்தது. சொல்ல முடியாத சோகம் மனதை சூழ்ந்தது.         


வீடு சென்று தூங்கும் முன் பல முறை யோசித்தேன். ஏன் ஒருவரை தவறாக எண்ண வேண்டும். கூட்டம் அதிகம், இயல்பாக பட்டிருக்கலாம். உண்மையாகவே அவன் வீடு தேடிக் கொண்டிருக்கலாம். பல படங்கள் பார்த்தும் பல கதைகள்  கேட்டும் இந்த மனம் குறுகலாகவே எண்ணங்களை ஓட விடுகின்றது என்று என்னை நானே திட்டிக் கொண்டேன்.

இப்படி ஒரு சம்பவம் நடந்தைதையே மறந்து போய் எனது இயல்பு வாழ்க்கையில் இருந்த ஒரு நாள், ஒரு பெயர் இல்லா எண்ணில் இருந்து அழைப்பு வந்தது.

மறுமுனையில் 'ஹலோ நான் பிரகாஷ். அன்னைக்கு ட்ரைன் ல மீட் பண்ணோமே', 

நான் 'ஹும்ம்',  

அவன் 'வீடு எதாவது இருக்கா?'      

நான் 'இல்ல. கொஞ்சம் பிஸியாக இருக்கேன். அப்பறம் பேசறேன்' என்று மறுமுனையில் பேசும் முன் அழைப்பை துண்டித்து, அந்த எண்ணை 'DNA'(Do Not Attend), என்று சேவ் செய்துவிட்டேன்.

தினமும் அந்த எண்ணில் இருந்து தவறாமல் அழைப்பு வரும். நான் எடுக்காமல் நிராகரித்துக் கொண்டிருக்க, ஒரு நாள் அவனே வேறு ஒரு எண்ணில் இருந்து அழைத்தான். 

'என்ன ரொம்ப பிஸியா. போன எடுக்கறதே இல்ல' என்று கேட்டான்.

'வோர்க் கொஞ்சம் டைட்டா இருக்கு' என்று சலித்தேன்.

'வீட்ல யாரும் இல்ல. பசங்க எல்லாம் பார்ட்டி பண்றோம், நைட் வரீங்களா?  என்றவுடன் எனக்கு தூக்கி வாரிப் போட்டது.

'இல்ல வேல இருக்கு. இதோ வரேன் சார்' என்று பாசாங்கு செய்து அழைப்பை துண்டித்தேன்.

இம்முறை அவனது எண்ணங்களும் அன்று ரயிலில் நடந்ததும் சுதி சேர்ந்தது. சென்னையிலும் இந்த நாகரீகம் வந்து விட்டதை முதலில் மனம் ஏற்கவில்லை என்றாலும், மாறி வரும் சூழல் அதை ஏற்றுக்கொள்ளத் தான் செய்தது. பெண்களுக்கு மட்டுமல்ல, இங்கு ஆண்களுக்கும் பாலியல் வன் கொடுமைகள் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன என்பது உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும்?            

Wednesday, December 17, 2014

The Virgin Husband (சிறுகதை 21+ )

ஒரு வேகத்தில் அந்த விடுதி வரை சென்று விட்டாலும், அறைக்குள் செல்ல விடமால்  ஒரு வித பயம் கலந்த பதற்றம் என்னைத் தடுத்தது. இந்த நொடி என் வாழ்க்கை மாறுவதற்கான வினைகள் நியூட்டனின் விதிப்படி மூன்று மாதங்களுக்கு முன்பு, நான் என் நண்பன் ஒருவனை சந்தித்த பொழுதே தொடங்கிவிட்டது. 

அது ஒரு ஞாயிற்று கிழமையின் மதிய வேளை, சென்னையின் சமீபத்திய அடையாளங்களான மால்களில் ஒன்றான பினிக்ஸ் மாலில் என் நண்பன் மதனை சந்திக்க காத்திருந்தேன். மதன் கல்லூரியில் எனக்கு அறிமுகமாகி, குறைந்த காலத்தில் மிகவும் நெருங்கியவன். கல்லூரி முடிந்த பின் அவன் பெங்களூரு சென்றுவிட, கிட்ட தட்ட ஆறு வருடங்களுக்கு பின் அவனை சந்திக்கப் போகும் மனவெழுச்சியுடன் காத்திருந்தேன்.     

வாழ்வில் மிக சில மனிதர்களை  எத்தனை காலம் கடந்து சந்தித்தாலும், எந்தவித இடைவெளியுமின்றி விட்ட இடத்தில் இருந்து உறவை மீண்டும் அதே பொலிவுடன் தொடரமுடியும். மதனும் எனக்கு அப்படிப் பட்ட ஒரு சூழலை ஏற்படுத்த எங்கள் உரையாடல் பொழுதுபோக்கு, தொழில், அரசியல், சமூகம் என்று தொடங்கி ​ பல அந்தரங்களையும் வெளிக்கொணர்ந்தது.
  
'என்னடா சொல்ற!! கல்யாணமாகி ரெண்டு வருஷமாகியும் உன் பொண்டாட்டி உன்ன நெருங்க விடலையா?' என்று அதிர்ந்து போனான் மதன்.

'அவளுக்கு வேண்டியது எல்லாம் வாங்கிக் கொடுத்து, எங்க எப்ப போகவும் முழு சுகந்திரம் கொடுத்து, மொத்த அன்பையும் செலுத்தியும்,  நான் அவள நெருங்கினா, 'நீங்க தாலி  கட்டனதுனால உங்க கூட படுக்கணுமா விபச்சாரியா?' அப்படின்னு ஒரு கேள்வி கேட்பா பாரு, அந்த நிமிஷம் ஊசி வச்சி கூத்தன பலூன் மாதிரி என் நெஞ்சு போசுங்கிடும்' என்று சொல்லும் போதே என் கண்ணில் இருந்து வர யோசித்த நீரை விரலால் துடைத்துக்கொண்டேன்.   

'ஒரு முறை நீயே அவல போர்ஸ் ' என்று மதன் முடிபதற்குள் 'பாலியல் வல்லுறவுல  எனக்கு உடன்பாடு இல்ல. அது ஒரு மென்மையான உணர்வு, ரெண்டு பேருக்கும் அது ஒரு சுகானுபவமா இருக்கணும்னு விரும்பறேன்' என்று கூறி அவனை மேலும் பேச விடாமல் தடுத்தேன்.     

அடுத்த ஐந்து நிமிடம் நாங்கள் இருவரும் எதுவும் பேசவில்லை. மதனும் ஆழ்ந்த சிந்தனைக்குள் இருப்பவன் போல் தென்பட, எங்கள் மௌனத்தை நானே உடைத்தேன்.

'என்னதான் இப்படி நல்லவன் போல பேசினாலும். எனக்குள் இருக்கற காம மிருகத்த இப்பயெல்லாம்  கட்டுப்படுத்த முடியல. எந்த ஒரு பெண்ணைப் பார்த்தாலும் எனக்குள்ள ஒரு இச்சை உணர்வு ஊருது. ஒரு முறை ஆசை தீர உடலுறவு கொண்டா தான் இந்த நரக வேதனையில் இருந்து என்னால வெளியவரமுடியும்னு தோணுது. காசுகொடுத்து போகலாம்னா எதாவது நோய் வந்துடுமோன்னு பயமா இருக்குடா' என்று என் மனதில் உள்ளதை உள்ளபடி அவனிடம் உடைத்தேன்.

மதனோ சற்றும் தயங்காமல் 'நீ நினைக்கற மாதிரி ஒரு முறைன்னு தான் நான் காமத்தின் உள்ள போனேன், ரெண்டு வருஷங்கள் முடிந்தும் வெளிய வர முடியல. வாரத்துல நாலு நாலாவது காமம் கழிக்கலனா தூக்கம் வராது. அது ஒரு வகையான இன்பம் தரும் இம்சை. அடக்க முடியா அவஸ்தை. என்னால உனக்கு ஒரு வழி செய்ய முடியும். ஆனா இந்த முடிவு எடுக்கறதுக்கு முன்னாடி, காமம் உன்னை ஒரு மோக அடிமையா மாத்திடும்ங்கரத மனசுல நிறுத்திக்கோ' என்று என் பதில் வர காத்திருந்தான்.

அந்த நொடி எனது காம அவஸ்தையை அழிக்க வேண்டும் என்பது மட்டும் தான் என் மனதில் இருந்தது, எதுவானாலும் பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று, 'என்ன வழி அது சொல்லு' என்றேன். அதற்கு பின் என்னை அவன் சீருந்தில் அழைத்துக்கொண்டு, ஒரு ஆள் நடமாட்டம் இல்லாத முட்டு சந்திற்கு அழைத்துச்சென்று, அந்த தகவல்களை கூறினான். முதலில் ஆச்சரியமாகவும் நம்ப முடியாதபடி இருந்தாலும் அவனது சொந்த அனுபவங்கள் என்பதால் நம்பாமல் இருக்க முடியவில்லை. எல்லா விதிமுறைகளை சொல்லி அவன் 'சம்மதமா?' என்று கேட்க, நானும் சம்மதித்து விட்டு, முன்பணமும் செலுத்திவிட்டேன்.

அன்று இரவு வழக்கம் போல் என் மனைவி அவள் தாய் இல்லத்திலேயே தங்கி விட்டாள். ஒரு மாதத்தில் சேர்ந்தாற்போல் நான்கு நாட்கள் அவள் என்னுடன் தங்கினாலே அதிசயம். தனிமையில், மதன் சொல்லிய தகவல்களை என் மனம் அசைபோடத் தொடங்கியது. அந்த அமைப்பின் பெயர் 'ஆனந்த பரவசம்'. அவர்களுக்கு முகம் முகவரி இரண்டுமே கிடையாது. திருமணமாகி கணவனால் இன்பம் கிடைக்காத பெண்களையும், மனைவியால் இன்பம் கிடைக்காத ஆண்களையும் காம இச்சைக்காக இணைப்பது தான் அந்த அமைப்பின் செயல்பாடு. மிகவும் அந்தரங்கமாக, நம்பகமான சில பணம் கொழுத்த உறுபினர்களை மட்டுமே வைத்து அவர்கள் செயல்படுகின்றனர். அனைத்து உறுப்பினர்களின் அடையாளமும் ரகிசயமாக பாதுகாக்கப்படுவது தான் அந்த அமைப்பின் வெற்றி. அதில் உறுப்பினராக, ஏற்கனவே இருக்கும் ஒரு உறுப்பினரின் சிபாரிசுடன் ஒரு லட்ச ரூபாய் ரொக்கமும் தேவை.

மேலும் புதிதாய் சேருபவரின் பூர்வீகம் வரை அனைத்தையும் ஆராய்ந்தே அவரை சேர்த்துக்கொள்கின்றனர். உறுபினர்களாக ஏற்றுக்கொண்டவுடன், போலி ஆவணங்களுடன் வாங்கிய சிம் கார்டுடன் ஒரு ப்ளாக்பெர்ரி கைபேசி கொடுக்கப்படும். எல்லா உறுபினர்களுக்கும் மாதாந்திர மருத்துவ சோதனையும் நடத்தப்படும், ஏதேனும் நோய் அறிகுறிகள் இருந்தால் அந்த நபரை அமைப்பில் இருந்து நீக்கி விடுவர். ஒவ்வொரு வேளைக்கும் இரு பாலாரிடமும் இருந்து தலா ஐயாயிரம் ரூபாய் வாசூலிக்கப் படும். பெரிய ஸ்டார்  விடுதிகளில் ரூம் புக் செய்யப்பட்டு, அதற்கான தகவல்கள் இரண்டு மணி நேரம் முன்பு குறுந்தகவலாக வரும். பணம் காசோலையாக எந்த இடத்தில செலுத்த வேண்டும் என்ற தகவலும் குறுந்தகவலில் தான். இந்த அமைப்பின் பின் யார் செயல்படுகிறார்கள் என்றும், சக உறுப்பினர் யார் என்ற அடையாளமும் எந்த ஒரு உறுப்பினருக்கும் தெரியாதபடி ரகசியமாக இன்றுவரை உள்ளது. காசு கொடுத்து, மிருகங்கள் போல் காமம் கழித்து வாழ்வதே இவர்களின் அந்தரங்க வாழ்க்கை.

பணம் செலுத்தி, மருத்துவ பரிசோதனைகள் முடிந்து, ஒரு மாதத்திற்கு பின் எனக்கு முதல் குறுந்தகவல் வந்தது. சென்னையின் பிரபல ஸ்டார் விடுதியில் அன்று இரவு எனக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. எப்பொழுதும் போல் அன்றும் என் மனைவி அவள் தாய் வீட்டில் இருக்க, எனக்கு செல்வது எளிமையாகிப் போனது. இருந்தும் மனைவிக்கு துரோகம் செய்யும் குற்ற உணர்ச்சி என்னை அரிக்க வந்த பொழுது, என்னுள் இருக்கும் காம மிருகம் அதைக் கொன்றுவிட்டது. ஒரு வேகத்தில் அந்த விடுதி வரை சென்று விட்டாலும், அறைக்குள் செல்ல விடமால்  ஒரு வித பயம் கலந்த பதற்றம் என்னைத் தடுத்தது.

'இதையும் ஒருமுறை' என்று அறையினுள் நுழைந்தவுடன், எனக்கு முன்னமே அந்தப் பெண் வந்து காத்திருந்ததை உணர்ந்தேன். படுக்கைக்கு அருகில் இருந்த மேசை விளக்கின் மங்கிய ஒளியில் அந்தப் பெண்ணின் உருவம் மட்டும் தெரிந்தது. மதன் சொன்ன, 'அறிமுகம் எதுவும் வேண்டாம். பேசாமல் இருப்பது நலம்' என்ற எச்சரிக்கைகளை எண்ணிக்கொண்டே படுக்கைக்கு அருகில் நகர்ந்தேன். அவளை நெருங்கியவுடன் என்னை கட்டி படுக்கையில் இழுத்தாள், விளக்கின் ஒளி அவள் மேல் பட்ட நிமிடம் எனது உச்சச்ந்தலையில் ஆணி வைத்து அடித்தது போல் இருந்தது.

இரண்டு ஆண்டுகளாக என்னுடன் குடும்பம் நடத்தாமல் எனக்கு மனைவியாக வாழும் அந்த சனியனின் முகம். என்னை சற்றும் எதிர் பாராத அவள் அதிர்ச்சியில் அசைவின்றி உறைந்துபோனாள். ஒரு ஆணுக்கே உரிய எனது கர்வம் அந்த நிலையில் ஏமாற்றப்பட்டதன் வலி, ஆத்திரமாக உருமாறி, வெறியாக தலைக்கு ஏறி, அருகில் இருந்த விளக்கை எடுத்து  அவள் முகத்தை நோக்கி அடித்தேன். அந்த விளக்கு அவள் கழுத்தை கிழித்ததில், ரத்தம் வேகமாக வடிய, அவள் உயிரற்ற சடலமானாள். ரத்தம் முழுவதும் வடியும் வரை அந்த அறையிலேயே காத்திருந்தேன். ஏமாற்றியது அவள் தவறா இல்லை ஏமார்ந்து போனது என் தவறா?                                                  

கொட்டும் அடை மழையில், சாலையின் விதிகளை புறக்கணித்து, சீருந்தின் வேகத்தை கூட்டி, ஆத்திரம் என் அறிவை மறைக்க, என்னுள் இருக்கும் மிருகம் அந்த உயிரை, என் வாழ்க்கையை நாசம் செய்த அந்த சனியனை, வதைத்தும் அடங்காமல் என்னை செலுத்திக்கொண்டிருக்க, பயங்கர சத்தத்துடன் கண்ணைக் கூசும் சோடியம் வெளிச்சம் என் எதிரில்......

Monday, June 16, 2014

முகண் - சிறுகதை

***************************************** BASED ON A TRUE STORY  *******************************
இந்தக் கதை ஒரு உண்மை சம்பவத்தை தழுவி எழுந்த கற்பனை என்றபோதும், இதில் வரும் சம்பவங்களும் கதாப்பாத்திரங்களும் முழுக்க முழுக்க கற்பனையே.   
*******************************************************************************************************
05-May-2049

வழக்கத்திற்கு மாறாக உற்சாகத்துடனும், தன் கணவன் இன்று அனுமதிச் சீட்டுடன் வருவான் என்ற நம்பிக்கையுடனும் தனது படுக்கை அறையை வாசனை மெழுகுவர்த்திகளால் அலங்கரித்துக்கொண்டு இருந்தாள் ஈகா. அவளது சிந்தனை முழுவதுமே அவள் கணவன் மீதும் அவன் கொண்டு வரவிருந்த அனுமதிச்சீட்டின் மீதுமே இருந்தது. அன்று காலை மின்னஞ்சல் வழியே அரசாங்கத்திடம் இருந்து 'குழந்தைப்பேறு அனுமதி விண்ணப்பம்' வந்ததில் இருந்து அவளுக்கு தலைகால் புரியவில்லை, திருமணமாகி பதினைந்து ஆண்டுகள் குழந்தைப் பெற்றுக்கொள்ள அரசாங்க அனுமதிக்காக காத்திருந்தவள் அல்லவா. 

இந்தியாவில் பெருகிவரும் மக்கள் தொகையை கட்டுப்படுத்த, ஜீவா தலைமையிலான சர்வாதிகார அரசு 2030 ஆம் ஆண்டு உத்தரவு ஒன்று பிரப்பித்தது. "அரசு அனுமதி இல்லாமல் யாரேனும் பிள்ளை பெற்றுக்கொள்ள கூடாது. மீறினால் குடியுரிமை பறிக்கப்பட்டு, அன்டார்டிக்காவிற்கு நாடுகடத்தப் படுவர்" என்ற பயங்கர ஆணையை பிறப்பித்திருந்தது. நாள் ஒன்றிற்கு நூறு குழந்தைகள் மட்டும் பிறக்க அனுமதி கொடுப்பது என்று தீர்மானிக்கப்பட்டு, அதை வெற்றிகரமாக நடைமுறைப் படுத்தி, பதினைந்து ஆண்டுகளில் உலகின் மிகப் பெரிய வல்லரசாக இந்தியா உருப்பெற்றுள்ளது. 

ஈகா தன் கணவன் சிவா வருவதை கண்காணிப்பு திரையில் கண்டவுடன், கதவிற்கு பின் சென்று மறைந்துகொண்டு, அவன் உள்ளே வந்தவுடன் அவனை பின் புறமாக கட்டியணைத்தாள். சிவா சற்றும் உணர்ச்சியின்றி அவளை விளக்கிவிட்டு, சோபாவில் சென்றமர்ந்தான். ஏமாற்றத்துடன் அருகில் சென்ற ஈகாவிடம், எதுவும் பேசாமல், அந்த அனுமதிப் பத்திரத்தை வழங்கினான். அதைப் பார்த்தவுடன் அதிர்ந்து போன ஈகா, அவளது மோதிரத்தின் முத்திரை சிவாவின் கன்னத்தில் பதியும்படி நல்ல பலமாக ஒரு முறை அறைந்தாள். 

சிவா கொண்டுவந்த அனுமதியில் குழந்தைப்பெறுவதற்கு மாறாக குழந்தையை தத்து எடுத்து வளர்ப்பதற்கான அனுமதி இருந்தது தான் அவளது சினத்தின் காரணம். குழந்தை பெற்றுக்கொள்ளும் அனுமதி கிடைத்தபோதிலும், அனாதை குழைந்தையை தத்தெடுத்து வளர்க்கும் அனுமதியை மாற்றி வாங்கி வந்ததால் அவனை தகாத வார்த்தைகளால் திட்டத் தொடங்கினாள். எதையும் பொருட்படுத்தாத சிவா, தன் வீட்டு பரணையில் இருந்து ஒரு சிறிய நாற்பது பக்க நோட்டை கொண்டுவந்து அவளிடம் கொடுத்து அதைப் படிக்கச் சொன்னான். அதில் தமிழில் எழுதி இருக்கவே ஈகா நிதானமாக எழுத்துக் கூட்டி படிக்கத் தொடங்கினாள்.

30-April-2014

சீனு, சீனி, ஸ்ரீனி, சீனுவாசன், ஸ்ரீனிவாசன் என்று பலரும் என் பெயரை பலவாறு உச்சரிக்கும் அதிர்ஷ்டம் கொண்ட சீனிவாசன் நான். தென்காசி காற்றை சுவாசித்து வளர்ந்த நான் சென்னையின் உஷ்ணக் காற்றை உட்கொள்ள போராடிக் கொண்டிருக்கிறேன். பலரைப்போல் அறிவியலில் இளங்கலை பயின்று, முதுகலையில் கணினி பயன்பாட்டு அறிவியல் பயின்று, சமீபத்தில் பல சர்ச்சைகளுக்கு உள்ளான சிறுசேரி சிப்காட் தொழில்நுட்ப பூங்காவில் இருக்கும் ஒரு தனியார் மென்பொருள் நிறுவனத்தில், பல்லாயிரகணக்கான மனித மந்தையில் ஒருவனாக வேலை பார்க்கும், இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டின் பழக்க வழக்கங்களுக்கு சற்றும் மாறாத ஒருவன். 

என்ன வேலை என்று கேட்கின்றீர்களா? உங்களுக்கு மட்டும் சொல்கின்றேன், யாரிடமும் கூறிவிடாதீர்கள், அது பரம ரகசியம். அமெரிக்காவில் இருக்கும் ஒரு வர்த்தக நிறுவனத்தின், மென்பொருள் இயந்திரத்தை பழுதுபார்க்கும் பணி. அந்த இயந்திரத்திற்கும் ஒரு பெண்ணுக்கும் சில ஒற்றுமைகள் உண்டு. ஒரு பெண் எப்பொழுது சிரிப்பால் இல்லை அழுவாள் என்று யாராலும் கணிக்க முடியாதோ, அது போலத்தான் அந்த இயந்திரமும். எந்த நேரத்தில் பழுதாகும் என்று யாராலும் கணிக்க முடியாத ஒரு மாய வஸ்து. எங்கள் நிறுவனம் அந்த அமெரிக்க நிறுவனத்துடன் போட்ட ஒப்பந்தத்தின்படி உடனுக்குடன் பழுது பார்க்க வேண்டும் இல்லையேல் எங்களைப் பதம் பார்ப்பார்கள். இங்கு பழுது பார்க்கும் என்னைப் போன்றவர்கள் தான் இந்த அமைப்பின் அடிமட்டம். எப்படி ஒரு காலத்தில் இந்திய கிரிக்கெட் அணி வென்றாலும் தோற்றாலும் காரணம் கங்குலி என்பரோ, அப்படித்தான் இங்கு நாங்கள். எங்களுக்கு பழியிலும் புகழிலும் என்றுமே குறைவில்லை. 

நேற்று (29-April-2014 அன்று) அந்த இயந்திரத்தில் எனக்கு மட்டுமே தெரிந்த ஒரு பயன்பாடு பழுதாகிவிட, அதை நான் மட்டுமே சீர் செய்ய முடியும் என்ற நிலை தோன்றிய கட்டாயத்தின் பேரில், நேற்று காலை பத்து மணிக்கு அலுவலகம் வந்த நான், அலுவலகத்தை விட்டு, எனது இருசக்கர வண்டியில் புறப்படத் தயாரான பொழுது மணி நள்ளிரவுக்கும் அதிகாலைக்கும் இடைப்பட்ட மூன்று, நாள் 30-April-2014. வன்பொருள் இயந்திரத்தை நாள் முழுவதும் பழுது பார்க்கும் அளவிலான சோர்வும், மன உளைச்சலும், மென்பொருள் இயந்திரத்தை ஒரு மணி நேரம் பழுதுபார்த்தாலே அடைந்து விடுவோம். அப்படியென்றால் பதினைந்து மணி நேரம் தொடர்ச்சியாக வேலை செய்ததால் நான் பெற்ற சோர்வை நீங்களே கணக்கிட்டுக் கொள்ளுங்கள். அலுவலக அடித்தள பார்க்கிங் செல்ல வெளியில் வரும் பொழுது தான் மழை வெளுத்துக் கட்டிக் கொண்டிருந்ததை கவனித்தேன். உள்ளே இருப்பவர்கள் வெளியில் நடக்கும் நிகழ்வுகளால் வேலையில் இருந்து கவனம் சிதறி விடக் கூடாது என்பதற்காக, ஒலி, ஒளி, காற்று இவை எதுவும் உள் நுழையாதபடி வடிவமைக்கப்பட்ட ஒரு நாகரீக கண்ணாடிச் சிறை அது.

மழையில் நான் நனைந்தாலும் பரவாயில்லை எனது ஆண்டிராய்டு கைபேசி நனையக் கூடாது என்று எண்ணிக் கொண்டு எனது கைபேசியை கையில் எடுக்கும் பொழுது தான் கவனித்தேன் அதுவும் என்னைப்போல் உயிரற்று கிடந்ததை. முன்பெல்லாம், எனது பேசிக் மாடல் நோக்கியா கைபேசியில் ஒரு முறை முழு சார்ஜ் ஏற்றி விட்டால் போதும் குறைந்தது மூன்று நாள் வரை உயிருடன் இருக்கும். இந்த ஆண்டிராய்டு கைபேசி வந்ததில் இருந்து, எங்கு சென்றாலும் போனுடன் சேர்த்து சார்ஜரையும் கொண்டு செல்ல வேண்டியுள்ளது. இன்று சார்ஜரை மறந்ததால் இந்த நிலை. அதே நிமிடம் தான் நான் மறந்த மற்றொன்று நினைவுக்கு வந்தது. அது என்னுடைய இரவு உணவு. பித்து பிடித்தவன் போல் நீரும் அன்ன ஆகாரம் இன்றி வேலை செய்ததை எண்ணி வருந்துவதா இல்லை பெருமை படுவதா என்று எனக்கு தெரியவில்லை.

அலுவலகத்தை விட்டு வெளியே சென்றால் சிங்கிள் டீ கூட கிடைக்காது அதிகாலை என்பதாலும், எனது கைபேசியை மழையில் இருந்து காக்க ஒரு பிளாஸ்டிக் பை தேவை பட்ட காரணத்தாலும், வேறு வழியின்றி அலுவலகத்தின் உள் இருக்கும் சரவண பவனை நோக்கி நடந்தேன். அங்கு கவுன்டரில் சுகமாய்த் தூங்கிக்கொண்டிருந்தவனை எழுப்பி விசாரித்தால் 'தோசை மட்டும் தான் இருக்கு,சாம்பார் இல்ல' என்று சிவந்த கண்களால் கணினித் திரையை பார்த்துக்கொண்டேமேலும் சிவந்தான். வேறு வழியின்றி அந்த தோசையையும், பிளாஸ்டிக் கவருக்காக ஒரு உருளை சிப்ஸும் வாங்கினேன். இவர்கள் கொடுக்கும் தோசையின் மகத்துவம் என்னவென்றால், கல்லில் இருந்து எடுக்கபடும் அந்த பேப்பர் போன்ற தோசை தட்டை அடையும் முன், சூடான கல்லில் இருந்து எடுத்ததற்கான எந்தத் தடையமும் இன்றி நொடியில் ஆறி இருக்கும் என்பது தான். 

கைபேசியை பிளாஸ்டிக் பையில் போட்டுக்கொண்டு, நான் நனைந்தாலும் பரவாயில்லை, வீடு சென்று படுக்கையில் எந்தச் சலனனும் இன்றி உறங்க வேண்டும் என்ற எண்ணத்துடன் பயணத்தை தொடங்கினேன். கன மழை என்பதால் வண்டி ஓட்டக் கடினமாக இருந்தாலும், அந்நேரத்தில் மிக சொற்ப வாகனங்களே OMR சாலையில் சென்றுகொண்டிருந்ததால், முன்னெச்சரிக்கையுடன் இன்டிகேட்டர் போட்டுக்கொண்டு சாலை ஓரமாகவே சென்றுகொண்டிருந்தேன். மழைத்துளிகள் எனது ஹெல்மெட் கண்ணாடியில் பட்டு சாலையை மறைத்தால், கண்ணாடியை மேல் தூக்கி விட்டு இன்னும் மெதுவாக வாகனத்தை செலுத்தினேன். மழை தனது உச்சகட்டத்தை எட்டி இருந்தது. மழை நீர் துளிகள், ஊசி குத்துவதுபோல் எனது முகத்தை துளைத்துக் கொண்டிருந்தன. 

சாலையிலும் நீர் வரத்து சற்று அதிகரித்து இருந்தது. 'இது போன்ற சமயங்களில் டயர் நனைந்து போவதால் , பிரேக் பிடிக்கும் பொழுது வண்டி வழுக்கி ஏதேனும் அசம்பாவிதங்கள் நடப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம். அதனால் மிகவும் மெதுவாக சென்றால் தான் வண்டியை நமது கட்டுபாட்டில் வைத்திருக்க முடியும்' என்று எனக்கு வண்டி ஓட்ட சொல்லிக் கொடுத்த தந்தையின் குரல் எனக்குள் பிரதிபலித்துக் கொண்டிருந்த சமயம் நான் புனித ஜோசப் பொறியியல் கல்லூரியை கடந்து சத்யபாமா பல்கலைக் கழகத்தின் அருகில் சென்று கொண்டிருந்தேன். அப்பொழுது திடீரென ஒருவர் நான் வருவதை கவனிக்காமல் சாலையை தனது சைக்கிளில் கடக்க முயல்கிறார் என்பதை நான் கவனித்துவிட்டேன். ஹாரனை அடித்து அவரை எச்சரித்து கொண்டே எனது வண்டியின் பின் பிரேக்கை அழுத்தினேன்.

பிரேக் பிடித்தும் அவரது சைக்கிள் நிற்காததால், சற்று பயந்து போன அந்த சைக்கிள்காரர், தனது காலை சாலையில் ஊன்றி அவரது சைக்கிளை நிறுத்தும் சமயம், அவரது முன் சக்கரம் எனது வண்டியின் முன் சக்கரத்தை மிகவும் லேசாக முத்தமிட்டது. இவரும் நிம்மதி பெரு மூச்சு விட, அவர் என்னைப் பார்த்து புன்னகைத்த அடுத்த நொடி அவரும் அவர் சைக்கிளும் வானில் பறக்க, அவரை அடித்த டெம்போ எந்தக் கவலையும் இன்றி அசுர வேகத்தில் மறைந்தது. அந்த அதிர்ச்சியில் இருந்த நான் மீள்வதற்குள் மழை நின்று விட்டது. எனது வண்டியை நிறுத்திவிட்டு அவரை நோக்கி நான் ஓட, சிதறு தேங்காய் போல அவரது சைக்கிள் சிதறிக்கிடந்தது. அவர் அதைத் தாண்டி சாலை ஓரத்தில் இருந்த மணலில் விழுந்து நினைவின்றி கிடந்தார். அவரது காலில் இருந்து ரத்தம், குழாயில் இருந்து வரும் நீர் போல ஓடி மழை நீருடன் கலந்து கொண்டிருந்தது. நல்ல வேளையாக அவர் உடலில் உயிர் இருந்தது. இல்லை இருந்தும் இல்லாமல் இருந்தது. 

எனது பான்ட் பாக்கெட்டைத் தடவினேன் அதில் கைக்குட்டை இல்லை என்பதை அறிந்தவுடன் எனது வண்டியை நோக்கி ஓடினேன். மழையில் நனைந்து ஈரமாயிருந்த வண்டி துடைக்கும் துணியை சாலையில் தேங்கி இருந்த நீரில் அலசி விட்டு அவரது வலது முட்டிக்கு கீழே இறுக்கி கட்டினேன். ஆம்புலன்சை அழைக்க எனது கைபேசியில் உயிர் இல்லை, அந்த இடத்தில மனித நடமாட்டமும் இல்லை. அவரிடம் கைபேசி உள்ளதா என்று தேடத் தொடங்கிய பொழுது அவரது சட்டையில் இருந்த அடையாள அட்டை இருந்தது. அவர் பெயர் கோபால் என்றும் அவர் ஒரு அரசாங்க துப்புரவு தொழிலாளி என்பதையும் வாசித்த சமயம் அவரது சைக்கிளுக்கு அருகில் கைபேசியும் சிதறுகாயாக உடைந்திருப்பதைக் கண்டேன். அந்த சிம்கார்டை மட்டும் எனது பைக்குள் போட்டுக் கொண்டு, சாலையின் மத்தியில் வாகனம் ஏதேனும் வர காத்திருந்தேன்.

சுமார் பத்து நிமிடம் கழித்து சாலையின் எதிர் புறத்தில் வந்த வாகனத்தை ஓடிச் சென்று நிறுத்தி, அதன் ஓட்டுனரிடம் உடனே ஆம்புலன்சை அழைக்கச் சொன்னேன். எப்பொழுதும் சோழிங்கநல்லூர் காவல் நிலையத்தின் அருகில் ஒரு அரசு ஆம்புலன்ஸ் இருப்பதை கவனித்ததுண்டு. ஐந்தாவது நிமிடத்தில் ஆம்புலன்ஸ் வந்து அவரை ஏற்றிச் செல்ல, அவரை அப்படியே விட மனமின்றி, நானும் எனது வண்டியில் அவர்களை பின் தொடர்ந்தேன். சென்னையின் மையப் பகுதியில் இருக்கும் ஒரு முக்கிய அரசு மருத்துவமனையில் கோபாலுக்கு அவசர முதலுதவி சிகிச்சை தொடங்கும் பொழுது மணி 4:15. அவரது வீட்டிற்கு தகவல் சொல்லலாம் என்று அவரது அடையாள அட்டையை எடுத்து மீண்டும் பார்த்தேன் அதில் அவரது கைபேசி எண் மட்டும் தான் இருந்தது.

ஒரு காவல் துறை அதிகாரி (கான்ஸ்டபில்) என்னை விசாரிக்க, நான் நடந்ததை சொல்லி முடித்த பிறகு 'நம்பர் நோட் பண்ணிங்களா' என்று கேட்க, நான் 'இல்லை' என்று தலையாட்ட, பின் எனது முகவரி மற்றும் கைபேசி எண்ணைக் குறித்துக் கொண்டார். அவரிடம் அந்த அடையாள அட்டையைக் கொடுத்தவுடன், அவர் அந்த விலாசத்திற்கு ஆள் அனுப்பி தகவல் சொல்வதாக கூறினார்.

இதற்குள் அந்த மருத்துவர் என்னிடம் வந்து 'அவருக்கு வேண்டிய முதலுதவி கொடுத்தாச்சு, பெரிய ஆபத்து ஒன்னும் இல்லை. ஆனால் அவர் காலில் அடி பலமாக இருக்கு. அறுவை சிகிச்சை செய்யணும். இங்கு அதற்கான வசதி இல்லை. நீங்க ஒரு நல்ல தனியார் ஹாஸ்பிடலுக்கு கொண்டுபோயிடுங்க' என்று கூறினார். 'இதற்கு மேல் அவரது குடும்பம் பார்த்துக் கொள்ளட்டும் நான் போய் என் பொழப்பை பார்க்கின்றேன் ' என்று நான் சொல்ல முற்பட்டாலும் எனது மனிதாபிமானம் என்னைத் தடுத்து விட்டது.

உலகில் கஷ்டத்தில் இருக்கும் அனைவரையும் என்னால் காத்து உதவ முடியாத ஒரு சுய நல வாழ்க்கை வாழும் எனக்கு, என் கண் முன் வேதனையில் இருக்கும் ஒருவருக்கு உதவுவதிலாவது ஒரு அல்ப சந்தோஷம் கிடைக்கும் என்று நம்பினேன். அவரை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல நான் முற்பட, அதை தடுக்க முயன்ற அந்த காவல் துறை அதிகாரிக்கு என்னிடம் இருந்த ஒற்றை ஐநூறு ரூபாய்த் தாளை அவர் கையில் வைத்து, நான் செல்லும் தனியார் மருத்துவமனைக்கு கோபாலின் குடும்பத்தை அனுப்ப சொல்லி விட்டு ஆம்புலன்சுடன் சென்றேன். அந்தத் தனியார் மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் அவரை அழைத்துச் செல்ல, அங்கு வரவேற்பில் இருந்த பெண்ணிடம் எனது கைபேசிக்கு உயிர் ஊட்ட அவள் உதவியை நாடினேன்.

அவளிடம் எனது கைபேசிக்கு பொருந்தும் சார்ஜர் இருக்க, அளவான புன்னைகையுடன் எனது கைபேசியை வாங்கி அவள் இடத்தில இருந்த பிளக் பாயிண்டில் சார்ஜரை சொருகினாள். நான் அங்கிருந்து திரும்பியவுடன் அந்த மருத்துவர் 'அவருக்கு பிளோ ணீ அம்புயுடேஷன்(below knee amputation) பண்ணனும். அவரு வீட்டுக்கு தகவல் சொல்லி சீக்கரம் வரச் சொல்லுங்க. பார்ட்டி தௌசந்(forty thousand) கட்டணும்' என்று அவர் நிதானமாக சொல்லி முடிபதற்குள், வரவேற்பில் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. அங்கு சென்றால் அந்தப் பெண் ஒருவரை கை காட்டி அவர் கோபாலை தேடி வந்ததாக சொன்னாள். இம்முறையும் அதே அளவில் புன்னகை.

உயரம் சற்று கம்மியாக, தலை முடி நரைக்கத் தொடங்கிய நிலையில் இருந்த அந்த ஆசாமி என்னிடம் வந்து 'நான் ராமசாமி. கோபாலோட தோஸ்து. அவனோட பக்கத்துக்கு ஊடு தான். என்ன ஆச்சு?' என்று கேட்டார். சத்யபாமா முதல் இந்த தனியார் மருத்துவமனை வரை முழு கதையையும் சொன்னேன். சற்றே கலங்கிய ராமசாமி சுவரின் ஓரம் வரிசையாக இருந்த இருக்கைகளின் ஒன்றில் தலையில் கை வைத்துக்கொண்டு அமர்ந்தார். அவரது அருகில் சென்று அமர்ந்து 'அவர் வீட்ல இருந்து யாரும் வரலையா?' என்று கேட்டேன்.

'அவன் சின்ன வயசுலையே அவங்க அப்பா அம்மா செத்துட்டாங்க. என் ஆத்தாதான் அவனையும் வளர்த்துச்சு. அவனுக்கு இருக்குறது அவங்க அப்பா விட்டுட்டு போன ஒரு குடிசையும் அப்பறம் அவன் அடம் பிடுச்சு கட்டிக்கின இந்தப் பொண்ணும் தான்' என்று அவர் சொல்லியவுடன் நான் அந்தப் பெண்ணை பார்த்தேன். என்ன நடக்கின்றது என்பது கூடத் தெரியாமல் ஏதோ ஒரு உலகில், என்னவோ, யாரிடமோ பேசிகொண்டிருந்தாள். அவளது முந்தானை விலகி இருப்பதை சரி செய்ய வேண்டிய அவசியத்தை அவள் கைகளுக்கு உணர்த்த முடியாத நிலையில் அவள் மூளை இருப்பதை நான் உணர்ந்த பொழுது, 'கோபால் யு ஆர் கிரேட்' என்று என்னுள் சொல்லிக்கொண்டேன். ராமசாமி 'இந்தப் பொண்ணு மூணு மாசம் முழுவாம வேற இருக்கு. இனி இந்த மூணு உசுர அந்த கருப்பன் தான் காப்பாத்தணும்' என்றார்.

அவர்களுக்கு அது மிகவும் பெரிய தொகை என்பதையும், கருப்பன் வந்து காப்பாத்துவதற்குள் அவர் நிலை மோசமாகி விடும் என்பதையும் நான் உணர்ந்தேன். அவர்களை அங்கேயே இருக்க சொல்லிவிட்டு, வரவேற்பை நோக்கிச் சென்று, எனது கைபேசியை அந்தப் பெண்ணிடம் கேட்டேன். அவளுடைய சிரிப்பின் அளவே உயிர் பெற்றிருந்த எனது கைபேசியை நீட்டினாள். கைபேசியை ஆன் செய்த பொழுது மணி 07:30. அன்று மாதத்தின் கடைசி நாள் என்பதை அப்பொழுது தான் உணர்ந்தேன். தனியார் மென்பொருள் நிறுவனங்களில் பெரும்பாலும் ஒவ்வொரு மாதமும் கடைசி நாள் சம்பளம் வந்துவிடும். எனக்கும் அம்மாத சம்பளம் வந்தவுடன், வங்கி இருப்பு 37 ஆயிரம் ரூபாய் என்று குறுந்தகவல் வந்திருந்தது. நீங்கள் என்ன நினைகின்றீர்களோ அதே தான் நானும் செய்தேன். உடனே சென்று 35 ஆயிரம் ரூபாயை செலுத்தி, சிகிச்சையை தொடங்கச் சொல்லிவிட்டு, என் நண்பனுக்கு அழைத்து 10 ஆயிரம் ரூபாய் கொண்டு வரச் சொன்னேன். 

ஒரு மணி நேரத்திற்குள் காசுடன் வந்த என் நண்பன், நடந்ததை அறிந்தவுடன் 'அதுதான் ஹாஸ்பிடல்ல சேர்த்துட்ட இல்ல. மூடிட்டு வீட்டுக்கு வர வேண்டியது தான. பேர் தெரியாத யாருக்கோ இப்படி காச தூக்கி கொடுக்கற. உனக்கு அறிவே இல்லயா' என்று என்னை திட்டத் தொடங்கினான். அவனை பொருட்படுத்தாமல் ஐந்தாயிரத்தை செலுத்திவிட்டு, மீதம் இருந்த ஐந்தாயிரத்தை ராமசாமியிடம் 'மருந்துச் செலவுக்கு இத வச்சிக்கோங்க. அவர பார்த்துக்கோங்க. நான் அப்பறம் வர்றேன்' என்றவுடன், ராமசாமியின் கண்ணில் நீர் தானாக ஒழுகத் தொடங்கியது, கைகூப்பி எனக்கு நன்றி சொன்னார். ஒரு உயிரை காப்பாத்திய பெருமையுடன் அன்று பகல் முழுவதும் நிம்மதியாக உறங்கினேன்.

மூன்று நாட்கள் கழித்து கோபாலை சந்திக்க அந்த மருத்துவமனைக்குச் சென்றேன். ஒற்றை காலை இழந்து சுய நினைவுடன் இருந்த கோபால், 'உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியலைங்க. நான் பூட்ருந்தா என் சரோஜா என்ன ஆயிருக்கும். கலைனர் காப்பீட்டு திட்டத்துல இருந்த காசு வந்ததும் உங்களுக்கு கொடுத்துர்றேன்' என்றார். 'காசு பற்றி கவலை வேண்டாம், உடலை பார்த்துக் கொள்ளுங்கள்' என்று அவருக்கு ஆதரவு சொல்லி வீடு திரும்பினேன். ஒரு மாத சம்பளம் முழுவதையும் இழந்ததால் அந்த மாசத்தை ஓட்டுவது மிகவும் கடினமாக இருந்தது. வீட்டு வாடகையை நண்பர்கள் பார்த்துக்கொண்ட பொழுதும், அந்த மாதத்தின் பல நாட்கள் இரண்டு வேளை மட்டுமே உண்ணும் நிலைக்கு தள்ளப்பட்டேன்.

இரண்டு வாரம் கழித்து அவரை பார்க்கச் சென்ற பொழுது, கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தில் இருந்து வந்த இருபது ஆயிரம் ரூபாயை, நான் மறுத்தும், கட்டாயப் படுத்தி என்னிடம் கொடுத்தார். மீதி பணத்தை மூன்று மாதத்தில் திரும்பத் தருவதாக அவர் சொன்னதை நான் பெரிதும் பொருட்படுத்தவில்லை. அதில் பத்தாயிரத்தை எனது நண்பனிடம் கொடுத்து விட்டு, மீதம் இருந்த பணத்தில் ஒரு வீல் chair உம், ஒரு பேசிக் மாடல் நோக்கியா போனும் வாங்கினேன். அவரது சிம் கார்டை அதில் போட்டு அவரிடம் இரண்டையும் கொடுத்து விட்டேன்.

நான்கு மாதங்களுக்கு பிறகு அவரது ஓய்வுத் தொகையை வைத்து அவர் தொடங்கிய ஒரு சின்ன ரீசார்ஜ் கடையை திறக்கும் பொழுது என்னையும் அழைந்திருந்தார். என் வாழ்வில் நான் சந்தித்த பல மனிதர்களில், கோபாலைப்போல் தன்னபிக்கை உடையவர்களை நான் கண்டதில்லை. ஊனம் என்பது உடலில் இல்லை ஒருவரின் மனதில் தான் இருக்கின்றது என்பதை எனக்கு புரியவைத்தவர் கோபால். ஒன்பதாவது மாதம் ஒரு அழகான ஆண்பிள்ளையை அவர் மனைவி ஈன்றெடுத்தாள். அந்தக் குழந்தையைக் கண்ட அந்த கணமே 'அவனின் செலவுகளுக்கு நான் பொறுப்பெடுத்துக் கொண்டு அவனுக்கு நல்ல கல்வி வழங்க வேண்டும்' என்ற முடிவுக்கு வந்தேன். இதை கோபாலிடம் கூறியபொழுது அவர் உடன்படவில்லை, தன் மகனைத் தன்னால் ஆளாக்க முடியும் என்பதில் உறுதியாக இருந்தார். ராமசாமி எனக்கு துணையாக அவர் மனதை மாற்ற உதவினார். என்னிடமிருந்த ஒரே ஒரு கோரிக்கையை கோபாலிடம் கூறினேன். 'இவன் வளர்ந்து எனக்கு ஒன்றும் செய்யத் தேவையில்லை, ஆனா இவன் ஏதேனும் ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்த்தாலே எனக்குப் போதும்' என்று நான் உறுதியாக கூற கோபால் உடன்பட்டார். 

05-May-2049 

அதை முழுவதும் படித்து முடித்து, புல்லரித்து இருந்த ஈகாவின் காது அருகில் சென்று சிவா 'அந்தப் பையன் நான் தான்' என்று சொல்லியவுடன், அவள் கண்களில் இருந்து பெருகிய நீர் கன்னத்தின் வழியாக வடிந்து அவள் கையையும் தாய்மையையும் நனைத்தது.

Wednesday, March 12, 2014

ஒரு மார்கழியில் கொலை (சிறுகதை)

மார்கழி 1

அம்பத்தூர் காவல் நிலையத்தில் அபசுரமாக ஒலித்த தொலைபேசியின் சுப்ரபாதம், சப்-இன்ஸ்பெக்டர் சுப்பாராவின் தூக்கத்தை கலைக்க, களைப்பு நீங்காத அலுப்பில் மெல்ல தன் தலையை சுற்றி இருந்த சால்வையை விளக்க்கி பதில் கூறுவதற்கு முன் 'உனக்கேன் சிரமம்' என்பது போல நின்றுவிட்டது.'இனி தூக்கம் வந்த மாதிரிதான்'எள்ற முனங்களுடன் கழிவறையை நோக்கி சுப்பாராவ் நடக்கத் தொடங்கியபோது, தொலைபேசி மீண்டும் தன் கானக்குரலில் கதறத் தொடங்கியது. அந்த தொலைபேசியை எடுத்த வேகத்தில் ஏதோ ஒரு விலாசத்தை அவசரமாக குறித்து,அதே அவசரத்துடன் பெஞ்சில் தூங்கிக்கொண்டிருந்த ஹெட்கான்ஸ்டபிள் கண்ணனை தட்டி எழுப்பினார் சுப்பாராவ். ஒரு நிமிடம் கூட தாமதியாமல் தன் சுந்தரம் அய்யாங்கார் காலத்து டிவிஎஸ் பிப்டியை மிதித்து சம்பவ இடத்திற்கு கிளம்பிய போது மணி ஆறு, மார்கழி ஒன்று.

எவரேனும் போர்வையை உருவினால் கெட்ட வார்த்தையால் திட்டிவிட்டு திரும்ப போர்த்திக் கொண்டு தூங்கும் அளவு குளிர் நிலவும் அந்தக் காலை வேளையில் கைபேசி நம் தூக்கத்தை கலைத்தால் எவ்வளவு ஆத்திரம் வரும். ஆனால் ராகவனால் கோபப் பட முடியவில்லை, அவனை அழைத்தது அவன் காதலி பிரியா என்பதால். அவள் கூறிய விலாசத்தைக் குறித்துக் கொண்டு கதிரவன் தன் தூக்கத்தை தொடர நினைக்கும் காலை வேளையில் தன் இரு சக்கர வாகனத்தில் சீறிப் பாய்ந்தான். வாகன ஓட்டத்தில் ஒரு வாரத்திற்கு முன் தன் காதலியுடன் நடந்த சந்திப்பை மனதில் அசைப்போட்டன்.

காந்திப் பூங்காவில் ராகவனுக்காக காத்திருந்த பிரியா, அவனைக் கண்டவுடன் 'எப்பவும் பசங்கதான் வெயிட் பண்ணுவாங்க. இங்க எல்லாமே தல கீழ நடக்குது' என்று சலித்துக் கொண்டாள்.

ராகவன் அவள் கையை பிடித்து, அவளை தன் மார்பினுள் அணைத்து, போப் ஆண்டவர் முத்தம் ஒன்று அவள் உள்ளங்கையில் கொடுத்து அவள் சினத்தை குறைத்துவிட்டு, 'அப்பா என்ன சொன்னார்?' என்று கேட்டான்.

'அப்பா ஒ.கே. சொல்லிடாரு' என்று சொல்லி 1000 வோல்ட் பல்ப் போல் பிரகாசித்த பிரியாவின் முகம், திடீர் மின் வெட்டு வந்தது போல் 'அதுல ஒரு கண்டிஷன் இருக்கு' என்று அணைந்தது.

'அப்பா நீ கொஞ்சம் பிரபலம் ஆகணும்னு நினைக்கராறு' என்று சொல்லி அவள் தயங்க, 'என்ன மேடம் சிட்டில நான்தான் நம்பர் ஒன் மாட்ரிமோனியல் டீடெக்டிவ்னு உங்க அப்பா கிட்ட சொல்லலியா?' என்று சினுங்கினான்.

'சொன்னேன். ஆனா அப்பாவுக்கு அது பிடிக்கல. தனிமனித வாழ்கைய நீ ரகசியமா நோட்டம் விட்டு தகவல் சேகரிக்கறது ஒழுக்கம் இல்லைன்னு அவர் நினைக்கிறார்.', அவன் எதோ சொல்ல வர, அவனை தடுத்து விட்டு பிரியா தொடர்ந்தாள், 'அவர் கிட்ட நான் சண்டை போட்டேன். கடைசியா அவர் கொஞ்சம் எறங்கி வந்தாரு. ஒரே ஒரு கேஸ்லயாவது நீ வெளிப்படையா துப்பு துலக்கி பிரபலம் ஆகிட்டா நம்ம கல்யாணத்தை அவரே செய்து வைக்கரன்னு சொல்லி இருக்காரு. எனக்காக இது கூட செய்யமாட்டியா ராகவ்?' என்று மனதை வசீகரிக்கும் தோனியில் அவனை கெஞ்சினாள்.

'இதுதான் எறங்கி வர்ரதா' என்று தன்னுள் நினைத்துக் கொண்டான். முடியாது என்று சொல்லி வெடிக்கும் ரணகளத்தை விட அந்த ரத்த களமே மேல் என்று முடிவு செய்து 'உனக்காக கண்டிப்பா செய்றேன் என்று' ராகவன் சொல்லி முடிப்பதற்குள் பிரியா அவனை கட்டி அணைத்து கன்னத்தில் முத்தமிட்டாள்.

பழனியப்பா நகரில் இருந்த ஒன்பதாம் நம்பர் வீட்டின் வாசலுக்கு சுப்பாராவ், கண்ணனுடன் வந்து சேர்ந்தார்.வீட்டின் வாசலில் கூடியிருந்த அக்கம் பக்கத்துக்கு வீட்டார், போலீஸ் வருவதைக் கண்டு விளகினர். 'யாரும்மா போன் பண்ணது' என்று சுப்பாராவ் கேட்க, 'நான்தாங்க. இந்த வீட்டு வேலைக்காரி காலை நாலு மணியில இருந்து  கதவ தட்டினேன். யாரும் தொறக்கல. போன் பண்ணா உள்ளயே  அடிக்கற சத்தம் கேட்குது.அதுதான் சந்தேகத்துல உங்களுக்கு போன் பண்ணேன்' என்று கூறினாள்.

'கண்ணா போய் கதவ ஓட' என்று சுப்பாராவ் ஆணையிட, கண்ணனன் தன் வாலிப வலிமைகளையும் கடப்பாரையும் கொண்டு கதவை உடைப்பதை கூடியிருந்த அனைவருடனும் சேர்ந்து ராகவன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்.

யாரையும் உள்ளே அனுமதிக்காமல் இருக்கும் படி கண்ணனை வாசலில் காவல் நிறுத்திவிட்டு சுப்பாராவ் உள்ளே சென்றார். அவர் சென்ற பதினைத்து நிமிடங்களில் போலீஸ் வாகனமும், மருத்துவ ஊர்தியும் வந்ததையும், அடுத்த இருபது நிமிடங்களில் வீட்டினுள்  இருந்து இரு உடல்கள் கொண்டு வரப்பட்டதையும் ராகவன் பார்த்துக்கொண்டிருந்தான்.

அந்த உடல்களின் பின் வெளியே வந்த சுப்பாராவ், 'மிஸ்டர் ராகவன் இங்க  என்ன பண்றீங்க?' என்று ஆச்சரியத்துடன் கேட்டார்.

'இந்தப் பக்கம் ஒரு வேலையா வந்தேன் கூட்டத்தைப் பார்த்து அப்படியே நின்னுட்டேன்' என்று சமாளித்தான்.

'மாட்ரிமோனியல்ல இருந்து கிரைம்கு மாறியாச்சா?' என்று ஏளனம் செய்தார்.

'அது எல்லாம் ஒரு கட்டாயக் கதை, அப்பறம் விவரமா சொல்றேன். என்ன கேஸ் சார்?' என்று ராகவன் கேட்க 'வாங்க டீ சாப்டுடே பேசலாம்' என்று கடையை நோக்கி அழைத்துச் சென்றார்.

டீக்கடையில் சுப்பாராவ் கொடுத்த தகவல்களை ராகவன் தன் கைபேசியில் குறித்துக்கொண்டான்.

  • வீட்டுக் கதவுகள் மற்றும் ஜன்னல்கள் உள் பக்கமாக பூட்டி இருந்தன.
  • கணவன் மனைவி இருவரும் படுக்கையில் இறந்து கிடந்தனர்.
  • பணம் மற்றும் நகைகள் திருடு போன தடயங்கள் எதுவும் இல்லை.
  • அவர்கள் உடலில் வெட்டுக்காயங்கள் இருப்பதாகத் தெரியாவில்லை, உடல்கள் பிரேதப் பரிசோதனை செய்த பின்பு தான் இறந்ததன் காரணம் தெரியும்.
  • கடைசியாக நேற்று மாலை ஆறு மணிக்கு அவர்களை உயிருடன் கண்டது அந்து வீட்டு வேலைக்காரி.
  • அக்கம் பக்கம் விசாரித்ததில் அன்பாக வாழ்ந்த இளம் தம்பதியர் எனத் தெரிகின்றது.
  • இருவர் தவிர்த்து அந்த வீட்டிற்கு வேறு யாரும் வந்தது கிடையாது என்று அந்த வேலைக்காரி உறுதியாக சொல்கிறாள்.

மார்கழி 2

'என்ன ராகவன் ஸ்டேஷன்கு வந்திருக்கிங்க. அந்தக் கணவன் மனைவி கேஸ்ஆ' என்று காவல் நிலையத்தினுள் நுழைந்த ராகவனை பார்த்துக் கேட்க, அவன் 'ஆம்' என்று தலையாட்ட, மேலும் தொடர்ந்தார் 'அந்த கேஸ்ல எங்களுக்கே வேலை இல்லைன்னு ஆயிடுச்சு. போஸ்ட் மார்டம் ரிப்போர்ட் புட் பாய்சன்னு வந்திருக்கு. நீங்க ஏன் இன்னமும் அதுல ஆர்வமா இருக்கீங்க? ' என்று சுப்பாராவ் கேட்க, 'என் உள் மனசு எதோ தப்பு நடந்திருக்குன்னு சொல்லுது' என்றான் ராகவன்.

'போய் உங்க பொழப்ப பாருங்க ராகவன், உங்க காதலை வாழவைக்க வேற கேஸ் ஏதாவது வந்தா நானே சொல்லி அனுப்புறேன்.' என்று அவனை திட்டி அனுப்பினார்.

மார்கழி 6

சில நாட்கள் கடந்து சென்றாலும், ராகவனின் மனம் சமாதானம் அடையவில்லை. எங்கோ தப்பு நடந்திருக்கிறது என்று அவன் மனது அவனை மீண்டும் மீண்டும் நினைவு படுத்திக்கொண்டிருந்தது. 'அந்த வீட்டிற்க்குச் சென்று ஏதேனும் தடயங்கள் கிடைக்கிறதா என்று பார்க்கலாம்' என்று முடிவு செய்தான்.

அன்று இரவு யாருக்கும் தெரியாமல் ராகவன் அந்த வீட்டிற்குள் திருட்டுத்தனமாக பின் வாசல் பால்கனி  வழியே நுழைந்தான். மரணம் நடந்த அந்த வீட்டில் ஒரு இடுகாட்டின் அமைதி நிலவியது. ஒவ்வொரு அறையாக ஏதேனும் தகவல் கிடைக்குமா என்று தடயங்களைத் தேடத் தொடங்கினான். முதலில் சமையல் அறையின் குப்பைத் தொட்டியை ஆராய்ந்தான், அதில் ஒரு வெள்ளை பிளாஸ்டிக் பையில் இரண்டு காளான் துண்டுகள் கிருமிகள் சூழ கருநிறத்தில் இருந்தன. 'ஒரு குடும்பத்தை நீயா கொன்றாய். நிச்சயம் இருக்காது' என்று அந்த காளானுடன் பேசுகையில் பிரிட்ஜின் அருகில் ஒரு அறை மட்டும் பூட்டி இருந்ததைக் கண்டான்.

அங்கு இருந்த சுத்தியை வைத்து அந்த அறைக்  கதவை உடைத்து உள்ளே நுழைந்தான். பல நாள் துவைக்கப்படாத ஒரு காலணியில் இருந்து வருவது போன்ற வாசனை அந்த அறை எங்கும் பரவி இருந்தது. ஜன்னல் ஏதும் இல்லை, சூரிய ஒளி  வர எந்த ஒரு துவாரமும் இல்லை. அந்த அறையினுள் இருந்த சவுண்ட் ப்ரூப் டோர், ப்ரொஜெக்டர், டிஸ்கோ லைட்ஸ்  அவனுள் பல கேள்விகளை எழுப்பியது. இருவர் மட்டும் வாழும் வீட்டில் இவை எதற்கு?

குளியல் அறையில் தான் அவனுக்கு சில தடயங்கள் கிடைக்கத் தொடங்கின. அதுவரை அந்தக் கொலையின் மேல் இருந்த அவனது பார்வை திரும்பத் தொடங்கியது. அந்த தடயம் கிடைத்த பின், புதிய தெளிவான கோணத்தில் வீட்டை மீண்டும் அலசத் தொடங்கினான். சில தடயங்கள் சிக்கின. கதவை உடைத்தது வீண் போகவில்லை என்று தன்னுள் நினைத்துக் கொண்டு பால்கனி கிரில் கதவை தான் கொண்டுவந்த பூட்டால் பூட்டி விட்டு வெளியே வந்தான்.

மார்கழி 7

பிரியாவுக்கு அழைத்து, 'தாலி கட்ட கழுத்த  தயாரா வைச்சிக்கோ. இந்த கேஸ்ல பெரிய தடையம் கிடைத்திருக்கு. இந்த கொலைய  வெளிச்சத்திற்கு கொண்டுவந்துட்டு உன்ன மீட் பண்றேன்' என்று மகிழ்ச்சியுடன் கூறினான்.

மார்கழி 28

காந்திப் பூங்காவில் பிரியா வர ராகவன் காத்திருந்தான். ராகவனைக் கண்டவுடன் பிரியா ஆர்வத்துடன் 'ஹை. கேஸ் என்ன ஆச்சு?'  என்று உற்சாகத்துடன் கேட்டாள்.

'இந்த கேஸ் வேண்டாம், வேற கேஸ் கிடைக்கும்' என்று சோகத்துடன் கூறினான்.

சினங்கொண்ட பிரியா, சூடனா எண்ணையில் போட்ட கடுகு போல் வெடிக்கத் தொடங்கினாள். உண்மையை மெல்லவும் முடியாமல் முழுங்கவும் முடியாமல், முள்ளின் மேல் நிற்பது போல் ராகவன் தவித்தான். பிரியா அவளது ஆத்திரம் தீர வெடித்தவுடன்,அவள் பிரம்மாயுதத்தை பயன்படுத்த துவங்கினாள். அணை உடைத்துக்கொண்டு கண்ணீர் கடல் பெருக, ராகவன் தன் மனப் பூட்டை உடைத்தான்.

மார்கழி 6

அன்று இரவு அந்த வீட்டை முதலில் அடைந்த பொழுது நானும் காவல் துறையின் கண்ணோட்டத்தில் தான் அலசினேன். ஒரு மர்ம அறையைத் தவிர வேறு ஒரு பெரியத் தடயமும் கிடைக்க வில்லை. சிறுநீர் கழிக்க கழிவறைக்கு சென்ற பொழுது, அங்கு இருந்த ஒரு துவாரத்தில் விஸ்பர் மற்றும் ஸ்டேப்ரீ கவர்கள் இருப்பதைக்கண்டேன். என் மூளையில் ஒரு கேள்வி தோன்றியது. ஆம் இந்த வீட்டில் இன்னொரு பெண் இருந்திருக்க சாத்தியங்கள் இருக்கு என்று, ஆடைகளை அலசத் தொடங்கினேன். சில ஆடைகளின் அளவுகள் வேறு பட்டிருந்தன. துணி அலமாரியின் அடுக்குகளின் மேல் போடப் பட்டிருந்த செய்தித்தாளின் அடியில் ஒரு கன்னிகாஸ்த்ரியின் புகைப்படம் கிடைத்தது.

மார்கழி 9

தேர்தல் ஆணையத்தில் பணி புரியும் என் நண்பன் ஒருவன் உதவியுடன், வாக்காளர் அடையாள அட்டை தகவல் கிடங்கிலிருந்து அந்த கன்னிகாஸ்த்ரியின்  விவரங்கள் கிடைத்தது. அவரைத் தேடி வேலூர் சென்றேன். அவர் இருந்த அந்த அனாதை இல்லத்தில் அவரைச் சந்தித்தேன்.

'நான் உங்களோட உதவி நாடி இங்க வந்திருக்கேன். நீங்க உண்மையை மட்டும் பேசுவிங்க என்ற நம்பிக்கையில்' என்றேன்.

'என்ன உதவி வேணும் சொல்லுங்க. அந்த ஏசுவின் கிருபையால் என்னால் முடிந்ததை செய்றேன்' என்றார் அந்த கன்னிகாஸ்த்ரி.

'சமீபத்தில் உங்கள சந்திக்க, உங்களுக்கு தெரிந்த பெண் யாராவது உங்களைத் தேடி வந்தாங்களா?' என்று கேட்டு அவர் பதிலை எதிர் பார்த்து காத்திருந்தேன்.  அவர் முகத்தில் ஒரு வித குழப்பம் தோன்றி மறைந்தது.

சந்தர்ப்பத்தை பயன்படுத்தி 'நான் போலீஸ் இல்ல, நான் ஒரு பிரைவேட் டீடெக்டிவ். அவங்களுக்கு உதவி பண்ணத்தான் இங்க வந்திருக்கேன்' என்று ஒரு பொய் சொன்னேன்.

'அந்தப் பெண் செய்த கொலைக்கு பாவ மன்னிப்பு வாங்கி அவ கர்த்தர் கிட்ட தன் பாவத்தை இறக்கி வைச்சுட்டா. அவள பத்தி நீங்க அவ கிட்டயே கேட்டுக்கோங்க' என்று என்னை அந்தப் பெண் தங்கியிருக்கும் விடுதிக்கு அழைத்துச் சென்றார். செல்லும் வழியில் அவளது கதையையும் சொன்னார்.

சிறு வயதில் தாய் தந்தையரை இழந்து, இந்த இல்லத்திலேயே வளர்ந்து வந்த பைரவி, ஏசுவின் உதவியால் கலைக்கல்லூரியில் படித்து பட்டப்படிப்பு படித்து திருச்சபையிலேயே சில பணிகளை செய்து வந்திருக்கிறாள். ஏழு மாதங்களுக்கு முன்பு காமேஸ்வரன் என்ற ஒரு வாலிபன் தாமாக இவளை மனம் முடிக்க முன்வந்து, இவளை திருமணம் செய்துகொண்டு சென்னை அழைத்துச் சென்றான் என்றும், அதன் பின் இப்பொழுதுதான் அவளை இந்த நிலையில் கண்டதாகவும் அவர் சொல்லி வருத்தப்பட்டார்.      
       
ஒரு சாயம் போன வெந்தைய நிற சல்வாரில் வந்த பைரவி, அழகான உடலமைப்பு கொண்டிருந்தாலும், சரியான தூக்கமின்றி கண்களுக்கு கீழ் கரு வளையத்துடன் பொலிவிழந்து காணப்பட்டாள். அவளிடம் ''எனக்கு ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் பதில் தெரியலை. ஏன் இப்படி செய்திங்க?" என்று கேட்டேன்.

புன்முறுவலுடன் பைரவி, "வாழத் தகுதியற்றவர்கள் அவர்கள்" என்று அந்நியன் விக்ரம் போல கூறித் தன் கதையை கூறினாள்.

அனாதை இல்லத்தில் இருந்து திருமணம் செய்துகொண்டு அன்று இரவு அவளை சென்னை அழைத்துக்கொண்டு வந்திருக்கிறான். சென்னை வந்த பின் அவனுக்கு ஏற்கனவே திருமணமாகி அந்த வீட்டில் அவன் மனைவி இருப்பது அவளுக்கு தெரிந்தவுடன், அவனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பைரவியை அந்த ஜன்னல் இல்லாத மர்ம அறையில் தள்ளி பூட்டி விட்டான். சவுண்ட் ப்ரூப் என்பதால் அவள் கூச்சல் வெளியே கேட்பதில்லை. பகல் முழுவதும் அவள் அறையினுள்ளே பூட்டி வைக்கப் பட்டிருந்தாள்.

அன்று இரவு அவளுக்கு உணவு கொடுத்து, பின் அவளை கட்டாயப்படுத்தி, இருவருடன் உடலுறவு கொண்டிருக்கான் அந்த காமேஸ்வரன். சில நாட்கள் இதுவே வழக்கமாக இருந்து வந்திருக்கிறது. சில வாரங்களுக்கு பிறகு ஒரு நாள் இரவு, அவளை தன் முதல் மனைவியோடு ஓரினச்சேர்க்கைல ஈடுபட கட்டாயப்படுத்தி இருக்கான். பைரவி அதற்கு மறுத்தவுடன், அவளை பெண் என்றுகூட பாராமல் தன் ஆத்திரம் அடங்கும் வரை, பாக்சிங் பையை அடிப்பது போல் அவள் வயிற்றை அடித்திருக்கிறான் அந்தக் காமக்கொடூரன். ஒரு கட்டத்தில் சித்தரவதை தாங்க முடியாமல் அவர்களின் ஆசைக்கு இயந்திரம் போல இணங்கியிருக்காள் பைரவி. தினமும் பைரவி முதல் மனைவியுடன் உடலுறவு கொள்ளும் பொழுது, அதைக் கண்டு அந்தக் காமக்கொடூரன் சுயயின்பம் கொள்வது வழக்கமாயிற்று.  

'பாஸ்டர்ட்ஸ்' என்று பிரியா முணுமுணுத்தது ராகவன் காதில் விழாதது போல் அவன் மேலும் தொடர்ந்தான்.

இப்படி ஒரு கொத்தடிமையாக அவள் வாழக்கை செல்ல, ஒரு நாள் இரவு கழிவரையில் இருக்கும் பொழுது அவர்கள் பேசுவதை ஒட்டுக்கேட்டாள்.

'காமா எனக்கு இவ ரொம்ப போர் அடிச்சு போயிட்டா.' என்று அவன் முதல் மனைவி சொல்ல 'இன்னும் ரெண்டு வாரம் தான். கோவைல இருக்கற ஒரு ஆஷ்ரமத்துல ஒரு பெண் பார்த்திருக்கேன். இவ சாப்பாட்டுல வழக்கம் போல அர்செனிக் கலக்க வேண்டியதுதான்' என்று அவர்கள் பேசிக்கொண்டது இவளை திடுக்கிட செய்தது. தன்னைப் போல் பல பெண்களுக்கு இந்த கொடுமை நிகழ்ந்துள்ளதா என்று நொறுங்கிப்போனாள். இனி யாருக்கும் இந்த நிலை வரக்கூடாது என்று தன்னுள் முடிவு செய்தாள்.

அன்று இரவு அந்த அர்செனிக் இருக்கும் ஜாடியை கண்டுபிடித்து, அவர்கள் சற்று அசந்த நேரத்தில் அவர்கள் உணவில் கலந்து விட்டாள். அவர்கள் உறக்கத்தில் இறந்தது போல் ஏற்பாடு செய்துவிட்டு, பால்கனி கிரில் கதவு வழியே இரண்டாவது சாவி கொண்டு வெளியே வந்து, பின் உள் பக்கமாக பூட்டி விட்டு, அந்த அனாதை இல்லத்திற்கே மீண்டும் திரும்பி விட்டதாக சொல்லி முடித்துவிட்டு, 'நீங்க இத போலீஸ் கிட்ட சொன்னாலும் எனக்கு கவல இல்ல. பல முகம் தெரியாத பெண்கள காப்பாத்தன சந்தோஷத்திலேயே நான் தூக்குல தொங்கத் தயார். ஒரு தடவ மதர பார்த்து அவங்க மடியில எல்லாம் சொல்லி அழனம்னு தான் இங்கே வந்தேன்' என்று அவள் முடிக்கும் பொழுது அவள் கண்ணில் நீர் ததும்பியது.

'நீங்க செய்தது சட்டப்படி குற்றமா இருக்கலாம். ஆனா தர்மப்படி அது தப்பு இல்ல. நான் தர்மத்தின் பக்கம். உங்க ரகசியம் என்னோட மறையும்' என்று நான் சொல்லியவுடன், எனக்கு நன்றி சொல்லி மேலும் ஒரு உதவி கேட்டாள்.          

மார்கழி 28 

ஆச்சரியத்தில் இருந்த பிரியா,  "அது எப்படி சாப்பாட்டுல அர்செனிக் கலந்தா, சாப்படும் பொழுது தெரியும் இல்ல? அப்பறம் போஸ்ட் மார்டம் ரிப்போர்ட்ல எப்படி மிஸ் ஆச்சு" என்று ராகவனை விசாரித்தாள்.

"பிரெஞ்சு மனனர் நெப்போலியன் சாவுல இருக்கறதா சந்தேகபட்படர அர்செனிக், இந்தக் கொலையிளையும் சம்மந்தப்பட்டு இருக்குறது வினோதம்தான்.  அர்செனிக் ஒரு பழங்கால விஷம்.அர்செனிக்கோட பியுட்டியே அதுக்கு வாசனை, நிறம், சுவை எதுவுமே கிடையாது தான். நீர்ல, இல்ல சாப்பாட்டுல கலந்தா கண்டே பிடிக்க முடியாது. அதோட விஷம் கொடுக்கற எபக்ட் எல்லாமே புட் பாய்சன் போலத்தான் இருக்கும். அதனால சாப்புட்ரவங்களுக்கும் தெரியாது,பிரேதப்பரிசோதனையிலும் தெரியாது" என்று பெருமையுடன் கூறி, 'இதையெல்லாம் நீ போய் போலிஸ்ல சொல்ல மாட்டதன?" என்று சந்தேகத்துடன் கேட்டான்.

"நீ என்னப் புரிந்துக்கொண்டது அவளதானா.நானே அவங்கள கொன்னிருப்பேன். இந்த பைரவி ரொம்ப பாவம். நம்ம கல்யாணத்துக்கு வேற கேஸ் கிடக்கும்" என்று அவன் தோள் மீது சாய்ந்தவள் சட்டென்று எழுந்து 'அவ என்ன உதவி கேட்டா சொல்லவே இல்லையே?' என்று வினவினாள்.

"எல்லாத்தையும் நானே சொல்லிட்டா என்ன சஸ்பென்ஸ் இருக்கும். நாளை காலை தினசரில செய்தி வரும் " என்று  சொல்லி, தன் கடிகாரத்தைப் பார்த்து விட்டு, " ரெண்டு புது மாட்ரிமோனியல் ப்ரோபைல் வந்திருக்கு நான் கிளம்பறேன்" என்று கேள்விகளுடன் இருந்த பிரியாவின் கன்னத்தில் முத்தமிட்டு ராகவன் புறப்பட்டான்.                              
   
மார்கழி 29

காலையில் எழுந்தவுடன் தன் தந்தை கையில் இருந்த தினசரியை பிடுங்கி, பக்கங்களை ஆராயத் தொடங்கினாள். மூன்றாவது பக்கத்தில்:

சமீபத்தில் கணவன் மனைவி புட் பாய்சனால் இறந்து கிடந்த வீடு நேற்று இரவு திடீரென காஸ் சிலின்டர் வெடித்து தீ பிடித்தது. அந்தப் பகுதி மக்கள் அமானுஷ்ய பயத்தில்....

Monday, August 19, 2013

குள்ளன் (சிறுகதை)

*********************************************************************************************************
முக்கிய அறிவிப்பு
*********************************************************************************************************
என் தளத்தில் வெளி வரும் கதைகளில் 'நான்' என்று ஒருமையில் எழுதுவதனால் என்னை இந்தக் கதைகளுடன் ஒப்பிட வேண்டாம் என்று அன்புடன் வேண்டிக்கொள்கிறேன். என் சொந்தக் கதையேனும் லேபெளில் 'அனுபவம்' என்று குறிப்பிடுவேன். 
*********************************************************************************************************

என் பெயர் ராஜா, நானே இதை சொன்னால் தான் உண்டு, என்னை சுற்றி இருப்பவர்கள் என்னை அழைக்கும் பெயர் 'குள்ளன்'. சில சமயங்களில் என்னை அறிமுகம் செய்யும் பொழுது 'ஹாய். மை நேம் ஸ் கு...' என்று நா நுனி வரை என் பட்டப் பெயர் வந்து விடும். தாய் தந்தையிடம் இருந்து வந்த ஜீன்கள் விளையாட்டில் என் உயரம் ஐந்து அடிக்கு இரண்டு சென்டி மீட்டர் குறைய 'குள்ளன்' என்ற பட்டம் என்னுடன் ஒட்டிக் கொண்டது. இதுவரை இரண்டு பள்ளிகள், கல்லூரி என்று மாறினாலும், என்னுடைய பட்டப் பெயர் மட்டும் என்றும் மாறியதே இல்லை. 

பள்ளியில் நன்றாகவே படித்தேன், இருப்பினும் கலைக் கல்லூரி சென்று என் வாழ்க்கை பாதை மாறி, படிப்பு என்பது அறவே இன்றி, மது, மது, அரியர், மற்றும் மது என்றே இரண்டரை ஆண்டுகள் சென்று விட்டன. இறுதி செமஸ்டர் செல்லும் பொழுது எனக்கு அரியர் மட்டும் பதினான்கு பேப்பர்கள். என்ன மாயம் என்று தெரியவில்லை அரியர் உள்பட எல்லா பாடத்திலும் தேர்ச்சிபெற்று, கல்லூரியின் சாதனைப் பட்டியலில் என் பெயரை பதியச் செய்தேன். 

மது பற்றி சொன்னேனே, 'மாது இல்லையா?' என்று நீங்கள் கேட்கணும், நம்ம கதையே என் வாழ்வில் நான் தேடிச் சென்ற ஒரு மாது பற்றி தான். என் தந்தைக்கு ஜாதகத்தின் மேல் நம்பிக்கை அதிகம், நான் பிறந்தவுடன் என் தாய் இறக்கவே, ஒரு ஜோசியனிடம் என் ஜாதகத்துடன் செல்ல, அவனோ ஒரு பெண்ணால் தான் என் வாழ்வில் மிகப் பெரிய சம்பவம் நிகழும் என்று கூறியுள்ளான். ஆதலால் நான் படித்த இரண்டு பள்ளிகளுமே ஆண்கள் அரசு பள்ளி. விபரம் தெரியாத சிறு வயது, நானும் என் அப்பா சொன்னது போல் பெண்களிடம் பேசாமலே இருந்து விட்டேன். மீசை முடி எட்டிப் பார்க்க, பெண்பால் மேல் ஒரு ஈர்ப்பு தோன்றியது. கல்லூரியிலாவது பெண்களுடன் படிப்பேன் என்று நினைத்த எனக்கு ஏமாற்றமே, அப்பாவின் கட்டாயத்தில் மீண்டும் ஒரு ஆண்கள் கலைக் கல்லூரி. 

எனக்கு நெருங்கிய நண்பர்கள் என்று யாரும் கிடையாது, என் விடுதி ஓரறைத்தோழன் ரவி மட்டும் கொஞ்சம் நெருக்கும். அவன் எனக்கு பெண்கள் என்றால் ஒரு காமப் பொருள் போலவே போதித்தான். அவன் இரண்டாம் ஆண்டில் மடிக் கணினி வாங்கி சில கவர்ச்சி புகைப் படங்கள் என துவங்கி, பின் நாளில் நீலப் படங்கள் வரை சென்று விட்டோம். ரவி எனக்கு நேர் எதிரானவன், பள்ளியில் அவன் பெண்களிடம் செய்த அட்டகாசம் தாங்க முடியாமல் தான் ஆண்கள் கல்லூரியில் அவனை சேர்த்துள்ளனர். அவன் சொல்லிய கதைகளில் இருந்து, அவன் பெண்களை இனிப்பு பேச்சால் எளிதில் கவர்ந்து, அவர்களை எந்த ஒரு எல்லைக்கும் கொண்டு செல்லும் மாயக்காரன் என்பது தெரிந்தது. என்ன செய்தாலும் இவனுக்கு அரியர் விழுந்ததே கிடையாது, எப்பொழுதும் ஆல் பாஸ் செய்து விடுவான்.

எனக்கு அரியர் வைத்த வரலாறு இருந்ததால், முன்னணி நிறுவனங்கள் என்னை நிராகரித்து விட்டன. ரவி அந்த நிறுவனங்களுக்கு விண்ணப்பிக்கவே இல்லை, அவன் எண்ணம் என்ன என்று யாருக்கும் தெரியவில்லை. எனக்கு எப்படியோ ஒரு BPO நிறுவனத்தில் வேலை கிட்டியது. மறுநாள் ரவியும் அதே நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தான், ஆச்சரியத்தில் இருந்த என்னிடம் 'நண்பன்டா' என்று சினிமா வசனம் எல்லாம் கூறினாலும், அவன் செயலில் எதோ உள் நோக்கம் இருப்பதை உணர முடிந்தது. 

பயிற்சியின் பொழுது எங்கள் ட்ரைனர், என்னைப் பெண்களிடம் பேச வைக்க எவ்வளோவோ முயற்சி செய்தும் அவருக்கு தோல்வி தான். பெண்கள் அருகில் சென்றாலே இதயம் துடிக்கும் சத்தம் என் காதில் கேட்கும், உள்ளங்கை வேர்க்கும், வாயில் வார்த்தை வராது. எனக்குள் இருக்கும் இந்த இனம் புரியாத உணர்வு, இதுவரை பெண்கள் வாடையே இல்லாத எனக்கு புதிதாகத் தான் இருந்தது. 

பயிற்சி முடிந்து பிரிக்கப் பட்ட பத்து பேர் கொண்ட எங்கள் அணியில், ரவியும் இருந்தான். இந்த அணியில் நான், ரவி மற்றும் திலீப் என்று மற்றொருவனை தவிர்த்து மீதம் அனைவருமே பெண்கள். ரவி ஆனந்தத்தில் பறந்தான், எனக்கோ தலை சுற்றியது. தினமும் ஒன்பது மணி நேரம் இப்படித்தான் வேலை செய்ய வேண்டுமா? . நாள் போக்கில் என்னால் பெண்களிடம் இயல்பாக பேச முடியாது என்று அனைவரும் ஒரு முடிவுக்கு வந்து விட்டனர். என்னுடைய வேலை தொடர்பான கேள்விகள், மற்றும் என்னிடம் வரவேண்டிய வேலை அனைத்திற்கும் ரவியே தூது. இதனால் எங்கள் அணியில் இருக்கும் ஏழு பெண்களிடமும் ரவிக்கு செல்வாக்கு கூடி இருந்தது. 

ஓர் காலை வேளையில் என் கணினிக்கு அருகில் வந்து, 'டேய் குள்ளா. நீ இப்படியே பொண்ணுங்க கிட்ட பேசாம இருந்த, உன் லைப்ல கல்யாணம் எல்லாம் நடந்தா என்ன பண்ணுவ?' என்றான் ரவி.

'அது எல்லாம் அப்ப பார்துக்களாம். மொதல்ல லைப்ல செட்டில் ஆகணும்' என்றேன் நான். 

'நீ வெயிட் பண்ணிட்டே இருந்தா, பின்னாடி ஒரு பொண்ணும் சிக்காது. இப்பவே புடிச்சா தான் உண்டு. நம்ம கூட தான் ஏழு பேர் இருக்காங்களே அதுல ஒருத்திய ஏன் நீ கரெக்ட் பண்ணக் கூடாது' என்று என்னிடம் கேட்டுக் கொண்டே பக்கத்து அணியில் இருந்த ராமாவிடம் கண்களால் பேசினான். 

'எனக்கு இவங்க மேல இண்டரெஸ்ட் இல்ல. ஆனா பக்கத்து டீம்ல ஆனந்தி இருக்காலே அவ மேல எனக்கு ஒரு இஷ்டம். ஆனா அவ ரொம்ப அடக்கமான பொண்ணு, அவ கிட்ட கூட யாரையும் நெருங்க விட மாட்டேன்கிரா. கல்யாணம் பண்ணா அவள மாதிரி ஒருத்திய கல்யாணம் பண்ணனும்' என்று நான் சொல்லி முடிக்கும் பொழுது அவன் முகத்தில் ஒரு நையாண்டித் தனமான சிரிப்பு தோன்றி மறைந்தது, அந்த சிரிப்பின் அர்த்தம் எனக்கு ஒரு வாரம் கழித்தே புரிந்தது. 

அடுத்த திங்கட் கிழமை அன்று நானும் ரவியும் என் அலுவலகத்தின் ஏழாவது மாடியில் இருக்கும் உணவகத்திற்கு, டீ குடிக்க மின் தூக்கியில் சென்றோம். கதவு திறந்து நாங்கள் வெளியே வரும் போது, அங்கு மின் தூக்கி வர கதவின் அருகே காத்திருந்த ஆனந்தி, ரவியை ஓரக் கண்ணால் உதட்டோரம் வெட்கத்துடன் பார்த்து, மின் தூக்கி உள்ளே சென்று நாணி நகைத்தாள்.

நான் ரவியின் முதுகில் தட்டி 'டேய் ரவி.. என்னடா விஷயம், ஆனந்தி உன்ன பார்த்து வழியரா?' என்று கேட்டேன்.

ரவி தன் மஞ்சள் நிற பற்கள் தெரிய புன்னகைத்து, 'நேத்து ஆனந்தியோட சினிமா போய் இருந்தேன், அங்க பையர் ஆயிடுச்சி அதுதான்' என்று கூறினான்.

ஆச்சரியத்துடன் 'என்னடா சொல்ற, ஆனந்தி நெருப்புனு இல்ல நெனச்சேன்?' என்று சூடான டீயை ஊதிக் கொண்டே கேட்டேன்.

எனது இடது தோள் பட்டையின் மீது அவனது வலது கையை போட்டு 'உஷார் பண்ண ஒரு திறம வேணும் மச்சி. எல்லாப் பொண்ணுங்களுக்கு உள்ளேயும் ஆசை இருக்கும், நம்ம போய் குறிப்பா கேட்கணும். வெளிப்படையா கேட்கறவங்க தான் அடி வாங்கறது. ஓடாது படத்துக்கு கூப்டுட்டு போனேன், அங்க இருந்ததே மொத்தம் நாலு பேரு. அதுவும் ஜோடிங்கதான். கடைசி சீட்ல நாங்க உட்கார்ந்து, நான் என் கைய அவ ...' என்பதற்குள் 'போதும் மேல சொல்லாத' என்று நிறுத்தினேன்.

'இதோ பாருடா, நீ பொண்ணுங்களோட பழகனும்னா மொதல்ல உனக்கு இந்த கூச்சம் போகணும், அதுக்கு ஒரே வழி, அதுதான். இப்ப நான் ஒரு sms அனுப்பறேன் பாரு, அந்த வீட்டுக்கு ஒரு ரெண்டாயிரம் ரூபா எடுத்துக் கொண்டு போ, எல்லாம் தெளிஞ்சிடும்' என்று அவன் சொல்லி முடிபப்தற்குள் அந்த குறுந்தகவல் என் கைபேசிக்கு வந்தது.

'அதுக்கு எல்லாம் வேற ஆளப் பாரு' என்று நான் அவனிடம் சொல்லினாலும், என் கை விரல்கள் அந்த குறுந்தகவலை save செய்தன. 

'இப்படியே பெசிட்டு இரு, அந்த ஆனந்தி உன்ன அவ தம்பி மாதிரி இருக்கன்னு சொன்னா...ஹா...ஹா...ஹா...' என்று அவன் கேலி செய்தது, எனக்குள் இருக்கும் வெறியை தூண்டியது. 

அந்த இடத்தில ரவிக்கு கிடைத்த அனுபவம் பற்றி என்னிடம் முன்பே சொல்லி இருக்கிறான். 'இப்போதெல்லாம் சிகப்பு விளக்கு பகுதி என்று எதுவும் தனியாக கிடையாது, மக்களோடு மக்களாக யாருக்கும் சந்தேகம் வராத வண்ணம் தொழில் நடத்துவதே இவர்களின் நவீன யுக்தி. இந்தியா போன்ற சில நாடுகளில் மட்டும் தான் இது போன்ற தடையெல்லாம். பல வெளி நாடுகளில் இது சட்டப் படி சுத்தமாக நடக்கும் தொழில், அங்கு பணி புரியும் பெண்கள் மருத்துவ சான்றிதழுடனே வாடிக்கையாளர்களை படுக்கைக்கு அழைத்துச் செல்கின்றனர்' என்பதெல்லாம் ரவி பல முறை எனக்கு போதித்தது. 

நானும் என் கூச்சத்தை துறந்து, அந்த ஆனந்தியை சினிமாவுக்கு அழைத்துச் செல்ல அடுத்த மாத சம்பளம் வர காத்திருந்தேன். சம்பளம் வந்த நாள் மாலை, ரவிக்கு தெரியாமல், அலுவலகம் முடித்து நேராக அந்த விலாசத்தில் இருக்கும் வீட்டை தேடிச் சென்றேன். எங்கள் அலுவலகத்தில் இருந்து ஐந்தாவது பேருந்து நிறுத்திற்கு அருகில் இருக்கும் பெட்ரோல் பங்கை ஒட்டிய சாலையில் முதல் வலது சந்தில் அந்த வீடு இருந்தது. மூன்று மாடி கொண்ட அந்த குடியிருப்பில், நான் தேடி வந்த வீடு மொட்டை மாடியில் இருந்தது.

படி வழியே ஏறி மேலே சென்ற பொழுது மணி ஒன்பது. வீட்டின் வாசலில் மண் தொட்டிகளில் சில பூச் செடிகள் இருந்தன, கொடியில் ஆண், பெண் மற்றும் குழந்தைகள் துணி தொங்கிக் கொண்டிருந்தது. என்னை விட ஒரு அடி உயரம் இருப்பவர்கள் அந்த துணிகளை கலைத்து தான் வாசலுக்கு செல்ல வேண்டும், நானோ கொடிகளுக்கு அடியில் நடந்து வாசலை அடைந்தேன். சன் டீ.வி.யில் 'தென்றல்' சீரியல் ஓடும் சத்தம் கேட்டது, சற்று எக்கி அழைப்பு மணியை அடித்து, காத்திருந்தேன்.

கொலுசு ஒலி கதவை நோக்கி வர, கதவு திறந்து ஒரு பெண் முன்னே நின்றாள். என்னை உடனே உள்ளே வரச் சொன்ன அந்த பெண், நீல நிறத்தில் கருப்பு பார்டர் கொண்ட ஒரு வித ப்ளைன் புடவையுடன் கருப்பு ஜாக்கெட்டும் அணிந்து, அவள் இடுப்பு வரை நீண்ட கூந்தல் பஜாஜ் பேன் காற்றில் பறந்தது. என்னை விட கூடுதல் உயரத்துடன் இருந்தாள். அவள் மேல் ஒரு வித பர்பியும் வாசனை வீசியது. அவள் செய்திருக்கும் ஒப்பனை, அவள் வயதில் சுமார் ஐந்து ஆண்டுகள் குறைத்து, அவளை 27 வயதானவள் போல் காட்டியது.

என்னை ஏற இறங்க பார்த்துவிட்டு 'வித்தா வித்தவுட்டா?' என்று கேட்க, ஒன்றும் புரியாமல் நான் 'ழே' என முழிக்க, 'புதுசா' என்று சலிப்புடன் கூறி, படுக்கை அறையை காட்டி 'உள்ளே இரு ரெடி ஆயிட்டு வர்றேன்' என்று தன் கைபேசியுடன் குளியலறையை நோக்கிச் சென்றாள். 'தென்றல்' இறுதிக் காட்சி தொலைக்காட்சியில் ஓடிக்கொண்டிருக்க, நான் அவள் காட்டிய அறையினுள் சென்று மெத்தையில் அமர்ந்தேன்.

அந்த மெத்தை மேல் ஒரு வித வாடை வீச, முதன் முறை ஒரு பெண்ணுடன் தனிமையில் இருக்கப் போவதை எண்ணி, என் மனம் கனத்தது, உள்ளங்கை மற்றும் கால் பாதத்தில் உள்ள சுரபிகளில் நீர் தானாக கசிந்தது. தைரியமாக வந்து விட்டாலும், மனதினுள் ஒரு சலனம், 'நோய் ஏதேனும் வந்து விட்டால்?', அந்த நொடியில் தான் என் மனதில் ஆணி அடித்தது போல் உரைத்தது, 'ராஜா நீ அதை வாங்க மறந்துவிட்டாயே' என்று. அவள் குளியலில் நீர் விழும் சத்தம் அந்த அறை வரை கேட்க, 'எப்படியும் அவள் வைத்திருப்பாள்' என்று மனம் சமாதானமானது. 

நீர் விழும் சத்தம் நின்று அவள் கால் கொலுசு என் அறையை நெருங்கும் சத்தம் கேட்க, நான் வாசலையே நோக்கி காத்திருந்தேன். குளித்த ஈரம் வடியாமல், நீளமான ஒரு துண்டை தன் உடலின் மேல் போற்றிய படி வந்தாள். ஊட்டமாக வளர்ந்த புஷ்டியான அவள் உடல் அமைப்பு என்னை ஈர்க்க, அவள் கூந்தலில் இருந்து நீர் தரையில் சொட்ட, என் அருகில் வந்து, என் வயிறு மெத்தையில் படும் படி என்னை படுக்க வைத்து, என் மேல் ஏறி அமர்ந்தவள், என் இரு கைகளையும் பின் நோக்கி இழுத்து கட்டினாள்.

'என்ன செய்கிறாய்?' என்று நான் கேட்பதற்குள், என் கழுத்தில் இருந்த தங்க சங்கிலி அவள் வசம் சென்றது, என் வெள்ளி மோதிரம் விரலில் இல்லாததை உணர்ந்தேன். என் பான்ட் பாக்கெட்டில் இருக்கும் என் வாலெட் வேகமாக உருவப் பட்டது. என்னால் அவளை தள்ளி விட்டு எழுந்தரிக்க முடியவில்லை, என்னை விட அவள் எடை கூட இருப்பாள் போல். ஒரு தடியன் என் முன்னே தோன்றி 'பின் நம்பர்' சொல்லு என்றான், நான் மெளனமாக இருக்க என் கழுத்தில் அவன் கத்தியால் 'l' என்று எழுதினான். ரத்தம் கசிய, வலித்தது. வேறு வழி இன்றி பின் நம்பரை சொல்லி விட, அவன் என் கைகளை கட்டிலோடு கட்டிவிட்டு வெளியே சென்றான்.

தன் கூந்தலை ட்ரையரில் காய வைத்துக் கொண்டே அந்தப் பெண் 'தம்மாத் தூண்டு இருந்துகுனு உனக்கு இந்த சரோசா கேக்குதா குள்ளா' என்று என் வயிற்றில் அவள் காலால் உதைத்தாள். அந்த தடியன் பணத்துடன் வந்து 'ஒன்பது ஆயிரம் தான் தெரிச்சு' என்று அவளிடம் சொன்னான். என் ஒரு மாத சம்பளம் போச்சு.

'அவன் டிரெஸ்ஸ கழுட்டிட்டு, அவன தொரத்திடு' என்று நைட்டியை பனியன் போல் கழுத்து வழி அணிந்து கொண்டே ஆணையிட்டாள் எட்டாக் கனி சரோசா.

'இந்த சின்ன பான்ட வச்சி நம்ம என்ன செய்றது?' என்று ஏளனம் செய்தான் அந்த தடியன்.

'உன் வண்டி தொடைக்க வச்சிக்கோ' என்று புகையிலை கறை அவள் பற்களில் தெரிய சிரித்து 'இவனுக்கு என் துண்டு போதும்' என்று அந்த ஈரத் துண்டை என் மேல் எறிந்தாள். 

அவளை ஒன்றும் செய்ய முடியாத என் இயலாமையை எண்ணி வருந்தினேன். கட்டை அவிழ்த்தவுடன், என் மேல் அந்த துண்டை கட்டிக் கொண்டு, விரைந்து ஓடி அந்த தெரு முனையில் இருக்கும் ரயில் நிலையத்திற்கு வந்து நின்று மூச்சு இறைத்தேன். அடுத்த ரயில் வர காத்திருந்தவர்கள் அனைவரின் பார்வையும் என் மேல் பாய்ந்தது. இப்படியே வீடு சென்றால், ரவி கேட்கும் கேள்விகளுக்கு என்ன பதில் சொல்வது? இந்நிலையில் உண்மையைத் தவிர வேறு என்ன சொல்ல முடியும். இந்த விஷயம் திலீப்புக்கு தெரிந்தால் அலுவலகம் முழுக்க பரவி விடும். ஐயோ! என் ஒரு மாத சம்பள பணத்தை இழந்தது கூட எனக்கு பெரிதாக தெரியவில்லை, காசுக்காக தன் உடம்பை விற்பவள் கூட என்னை 'குள்ளன்' என்று கேலி செய்து, மேலாடை இன்றி என்னை துண்டுடன் தெருவில் நாய் போல் ஓட விட்டாளே. மானம் போன பின், உயிர் வாழ்வது எதற்கு என்று என் மனசாட்சி என்னைக் கேள்வி கேட்கையில், ரயில் வரும் ஓசை கேட்டது. 

                             மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார
 உயிர்நீப்பர் மானம் வரின்.

Thursday, July 11, 2013

மாத விலக்கு ( 21+ சிறுகதை )

******************************************முன்னறிவிப்பு :******************************************
இக்கதையில் வரும் சம்பவங்கள், வயது வரம்புக்கு உட்பட்டது என்பதால், இருபத்து ஒன்று வயதை கடந்த, பக்குவப்பட்ட மனம் கொண்டவர்கள் மட்டும் மேலே படிக்க தொடரவும்.    
******************************************************************************************************


திரையில் சில வெள்ளையர்கள் பேசிக்கொண்டிருக்க, அதை சில இந்தியர்கள் உற்று நோக்க, அதில் ஒருவனின் கைபேசி 'கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு' என்று பாடத் தொடங்க சட்டென்று அதன் வாயை மூடினான். ஒருவர் அவனைக் கண்டு மொறைக்க, இவன் சற்று தலை தாழ்த்தினான், இவன் மேனேஜர் போல் தெரிந்தது. அந்த வெள்ளைக்கார அம்மணி தொடர்ந்து பேச, இவன் மட்டும் தன் கைபேசியில் எதையோ அடித்து கொண்டிருந்தான், வாங்க என்னவென்று நெருங்கி பார்க்கலாம்.அவன் அடையாள அட்டையில் மாதவன் என்று பெயர் அச்சிட்டு இருந்தது. நவீன சாம்சங் காலக்சி கைபேசி, அதில் குறுந்தகவல்கள் குவிந்துக்கொண்டிருந்தன.


'நான் ஒரு கான் கால்ல இருக்கேன். அப்பறம் பேசறேன்' என்றான் இவன். 

'இப்பவே பேசணும், தப்பு நடந்துடுச்சுன்னு தோணுது :( ' என்றாள் அவள். தேவி என்று பெயர் இருந்தது, அவளாகத்தான் இருக்க வேண்டும். 

'என்னன்னு msg பண்ணு' என்றான் இவன்.

'இன்னையோட நாற்பத்து அஞ்சாவது நாள், ரொம்ப தள்ளுது, பயமா இருக்கு :( ' என்றாள் அவள்.

'கவலைப் படாதே, அப்படியெல்லாம் ஒன்னும் ஆகி இருக்காது, நம்ம கவனமாத்தான் இருந்தோம்' என்றான் இவன். 

'இல்ல நான் googleல search பண்ணினேன். ரப்பர்ல சில சமயம் ஓட்ட இருக்குமாம், ஒரு சொட்டு போதுமாம். அப்படி ஆயிருந்தா என்ன செய்றது?' என்றாள் அவள். 

'அப்படியெல்லாம் ஒன்னும் நடக்காது, நான் நைட் வீட்டுக்கு வந்துட்டு பேசுறேன்' என்றான் இவன்.

'ஹ்ம்ம்... :( ' 

மாதவன் சென்ற மாதம் நடந்ததை எண்ணினான், அந்த அம்மணி பேசுவது அவன் காதில் இப்பொழுது நுழையவில்லை. அவனுக்கு அந்த நாள் கூட நியாபகம் இருக்கிறது, எப்படி மறக்க முடியும். ஜூன் மாதம் பத்தாம் தேதி, அவன் காதலி தேவி அவன் கைபேசிக்கு விடியற்காலை ஐந்து மணிக்கு அழைத்தாள், முதல் அழைப்பை அவனால் எடுக்க முடியவில்லை, கண்கள் இருகின, இரண்டாவது அழைப்பில் மூளை விழித்தது, அவன் இரவு ஒரு மணி வரை அவளிடம் பேசி பின் தான் தூங்கச் சென்றான், இருப்பினும் அவள் அழைத்தது அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது.மூன்றாவது அழைப்பில் எடுத்து பேசினான், 'வீட்ல எல்லாரும் திருப்பதி போறாங்க, ராத்திரி தான் வருவாங்க, உடனே கிளம்பி வா' என்று செய்தி வாசிப்பது போல் வேகமாக சொல்லி முடித்தாள் தேவி.

அவன் நிதானிக்க கொஞ்சம் நேரம் ஆகியது, அவனுள் ஒரு எட்சை தோன்றியது, பல நாள் மனதில் கட்டிய கோட்டைக்குள் செல்ல சாவி கிடைத்து விட்டது, துயில் கலைந்து, விரைந்து புறப்பட்டான். மாதவனுக்கு திருமணதிற்கு முன் உடல் உறவு கொள்ள வேண்டும் என்பது, அவனுக்கு மீசை எட்டி பார்த்த போது தோன்றிய ஆசை.அவன் காசுகொடுத்து கிடைக்கும் உடல் உறவு பக்கம் இதுவரை சென்றதில்லை, நோய்கள் வந்துவிடுமோ என்ற அச்சத்தால். இன்று அவனுள் இருந்த காம பசி பூர்த்தி அடையும் நாள், வழியில் ஒரு இருபத்து நான்கு மணி நேர மருந்து கடையில் அதை வாங்கிக் கொண்டுதான் சென்றான். 

மாதவன்-தேவி பதினெட்டு மாதங்களாக காதலித்து கொண்டிருக்கும் இளம் ஜோடி, இதுவரை ஆள் இல்லா திரையரங்கில் சில நிமிட முத்தம் மட்டும் தான், ஆனால் இன்று இருவர் மட்டும், தனி வீட்டில், தனிமையில். நேர் எதிரே அமர்ந்து இருந்தாலும், அவள் தரையையே பார்த்துக்கொண்டிருந்தாள்,  இந்தத் தருணம் அவளால் அவனை பார்க்க முடியவில்லை, அவள் முகத்தில் ரத்த நாடிகள் வழக்கத்துக்கு மாறாக ரத்தம் கொண்டு சேர்க்க, அவள் முகம் சிவந்து இருந்தது. மாதவன் அவள் அருகில் சென்று, அவளை தொட்டு தூக்கி, அந்த அறைக்குள் அழைத்துச் சென்று கதவை சாத்தினான். அந்த முதல் பகலை பற்றி அவர்கள் பேசாத நாள் இல்லை. அடுத்த பத்து நாட்கள் இந்த இன்பம் சூழ்ந்தாலும், நாட்கள் செல்ல,தேவி தன் மாத விலக்கு தாமதமாக, இளமை வேகத்தில் அவள் செய்த செயலை எண்ணி கவலைக்கொண்டாள், மாதவனிடம் புலம்பி கொட்டினாள். 

வீடு திரும்பி மாதவன் எவ்வளவோ சமாதானம் சொல்லினாலும்,அதை ஏற்கும் நிலையில் தேவி இல்லை. 'ஓ' என்று அழத்தொடங்கினாள், என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தான் மாதவன். 'எந்த டாக்டரிடம் அழைத்துச் செல்வது? என்னன்னு சொல்றது? கருவ கலைக்கணுமா ?' என்று பல கேள்விகள் அவன் மூளையை கசக்கின. அவன் திருட்டுத் தனமாக வாலிப வயதில் பார்த்த ஆங்கிலப்படம் அவன் நினைவில் வர, திடீரென்று அவனுக்கு ஒரு யோசனை தோன்றியது. அவளுக்கு தைரியமாக சமாதானம் சொல்லினான், இன்று இரவு ஒரு முடிவு தெரிந்துவிடும் என்று கைபேசியை வைத்து விட்டு, அதே மருந்துக் கடைக்கு சென்றான். எதையோ விசாரித்து வாங்கினான். தேவியின் தெருவுக்கு சென்று, அவள் வீட்டு சுவரினுள் அந்த பார்சலை எறிந்துவிட்டு, அந்த தெருமுனைக்கு சென்று அவள் கைபேசிக்கு அழைப்பு விடுத்தான்.

'உங்க வீட்டு வாசல்ல ஒரு கவர் இருக்கு, அதுல ஒரு டெஸ்ட் கார்ட் இருக்கு, அத வச்சி urine டெஸ்ட் பண்ணா,கன்பார்ம் பண்ணிடலாம். அதுலயே instructions இருக்கும்' என்றான். அவளும் அதை எடுத்துக் கொண்டு தன்னை சோதிக்க சென்றாள், மாதவன் ஒரு சிகரெட்டை பத்தவைத்து அந்த தெரு முனையிலேயே நின்று, 'கன்பார்ம் ஆயிட்டா,கல்யாணம் எல்லாம் செய்ய முடியாது. யாரிடம் இந்த டாக்டர்களை பற்றி விசாரிப்பது? கண்ணனிடமா? இல்லை அவன் ஓட்டை வாய், ஊர் மொத்தம் பரப்பிடுவான். அக்காவிடம்? திட்டுவாள், இருந்தாலும் அவளிடம் சரணடைவதுதான் சிறப்பு' என்று தன்னுள் எண்ணி நான்கு சிகரெட்டுகளை ஊதித் தள்ளி விட்டான். 'அந்த டெஸ்ட் நெகடிவ்' என்று தேவி தகவல் சொல்லியவுடன், காற்றில் பறந்து, நடு ரோட்டில் நடனமாடி, எல்லையில்லா மகிழ்சிக்கொண்டான். அவனுக்கு தெரியவில்லை, அடுத்த காட்சி வரைதான் அவன் மகிழ்ச்சியென்று, பாவம். 

வீடு திரும்பி தன் கைபேசியை பார்த்தான், தேவியிடம் இருந்து வந்த குறுந்தகவல், அவனை பூமிக்கு இழுத்தது. 

'இருந்தாலும் எனக்கு ஏன் நாள் தள்ளுது, என் மனசுக்கு சரியாப் படல :(' , அதே சோகம் மீண்டும் சூழ்ந்தது. மாதவன் சோகப் படம் என்றாலே பர்க்கமாட்டன், அவன் வாழ்விலே சோகம் என்றவுடன் அவனுக்கு தேவி மேல் வெறுப்பு தான் வந்தது.  

'அதுதான் டெஸ்ட் நெகடிவ் ஆயிடுச்சு இல்ல, ஏன் கவல படற? இது வேற எதாவது பிரச்சனையா இருக்கும்' என்றான் சலிப்புடன். 

'இல்ல நான் googleல சர்ச் பண்ணேன், இந்த டெஸ்ட் கார்ட் எல்லாம் 100% சரியா கன்பார்ம் பண்ணாதாம்' என்றாள் கவலையுடன். 

'முதல்ல இந்த google searchஅ ஒழிக்கணும்' என்று தன்னுள் முணுமுணுத்தான் மாதவன். மீண்டும் அதே அழுகை ஓசை, இதற்கு ஒரு முடிவு கட்டவேண்டும் என்று தீர்மானித்த மாதவன், மறுநாள் காலை தன் அக்காவின் வீட்டிற்கு சென்றான்.அவன் மாமாவும், குழந்தையும் வெளியே சென்றவுடன் அவன் அக்காவிடம்,தன் சுருக்கு பையை அவிழ்த்தான். 

'என்ன காரியம் பண்ணிட்டடா மாதவா' என்று அவன் அக்கா தன் தலை மேல் கை வைத்தபடி கீழே அமர்ந்தாள், 'மொதல்ல நம்ம அப்பா இந்த காதல எத்துக்குவாரான்னு யோசிச்சியா? கொஞ்சம் கவனமா இருந்திருக்கணும். இப்படி அநியாயமா அந்த பொண்ணு வாழ்கையில விளையாடிட்ட, இது வெளிய தெரிஞ்சா ஊர் வாய மூடவே முடியாது.' என்று அவன் தலையில் ஓங்கி கொட்டினாள். 

'ஆஅ...'என்று தன் தலையை தேய்த்துக்கொண்டே 'உன் பிரண்டு  சீதா ஒரு gynecologist தன, அவ கிட்ட சொல்லி, கொஞ்சம் ராகிசியமா டெஸ்ட் பண்ண சொல்லேன்' என்று கெஞ்சினான். 

'சரி நான் அவ கிட்ட பேசறேன். அவ கன்பார்ம் பண்ணிட்டா என்னடா செய்யப் போற?' என்று கவலையுடன் அவள் கேட்க ' கருவ கலைக்கறது தான் ஒரே வழி' என்று உறுதியாக சொன்னான். 

அவன் அக்கா முகத்தில் ஒரு ஏமாற்றம் தெரிந்தது, 'அப்படியெல்லாம் செய்யாத, ஒரு கருவும் ஒரு உசிரு தான், உங்க தப்புக்கு அத ஏன் பலி ஆக்க போற. அந்த கருவ கலச்சா அந்த பொண்ணு உடம்பு எவளோ வலி தாங்கனும் தெரியுமா, நரக வேதனை. நம்ம அம்மா உனக்கு அப்பறம் ஒரு கரு உருவானப்ப, அப்பா பேச்ச கேட்டு அத கலைச்சி, இன்னைக்கு வரைக்கும் அம்மாவோட உடம்பு நார்மல் ஆகவே இல்ல. அந்த தப்ப நீயும் பண்ணிடாத. ஒழுங்கா அந்த பொண்ண கல்யாணம் பண்ணிக்கோ, என்னைக்கு இருந்தாலும் அவ தான் உன் பொண்டாட்டின்னு சொன்ன இல்ல, அத இன்னைக்கே செய்.....' என்று அவள் முடிக்கும் முன்,  'மொதல்ல சீதா கிட்ட பேசிட்டு சொல்லு, அப்பறம் இதெல்லாம் யோசிக்கலாம்' என்று கூறி அலுவலகம் புறப்பட்டான். 

மாதவன் குடும்பம்,குழந்தை என்ற சராசரி வாழ்க்கைக்குள் செல்ல விருப்பம் இல்லாதவன். அவன் கனவுகளே வேறு, அதிகம் சம்பாதித்து, உலகம் முழுவதும் சுற்ற வேண்டும்.செல்ல வேண்டிய இடங்கள் என்று ஒரு பெரிய பட்டியலே வைத்துள்ளான். எல்லா இடங்களுக்கும் சென்று, ஒரு முப்பது வயதில் தான் திருமணம் என்ற கொள்கையுடன் இருப்பவன். இன்று அவன் அவசரத்தில் நிதானம் இழந்தது அவன் வாழ்க்கைப் பாதையையே மாற்றி விடுமோ என்ற அச்சம் அவனை வாட்டியது. எல்லாம் தன் கையை மீறி செல்வது போன்ற ஒரு உணர்வு அவனுள் வந்தது, குடும்பத்துடன் எல்லா தொடர்பும் துண்டிக்க படும், யாரை சாட்சி போட அழைப்பது? எந்த இடத்தில வீடு பார்ப்பது? வீட்டுக்கு அட்வான்ஸ் கொடுக்க கூட காசு இல்லையே, என்ன செய்வது?  என் வருமானம் ஒரு குடும்பம் நடத்த போதுமா?என்று அவன் எண்ணங்கள் பல படங்கள் கிறுக்கத் தொடங்கின. 

அவன் அக்காவிடம் இருந்து அழைப்பு வந்தது, நாளை காலை பத்து மணிக்கு அவள் தோழி கீதா வருவதாக சம்மதித்து இருப்பதாக சொன்னாள். இவன் தேவியிடம் பேசி அவளை சமாதானப் படுத்தினாலும், அவன் அச்சம் அதிகமாகி, காதல் மாயையில் இருந்தவன் முதல் முறையாக குடும்பம், சமூகம் என்று சிந்திக்கத் தொடங்கினான், அவன் தந்தை அவனை வளர்க்க பட்ட கஷ்டங்கள் அவன் கண் முன் வந்தது, அவன் தந்தையிடம் அன்பு வெளிப்படையாக காட்டியது இல்லை, அவரும் அப்படித்தான், இருப்பினும் அவர்களது பந்தம் நெருக்கமானது. காதலுக்காக தன் தந்தையை பிரிய வேண்டுமா என்று அவன் மனம் கேள்வி எழுப்பும் சமயம் அவன் கண்ணில் தானாக நீர் கசிந்தது. 

அன்று காலை தேவியை தன் வண்டியில் அழைத்துச் சென்றான், இருவரும் எதுவும் பேசவில்லை, வழக்கம் போல் அவனை இறுக்கி கட்டிக்கொள்ளவும் இல்லை, அந்த இடைவெளி சொல்லியது அவர்களின் இன்னல்களை.அக்காவின் தோழியும் அவன் அக்காவும் நடையில் காப்பி அருந்திக் கொண்டிருந்தனர், இவர்கள் வந்தவுடன், அவன் அக்கா தேவிக்கு எதாவது வேண்டுமா என்று ஒரு பேச்சுக்கு கேட்க, அவள் வேண்டாம் என்று மறுக்க, டாக்டர் சீதா அவளை ஒரு அறைக்குள் அழைத்துச் சென்றாள். 

மாதவனின் உள்ளங்கை வியர்வையால் நனைந்து இருப்பதை அவன் அக்கா கவனித்தவுடன் அவன் வெளியே சென்று, தன் சிகரெட்டை பற்ற வைத்தான்.ஐந்தாவது சிகரெட் காற்றில் கலக்க, பொறுமையின்றி,அந்த அறைக்குள் சென்று விடலாம் என்று வீட்டின் உள்ளே சென்றான்.

அவன் அக்கா வேகமாக ஒரு துண்டுடன், அவள் பழைய சல்வார் ஒன்றை  மடித்து, அதனுள் எதோ வெள்ளையாக மறைத்து வைத்து, அந்த அறைக்குள் கொடுக்க, தேவியின் கை அதை வாங்க, அந்த அறை பூட்டப்பட்டது. மாதவன் குழப்பத்துடன் திரும்பியபோது டாக்டர் சீதா சோபாவில் அமர்ந்து இவனை பார்த்துக் கொண்டிருந்தாள், ஒரு கண்டிப்பான பார்வை அது. 

அவன் கைபேசி துடித்தது, தேவியிடம் இருந்து ஒரு குறுந்தகவல், 'I got my periods :) :) :) ' , அதைக் கண்டவுடன், பாளையில் நீரைக் கண்டவன் போல அவன் மனம் துள்ளியது, இருப்பினும் ஒரு குழப்பம். டாக்டர் சீதா அவனை முறைத்த படி 'இனிமேலாவது கன்ட்ரோலா இருடா. அவளுக்கு PCOSனு நினைக்கிறேன், ஒரு நாள் ஹாஸ்பிடல் போய் டெஸ்ட் எடுக்க சொல்லு' என்று சொல்லிச் சென்றாள்.

மாதவன் பின் வண்டியில், அவன் அக்காவின் பழைய சல்வார் அணிந்து புதுப் பொலிவுடன், அவனை கட்டி இறுக்கி  அமர்ந்த தேவி, 'PCOSனா என்னன்னு googleல சர்ச் பண்ணனும்' என்றாள், 'இந்த googleல கண்டுபிடிச்சது யாருடா?' என்று தன் பற்களை கடித்தான் மாதவன்.